’சூப்பர் டீலக்ஸ் ’ விமர்சனம்

’ஆரண்யகாண்டம்’ என்ற தனது முதல் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா,எட்டு ஆண்டுகளுக்குப்   பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ எப்படி  இருக்கிறது?.

கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலனை வீட்டிற்கே கற்றத்தொடர்புக்கு  அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகிறாள் மனைவி ஒருத்தி. அவளை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடுகிறான்  கணவன். இறந்தவர் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, அதனால் மேலும் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3d வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு, 

திருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பிய அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான வடிகால் ஆக்கிக்கொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களின் கலவைதான் “சூப்பர் டீலக்ஸ் “படத்தின் கதை.மூன்று கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் கதாபாத்திரங்களுக்குள் சம்பந்தம் இல்லை என்றாலும், இவர்களை ஒரே புள்ளியில் சில கதாபாத்திரங்கள் இணைப்பதோடு, இவர்களது இந்த துயரமான வாழ்க்கையை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்பது தான் படத்தின் கதை.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, என்று விளம்பரப்படுத்தப் பட்டாலும், இது அவரது படம் இல்லை எனலாம் இருப்பினும்  திருநங்கையாக சிறப்பாக நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு அதற்காக மட்டும் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லலாம். 

 கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டு, பிரச்சினை வந்ததும் அதே கணவனுடன் பயணிக்கும் சமந்தாவும், துரோகம் செய்த மனைவிக்கு உதவி செய்தாலும் அதை தனது சுயநலத்துக்காக செய்யும் பகத் பாசிலும், பிறகு அதே மனைவிக்கு, ஏன் தன்னை பிடிக்க வில்லை என்று யோசித்து புலம்புவதும் என்று நடிப்பில்  இருவருமே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

காமெடி வேடங்களில் கலக்கிய பகவதி பெருமாள், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.  இயக்குநர் மிஸ்கின்  சில காட்சிகளில் வந்தாலும், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மருத்துவமனை காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார். காயத்ரி, விஜய் சேதுபதியின் மகன், அவரது பாட்டி என்று சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களும் மனதில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

 தனக்கென்று தனி பாணியைக் கடைப்பிடிக்கும் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, பழைய கட்டிடங்களையும், அழுக்குபடிந்த இடங்களையும் தேடிப் பிடித்து படமாக்கியிருக்கிறார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைத்திருக்கிறது. 

படத்தில் இடம்பெறும் மூன்று கதைகளும் தொடங்கும் போது இருக்கும் விறுவிறுப்பு, அக்கதைகளின் அடுத்தடுத்த காட்சிகளில் இல்லாமல் போவதோடு, படத்தின் நடு நடுவே, எது சரி, எது தவறு என்று பேசுவதும், காமம் தொடர்பான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்துவதும்  உவ்வே.

ஏ சர்டிபிகேட் தானே வாங்கப் போகிறோம்… என இயக்குநர் இஷ்டத்திற்கும் ஆண், பெண், திருநங்கை …. என எல்லோரையும் செக்ஸ்க்கு அழைக்கும் சமூகம் தான் இது..! என படம் பிடித்துக் காட்டி இருக்கும் விதம் கொடூரம் .

மொத்தத்தில்  ’சூப்பர் டீலக்ஸ் ’ புதுமை யதார்த்தம் என்கிற பெயரில் வந்துள்ள ஆபாசமுலாம் பூசப்பட்ட படம் எனலாம்.

Pin It

Comments are closed.