‘சினம்’ விமர்சனம்

சேர்ந்தாரைக் கொல்லும் சினம் என்றாலும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் சினம் கொள்ள வேண்டும் என்று கருத்தைச் சொல்லி உருவாகி இருக்கும் படம் தான் ‘சினம்’.

அருண் விஜய் நடிப்பில் ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘சினம்’. ஷபீர் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதுவரை மற்றவர்கள் பிரச்சினைகளுக்கும் மற்றவர்கள் சார்ந்த குற்றச் செயல்களைக் கண்டுபிடிக்கவும் போலீஸ் பாடுபடுவதையும் புலனாய்வு செய்வதையும் போலீஸ் கதைகளில் பார்த்திருக்கிறோம்.

தன் குடும்பமே கொடூரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து வேரறுக்கும் ஒரு போலீஸின் கதைதான் இந்தப் படம்.

சினம் படத்தின் கதை தான் என்ன?
ஒரு நாள் இரவு தனியே ஆட்டோவில் பயணிக்கும் தன் மனைவியை முகம் தெரியாத நபர்கள் கற்பழித்துக் கொன்று விடுகிறார்கள். எந்தக் குறிப்புகளும் தடயங்களும் கிடைக்காத நிலையில் அவர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் களம் இறங்குகிறார் படத்தின் கதாநாயகன்.

இப்படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அருண் விஜய். ஏற்கெனவே சில படங்களில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த மீசை இல்லாத அந்த மழமழ முகம் அந்தப் பாத்திரத்திற்குக் கூடுதல் அழகையும் மிடுக்கையும் தருகிறது.முக பாவனைகளை இடையூறு இன்றி வெளிக்காட்ட உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஆக்சன் காட்சிகளை அழுத்தம் திருத்தமாக எடுத்திருக்கும் இயக்குநர் , ஒரு ஆவேச கதாநாயகனாக அருண்விஜய் பளிச்சிடும் வகையில் படத்தை எடுத்துள்ளார்.சண்டைக் காட்சிகள் சினிமாத்தனம் இல்லாதபடி இயல்பாக உள்ளன.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஒரு காவல்துறை அதிகாரி நேர்மையாக இருப்பது எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தி எவ்வளவு பகைமையைச் சம்பாதித்துத் தரும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.

படத்தின் முதல் பாதி முழுவதுமே அருண் விஜயினுடைய சண்டைக்காட்சி, கணவன் மனைவி அன்பு, குழந்தையின் மீதான பாசம் என்று கதை பொறுமையாகச் செல்கிறது. நாயகனின் வீடு, மனைவி, மகள் சார்ந்த காட்சிகள் அழகுணர்ச்சியுடன் படம் ஆக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் தன் மனைவிக்கு நிகழ்ந்த கொடுமைக்குக் காரணமானவர்களைத் தேடித் தவித்து அருண் விஜய் போராடும் காட்சிகள் என்று செல்கிறது கதை.படத்தின் பல காட்சிகள் எல்லாம் இயல்பாக உள்ளன.சில காட்சிகளை மேலும் சஸ்பென்சுடன் உருவாக்கி இருக்கலாம்.அருண் விஜய்க்கு பல்வேறு விதமான நடிப்பு வாய்ப்புகளை வெளிப்படுத்த இடம் கொடுத்துள்ளது இப்படம். அதை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் நடிப்பில் அவர் சில படிகள் மேலே ஏறி உள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வனி சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.

சமூகத்தில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் இந்தக் கதையை இயக்கி இருக்கிறார்.

சிற்சில குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அருண் விஜய்யின் திரைத்தோற்றம் மற்றும் நடிப்புக்காக படம் பார்க்கலாம். அப்படி வரும் ரசிகர்களைப் படம் ஏமாற்றாது திருப்தியே செய்யும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒழிப்பதற்கு அரசு, காவல்துறை மட்டுமல்லாது ஒவ்வொருவரும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கவனப்படுத்துகிறது படம்.