‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்

rajesh-kumar-cpக்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ராஜேஷ்குமார் சரத்குமார் நடிக்கும் ‘சண்டமாருதம்’ படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இனி அவருடன் பேசுவோம்.

நாவலாசிரியர்களில் பாலகுமாரன், பட்டுக்கொட்டை பிரபாகர், சுபா எனப் பலரும் சினிமாவுக்கு வசனம் எழுத வந்து விட்டார்கள். நீங்கள் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம்..?

முதலில் ஒன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் என்றைக்கும் ஒரு எழுத்தாளன் என்பதில் பெருமைப் படுகிறேன். அப்படிப் பட்ட அடையாளத்தையே விரும்புகிறேன். அந்த இடத்தை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

நீங்கள் கூறிய எழுத்தாள நண்பர்கள் எல்லாரும் சென்னையிலேயே அதனால் அவர்களுக்கு திரையுலகத் தொடர்புகள் எளிதாக இருக்கலாம். நானும் சென்னையிலேயே இருந்திருந்தால் இந்த தொடர்புகள் எளிதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் நான் கோவையை விட்டு வர மாட்டேன். என்னால் sarath-kumar300சென்னை வர இயலாது. இதுதான் என் சூழல்.

இப்படிப்பட்ட சூழலில்எப்படி திரைக்கதை வசனம் எழுதுகிறீர்கள்.?

படத்தின் இயக்குநர்  ஏ.வெங்கடேஷ் என்மேல் அபிமானம் உள்ளவர். அவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். ஒன் லைன் ஒன்று கொடுத்து அதை உங்கள் பாணியில் விரிவுபடுத்தி திரைக்கதை அமையுங்கள் என்றார்.அமைத்த பிறகு விவாதம் நடந்தது. கலந்து கொண்டேன். அப்படி உருவானதுதான் இந்த திரைக்கதை. இதில் திரைக்கதையுடன் வசனமும் எழுதியுள்ளேன்.

‘சண்டமாருதம்’ என்ன கதை?

விஞ்ஞானம் விபரீதமாகிற கதை. இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறேன்.

அப்படியென்றால் வசனம் பேசப்படும்படி இருக்குமா?

நீங்கள் நினைக்கிறபடி வசனகர்த்தா வெளியே தெரியமாட்டார். கதைக்கும் காட்சிக்கும் தேவையானதை பாத்திரங்கள் பேசும்படியான அளவில் மட்டும் வசனம் இருக்கும். அவ்வளவுதான். திரைக்கதை அமைப்பில் எனக்கு திருப்தி இருந்தது.

படப்பிடிப்பு தளத்துக்குப் போனீர்களா?rajesh kumar-ml

இங்கே படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்த போது போனேன். சினிமா என்பது எவ்வளவு பெரிய கூட்டு முயற்சி என்று தெரிந்து கொண்டேன்.

அங்குதான் நடிகர் சரத்குமாரைச் சந்தித்தேன். கதை திரைக்கதை பற்றிப் பேசும்போது எழுத்தாளர் மதிக்கப்பட வேண்டும். இப்படைப்பு நன்றாக வர முழு சுதந்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். என் பணியில் அவருக்கு திருப்தி ,மகிழ்ச்சி. திரைக்கதை எழுதி முடிக்கப் பட்டாலும் வசனங்களில்   தேவைப்படும் போது திருத்தங்கள் கேட்டால் அவ்வப்போது எழுதி அனுப்புவேன்.

ஏற்கெனவே தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிய அனுபவம் பற்றி..?

என் கதைகளில் இதுவரை ‘இருட்டில் ஒரு வானம்பாடி’, ‘நீ எங்கே என் அன்பே’, ‘அஞ்சாதே அஞ்சு’ என மூன்று தொடர்கள் வந்து இருக்கின்றன. மூன்றுமே என் நாவல்கள்தான். அதை திரைக்கதை அமைத்து லேகா ரத்னகுமார் இயக்கியிருந்தார்.

எழுத்துவடிவம் காட்சி வடிவமாகிற போது ஏமாற்றம் வந்த துண்டா?

இதே கருத்து கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ வந்த போதும் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ வந்த போதும் அகிலனின் ‘பாவை விளக்கு’ வந்த போதும்இருக்கவே செய்தது.எழுதியது மாதிரி இல்லை என்றார்கள். படித்து ரசித்த வாசகர்கள் வெவ்வேறு வித கற்பனையில் இருந்திருப்பார்கள். எனவே அப்படி ஒரு ஏமாற்றம் தவிர்க்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை அந்த மூன்று தொடர்களும் எனக்கு திருப்தியான அனுபவங்கள்தான்.ஏனென்றால் படமாக்கும் போது நடிகர்கள், நடிகைகள் பட்ஜெட் என பலவற்றைப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த நடைமுறைச் சிக்கல் தெரிந்து நானும் அனுசரித்துப் போவதுண்டு. என்னை நான் சமாதானப் படுத்திக் கொள்வதுண்டு.லேகா ரத்னகுமார் நன்றாகவே செய்தார்.இவ்வளவு டிவி பிரபலமாகாத காலத்திலேயே தூர்தர்ஷனில் அந்தத் தொடர் கள் ஒளிபரப்பானது. நல்ல வரவேற்பையும் பெற்றன.

தொடர்ந்து படங்களுக்குத் திரைக்கதை எழுதுவீர்களா? rajeshkumar3

என்னால் கோவையை விட்டு வர முடியாது சென்னைக்கு வருவதில் எனக்கு ஆர்வமில்லை. விருப்பமும் இல்லை. நான் திரைக்கதை எழுதத் தயார். ஒரே ஒரு நிபந்தனை. கோவை வாருங்கள்.

எனக்கு எழுத்துப் பணிகள் நிறையவே உள்ளன. என்னை நம்பி 1985ல் ஆரம்பிக் கப்பட்ட க்ரைம் நாவல் 30 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது.

எழுத்தை என்னால் விடமுடியாது. எழுத்துதான் எனக்கு மதிப்பையும் மரியாதையையும் தேடிக் கொடுத்துள்ளது.க்ரைம் கதைகள் மூலம் எவ்வளவோ பொது அறிவு விஷயங்களை வாசகர்களுக்கு சொல்லி வருகிறேன். கதைகள் மூலம்தான் பணத்தையும் ஏராளமான வாசகர்களையும் சம்பாதித்துள்ளேன்அதனால் சினிமாவுக்காக எழுத்தை என்னால் விடமுடியாது

 -நமது நிருபர்