‘ஜிகர்தண்டா’விமர்சனம்

சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா, கருணாகரன், நாசர், நரேன், டெல்லிகணேஷ், சங்கிலி முருகன் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார் ஒளிப்பதிவு கேவ்மிக் யூ ஆரி. இசை–சந்தோஷ் நாராயணன். தயாரிப்பு க்ரூப் கம்பெனி எஸ்.கதிரேசன்.jigardanda

குறும்பட இயக்குநரான சித்தார்த்துக்கு ஒரு பட வாய்ப்பு கிடைக்கிறது. ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படமாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர் கூறவே.. அப்படி ஒருவன் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன்தான்மதுரையைக் கலக்கி வரும் தாதா சேது.  அவன் ஒரு சைக்கோ தாதா. குரூரமாகக் கொலை செய்வது அவன் குணம்.

நாளொரு கடத்தல் பொழுதொரு கொலை என்று இருக்கும் அவனது கதையை அறிந்து சினிமாவாக எடுக்கும் முயற்சியில் சென்னையிலிருந்து கார்த்திக் போகிறான். பிறர் நெருங்கவே அஞ்சும் அந்த தாதாவின் பல ரகசியங்கள் கார்த்திக்கிற்கு கிடைக்கின்றன. தன்னை உளவு பார்க்க வந்ததாக சந்தேகிக்கிற சேது, கார்த்திக்கை பிடித்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். கார்த்திக் எப்படி தப்பித்தான் தாதாவை எப்படி கைப்பாவையாக மாற்றுகிறான் என்பதே மீதிக்கதை.

தாதா சேதுவாக பாபி சிம்ஹா வெளுத்து வாங்கியுள்ளார். படம் முழுக்கவ்வந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

கொலை செய்வது, எப்போதும் கூட இருப்பவனைக் கூட சந்தேகத்துடன் பார்ப்பது. சினிமா நடிகனாவது ரொமான்ஸ் வராமல் சொதப்புவது என பலவித பாவம் காட்ட வாய்ப்புகள்.

இயக்குநர் கார்த்திக்காக சித்தார்த். படம் முழுக்க பயந்து நடிக்கும் காட்சிகளே அதிகம். இடையில் லட்சுமி மேனனுடன் ரொமான்ஸ் செய்ய மூடும் இல்லை, நேரமும் இல்லை.

சித்தார்த்தின் மதுரை நண்பனாக கருணாகரன், பயந்து பயமுறுத்துகிறார்.

மதுரை செல்கிற சித்தார்த் அவரது நண்பன் கருணாகரன் வீட்டில் தங்கி துப்பறிகிறார் பல முயற்சிகள் தோற்றபின் ‘புடவை திருடி ‘லட்சுமி மேனன் மூலமும் சேதுவின் அடியாள் ஒருவன் மூலமும் தகவல்கள் திரட்டுகிறார். இது சேதுவுக்கு தெரிகிறது. தன்னை மோப்பம் பிடிக்க வந்த போலீஸ் ஆள் என்று சித்தார்த்தை பிடித்துக் கொண்டு போய் கொலை செய்ய முடிவெடுக்க, தாங்கள் சினிமா எடுக்கவே தகவல் திரட்டியதாக சித்தார்த் கூறியதும். மனம்மாறிய சேது இதை என்னிடமே கேட்டிருக்கலாமே  என்றதுடன் தானே கதையை விவரமாகக் கூறியதுடன் நாயகனாக நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறான். அதன்பிறகு ஆக்ஷன் கதை நகைச்சுவை ட்ராக்கில் பயணிக்கிறது.

மிரட்டலில் சிம்ஹாவும் அச்சத்தில் சித்தார்த்தும் கருணாகரனும் போட்டி போடுகிறார்கள்.
சிறு சிறு காட்சிகள் மூலம் சுவையாக தொடுத்துள்ளார். ஆனால் வன்முறை டூ மச். ஒரு தாதாவுக்கு எதிரான இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது அதைப் பயன்படுத்தாதது ஏன்? ஒளிப்பதிவும் இசையும் இயக்குநரின் இரு கரங்களாய் பயணித் துள்ளன.

காமடியாகும் ஆக்ஷன் கதையில் முதல்பாதி கல கலப்பு ப்ளஸ் விறு விறுப்பாக இருந்தாலும் படம் முழுக்க கசாப்பு கடை போல இவ்வளவு வன்முறை தேவையா?