’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ விமர்சனம்

 
 
 
அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்து தயாரித்திருக்கும்  படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ 
 
 
சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்  வேலை பார்க்கும் கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால்.,  பயந்த சுபாவம் கொண்டவர் .  பெருமைக்குரிய காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும்  யாரை பார்த்தாலும் பயப்படுகிறார். விஷ்ணு விஷாலின்  அவரது அத்தை மகள் ரெஜினாவுக்கு இவர் மீது காதல் .ஆனால் அதை மறைத்து வெறுப்பேற்றுகிறார்,
 
விஷ்ணு ஒரு ஆப்பாயில் பிரியர். தனக்கு பிடித்த ஆப்பாயில் சாப்பிடும் போது யாராவது இடையூறு செய்து தடை பட்டால் பொங்கிவிடுவார்.அப்படி ஒரு முறை, பல கொலைகள் செய்த சென்னை கொலையாளியான  பெரிய ரவுடியான சாய்குமார் ,விஷ்ணு விஷால் சாப்பிடும் ஆப்பாயிலைத் தெரியாமல்  தட்டிவிட்டு விடுகிறார். கோபத்தில் அவரைப்போட்டு அடித்து விடுகிறார். அத்துடன் விடாமல் அப்படியே  அள்ளிக்கொண்டு போய்  லாக்கப்பில் அடைக்கிறார்.    கொலையாளியான சாய்குமாரை , என்கவுண்டர் செய்ய சென்னை போலீஸ் தேடுகிறது. அவர் தான் இவர், என்பது தெரியாமல் விஷ்ணு விஷால், சாய்குமாரை அடைத்து வைத்ததுடன் அவ்வப்போது அடித்து நொறுக்குகிறார்.
 
 
இதற்கிடையே, சாய்குமாரின் ஆட்கள் போலீசாரை அடித்துவிட்டு சாய்குமாரை மீட்கிறார்கள். வெளியே வரும் சாய்குமார், விஷ்ணு விஷாலை கொன்றுவிட்டுத்தான்  சிலுக்குவார்பட்டியை விட்டுச்செல்வேன்  என்று வீர சபதம் செய்கிறார்.   ஆட்கள் துரத்துகிறார்கள்., சிக்காமல் இருக்க பல வேடங்களைப் போட்டுக்கொண்டு விஷ்ணு விஷால் ஓடி ஒளிகிறார். இந்த நிலையில்,  காதலி ரெஜினாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ரவுடியிடம் சிக்காமல் காதலியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். விஷ்ணு விஷால் என்ன   செய்கிறார் ?எப்படி செய்கிறார் ?என்பதே ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மீதிக்கதை.
 
 
 
விஷ்ணு விஷால் நாயகனாக இருந்தாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற நடிகர்களுக்கும் நடிக்க இடம்  கொடுத்திருக்கிறார். எளிமையான வேடத்தை அழகாகவே கையாண்டிருக்கிறார் விஷ்ணு விஷால், பல வித தோற்றங்களில் அசத்துகிறார்.
 
 ரெஜினா கெசண்ட்ராதான் நாயகி. எப்போதும் போல டூயட் சில காட்சிகள் என்று வந்து போகிறார். வில்லனாக வரும் சாய்குமாரை காட்டிலும் அவரது அடியாட்களாக வருபவர்கள் காமெடியில் கவர்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் சிரிப்பு.. 
 
 இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மன் இருவரும் இருப்பை உணர்த்தி இருக்கிறார்கள்.
 
 
ரசிகர்கள் குடும்பத்தோடு படம் பார்த்து சிரிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் செல்லா அய்யாவு அமைத்திருக்கிறார். படத்தில் எந்தவித ஆபாச வசனங்களோ, முகம் சுழிக்கும் காட்சிகளோ இல்லாமல் ரொம்பவே நேர்மையாக இப்படத்தை கையாண்டிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம்.  
 
காமெடியை விரும்பும் ரசிகர்களை மட்டுமே குறி வைத்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு,   கதையை பழைய முறையில் சொல்லியிருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நிறைவான காமெடியுடன் சொல்லியிருக்கிறார்.நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என உட்கார்ந்தால் சரவெடி சிரிப்புக்கு உத்திரவாதம் தருகிறது இப்படம்.
 
Pin It

Comments are closed.