‘சினம் கொள் ‘ விமர்சனம்

இலங்கையின் போர்ச் சூழல் பின்னணியில் கதை சொல்வது ஒரு விதம். போருக்குப் பின்னான பாதிப்புகளையும் மக்கள் வாழ்க்கையும் அதன் பின் நடக்கும் அரசியலையும் சொல்வது இன்னொரு விதம். இதில் சினம் கொள் படம் இரண்டாவது ரகம்.

போருக்குப் பின்னான மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படம் தான் சினம்கொள்.

இலங்கைப் போராளிகள் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றியும் வெளிநாடு போய் சம்பாதித்து சொந்தக்காலில் நிற்கும் வசதியான தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் பற்றியும் பேசும் கதையாக சினம்கொள் இருக்கிறது.

இனி ஆயுதத்தைக் கையால் தொடுவதில்லை,அமைதி வழியே தன் வழி என்று இருக்கும் ஒரு முன்னாள் போராளியின் மீது பெண் கடத்தல் பழிவிழுகிறது. அதிலிருந்து எவ்வாறு மீண்டு தன் மேல் பழி விழக் காரணமான நாசகாரக் கும்பல் எது என்பதைக் கண்டுபிடித்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதே கதை.

இயக்குநர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் OTTயில் பொங்கல் அன்று www.eelamplay.com-ல் வெளியாகிறது.

இலங்கைவாழ் தமிழர்களுடைய இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காண்பித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.பல காட்சிகள் நிஜ வாழ்க்கை போலவே தோன்றுகிறது.

தமிழக மக்கள் இலங்கை மக்களைப் பார்ப்பது வேறு அவர்களுடைய வாழ்வு நிலை வேறு.அதுபற்றி எந்த புரிதலும் இல்லாமல் இங்கே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை கொஞ்சமாவது நாம் அறிந்து கொள்ளும்படி காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குநர். தெள்ளத்தெளிவாக உண்மையை உடைத்து வெளி உலகத்துக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் காண்பித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் திரைக்குப்புதியவர்கள். அவர்களிடம் இயல்பு கெடாமல் வேலை வாங்கியிருக்கிறார்.படப்பிடிப்பு இடங்கள் சிறப்பு.இலங்கையில் அசலான பகுதிகளுக்குச் சென்று படப்பதிவு செய்துள்ளனர் .அவை பார்ப்பதற்குப் புதிதாக இருக்கிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கின்றனர்.இல்லை உயிர்ப்போடு வாழ்ந்திருக்கிறார்கள்.இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வு பற்றித் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.