‘சூரரைப்போற்று ‘ விமர்சனம்

முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கைக் கதையின் மையச் சரடை எடுத்துக்கொண்டு அதைச் சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இது பயோபிக் அல்ல என்பதைப் புரிந்து ரசிக்கவேண்டும்.

எளிய மக்கள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற சிந்தனையுடனும் துடிப்புடனும் இருக்கிறார் சூர்யா. அவர் கனவிற்கு பலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் .அதை செயல்படுத்தும் போராட்டத்தில் இடையில் எழும் தடைகள் ,தோன்றும்சோதனைகள்,சந்திக்கும் சவால்கள் அனைத்தையும் கடந்து அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை. 

சூர்யா படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார். அதிலிருந்து தொடங்குகிறது படம். 

 
நெடுமாறன் ராஜாங்கம் பாத்திரத்தில் சூர்யா நடிக்கவில்லை. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சூழல்களை எதிர்கொள்ளும் போது அந்தப் பாத்திரமாக மாறி  நடிப்பில் அருமையாக பரிமளித்துள்ளார். நாயகி அபர்ணா ஏதோ முற்றிய முகம் போலத் தெரிந்தாலும் படத்தில் பார்க்கும் போது எவ்வளவு பொருத்தம் என்பதை உணர முடியும். மற்றபடி இப்படிப் படத்தில் தோன்றும் காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு, பூ ராமு என அனைவருமே நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளனர். அனைத்து நடிகர்களையும் பாத்திரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திருக்கிறார் இயக்குநர்.சபாஷ் சுதா.

தந்தையின் கடைசி நிமிடங்களை காணத் துடிக்கிறார் சூர்யா. விமானத்தில் செல்ல சாதாரண டிக்கெட் அனுமதிக்காமல்  பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் தான் இருக்கிறது என்கிறபோது அவர் படும்பாடு அபார நடிப்பு. ஊர் சென்று சேர்ந்தபோது தந்தைக்கு எல்லாம் முடிந்து விட அம்மா ஊர்வசி எதுக்கு வந்தே  என்று கேட்கும் காட்சியும்  கண்களைக் குளமாக்கும்.இவை சில மாதிரிகள்.


ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல் இசையும்பின்னணியும்  சிறப்பு.கேமரா நான் பார்த்திராத நிலப்பகுதியில் சுழன்றிருக்கிறது. நிகழ்கால பிஸினஸ் மேன்களின் முகத்திரையைத் துணிச்சலாகக் கிழித்துள்ள சுதாவிக்கு சபாஷ்.உண்மைக் கதைகளை அப்படியே படமாக்காமல் அதிலுள்ள அம்சங்களின் பின்னணியில் திரைக்கதை அமைத்து படம் ஆக்கினால் அது சிறந்த திரைப்படமாக மாறும் .இந்த ரசவாதத்தை  சரியாகச் செய்யாததால் பலரும் தோல்வியுற்றிருக்கிறார்கள். சரியாகச் செய்து வெற்றி பெற்றிருக்கிறார் சுதா