சினிமா பின்னணியில் உருவாகும் படம்’விரைவில் இசை’

mastr-mahendran2திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதை ‘விரைவில் இசை’.வெவ்வேறு திசையில்,  போக்கில் செல்கிற இருவேறு காதல்கதைதான் என்றும் இதைக் கூறலாம்.

இப்படத்தை திருமாருதிபிக்சர்ஸ் சார்பில் மாருதி.டி பாலகிருஷ்ணன் தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘யுவன் யுவதி’ ‘ஹரிதாஸ்’ படங்களின் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். மதுரை வானொலி நிலையத்தில் பத்தாண்டுகள் பணிபுரிந்து பல்வேறு நாடகங்கள் நிகழ்ச்சிகள் என நூற்றுக் கணக்கில் படைத்தவர்.

மகேந்திரன் நாயகன்.குழந்தை நட்சத்திரமாக பரவலாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரன் மிஸ்டர் மகேந்திரனாகியபின் ‘விழா’வுக்குப்பின்  நடிக்கும் படம்  இது. அவருடன் ‘உடும்பன்’ நாயகன் திலீப்பும் சமபங்கு வேடமேற்கிறார்.

ஒரு நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணா, இன்னொரு நாயகி அர்ப்பணா. இருவருமே  அழகான பெங்களூர் தக்காளிகள்தான். .டெல்லி கணேஷ், நெல்லை சிவாவும் நடிக்கிறார்கள்.

viraivil-isai2மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இதில் முழுநீள நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பிரபா கூறும்போது “சினிமா கனவில்  கிராமத்திலிருந்து சென்னை வந்து போராடும் இரு இளைஞர்களின் கதை இது.

ஒருவர் இயக்குநராகவும் இன்னொருவர் இசையமைப்பாளராகவும் ஆகவேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பவர்கள்.

இருவரது வாழ்க்கையிலும் காதல் குறுக்கிடுகிறது. இயக்குநரை விரும்பும் காதலி ‘நான் உன்னை விரும்புகிறேன்.உன் சினிமாவை அல்ல சினிமாவை விட்டுவிட்டு வா உருப்படும் வழியைப் பார்’ என்கிறாள் வெறுப்பாக.

இசையமைப்பாளரின் காதலியோ ‘வேறுவேலைக்குப் போய்விடாதே உன் கனவை நிறைவேற்ற நானும் துணைநிற்கிறேன் ‘என்று ஊக்கப் படுத்துகிறாள் பொறுப்பாக..

இப்படி இருவேறு பாதையில் பயணிக்கும் காதல் கதைகளின் முடிவு என்ன? இளைஞர்கள் இருவரும் போராடி இறுதியில் ஒரு படம் ஒப்பந்தமாகி படப்பிடிப்புக்குத் தயாராகிறார்கள். மறுநாள் படப்பிடிப்பு என்கிற நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவம் அவர்களை உலுக்குகிறது. சினிமாவா சமூகமா என்கிற கேள்வி அவர்களை அதிரவைக்கிறது. முடிவு என்ன என்பதே படத்தின் உச்சக்காட்சி.” என்கிறார் இயக்குநர்.

அவர் மேலும் கூறும்போது “இது சினிமா உதவி இயக்குநர்கள், வாய்ப்பு தேடுவோரின் கதைதான் என்றாலும் படத்தில் சினிமாவே இருக்காது. யதார்த்தம் சொட்டும் கதை, காட்சிகள். இதை லவ் ஸ்டோரி என்று சொல்வதைவிட லைவ் ஸ்டோரி என்று சொல்லவே விருப்பம். “என்கிறார்.

சென்னையே பிரதான கதைக்களம் என்றாலும் சென்னை தவிர மதுரை, பாண்டிச்சேரி, பெங்களூர் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படத்தில் ஆறுபாடல்கள். அறிமுக இசை எம்.எஸ்.ராம்.பாடல்கள் அண்ணாமலை, வைரபாரதி, ஸ்ரீநிக். . ஒளிப்பதிவு அறிமுகம் V.B.. சிவானந்தம். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் மாணவர். நடனம் ஷ்யாம் சுந்தர், ஷாண்டி. எடிட்டிங் -யுரேஷ்குமார். ஸ்டண்ட்- சங்கர்.

சினிமாவில் உதவி இயக்குநர்கள் புகழ் மறைவுப் பிரதேசத்தில் இருப்பவர்கள். அவர்களின் வலிமை மட்டுமல்ல வலிகளும் வெளியே தெரிவதில்லை. அவர்கள் பற்றி இயக்குநர் பிரபா எழுதியுள்ள கவிதை ஒன்று இப்படத்தில் வருகிறது. இது அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும்  என நம்புகிறார் பிரபா.

பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல்களுக்காக சில காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ளன.

‘விரைவில் இசை’ படத்தின் பாடல்கள் இசை வெளியீடு விரைவில்!