செயற்கரிய செய்தார் பரத்வாஜ்!

barathwaj-cdதிரையுலகில் எல்லாருக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இரவும் பகலும் உண்டு. வெற்றி மறைவுப் பிரதேசங்கள் எல்லாருக்கும் உண்டு.

உருப்படியான, திருப்தியான வாய்ப்புகள் அமையாமல் அப்படி ஒரு கிரகண காலத்தில் இருக்கும் போது பலரும் சோர்வு அடைந்து விடுவது உண்டு. சிலர் தங்கள் பழைய வெற்றிகளைப் பேசுவதுண்டு.சிலர்பழங்கதை பேசுவதுண்டு .சிலர் இப்போதைய வெற்றியாளர்களை கேலி பேசி காலம் கழிப்பதுண்டு. சிலர் மட்டுமே உருப்படியாக ஏதாவது செய்வதுண்டு .அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் பரத்வாஜ்.

பரத்வாஜ் ஒரு காலத்தில் இசையில் கலக்கியவர்தான். அமர்க்களமும் அட்டகாசமும் இசையில். செய்தவர்தான்.

‘ஜெமினி’ படம் இவரது ‘ஓ போடு’ ஒரு பாடலுக்கே ஓடியது. சரண் பரத்வாஜ் வைரமுத்து  கூட்டணி,சேரன் பரத்வாஜ் கூட்டணி பெரிய வெற்றி பெற்றவை. தங்கர் பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ இவருக்காகவும் பேசப்பட்ட படைப்பு.

பல இயக்குநர்களின் வெற்றிக்கு பரத்வாஜ் முதுகெலும்பாய் இருந்தார். இருந்தாலும் அவருக்கு இடைவெளி விழுந்தது.

பரத்வாஜ் யதார்த்தமானவர். எளிமையானவர். அணுக இலகுவானவர். தொலைவில் நிற்பவரல்ல,அவரே எளிதில் தொலைபேசிக்கு  வருபவர்.  அணுக எளிமையானவரை எடை குறைவாக எடை போடும் கேடு கேட்ட கலாச்சாரம் சினிமாவில் இருக்கிறது. இது ஒரு சாபம்.

பந்தா அறியாத பரத்வாஜ்,சுய இசை முயல்பவர் .அதனால் காப்பியடிக்கத் தெரியாதவர்.வருகிற படங்களை எல்லாம் இசையமைப்போம் என்றிருப்பவரும் அல்ல.அப்படி இருந்திருந்தால் அவர் கையில் இப்போதும் பல படங்கள் இருக்கும்.  உருப்படியான வாய்ப்புகள் அமையாமல் இடைவெளி விழுந்தது.

இடைப்பட்ட நேரத்தில் புலம்பித்திரியாமல் பொறாமையில் பொசுங்காமல் ஒரு உருப்படியான செயலைத் தொடங்கினார்.

உலகப் பொதுமறைக்கு இசையமைக்கும் மகத்தான வேலைதான் அது.

தனக்கு கிடைத்த இடைவேளையை அர்த்தம் உள்ள எடை வேளையாக்கி திருக்குறளுக்கு இசையமைத்துள்ளார். இந்த 3 ஆண்டுகளில் இதுவரை 1330 குறள்களுக்கும் இசையமைத்து விட்டார். இது தமிழ்.. தமிழென்று பேசி பொருளீட்டிய பலரும் செய்யாத சாதனையும்  சேவையும் ஆகும்.

திருக்குறள் பற்றிப்பேசியதற்கே தருண் விஜய்க்கு விழா எடுத்தார்கள். நியாயமாக இந்தப் பணிக்காக ‘செயற்கரிய செய்த’ சேவைக்காக தமிழ் கூறும் நல்லுலகம்  பரத்வாஜுக்கு  விழா எடுக்க வேண்டும்.பரத்வாஜுக்கு விழா கூட எடுக்க வேண்டாம், அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அங்கீகாரமாவது தர வேண்டாமா?

பரத்வாஜ் இசையமைத்த ‘திருக்குறளிசை’  வெளியீட்டு விழா  பிரசாத் லேபில் எளிமையாக நடந்தது. முதலில் அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்கங்கள் என 760 தனித்தனி குரல்களில்  உருவாகியுள்ள அறத்துப்பால் அதிகாரத்துக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. சுவாமி ஓங்காரனந்தா வெளியிட இயக்குநர் சரண் பெற்றுக்கொண்டார்.