’ஜூலை காற்றில் ’  விமர்சனம்

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் கே.சி. சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’ ஜூலை காற்றில்.’ இப்படம் காதல் அதனால் ஏற்படும் மணமுறிவு என முற்றிலும் உறவுகளை பின்னணியாக வைத்துஉருவாக்கப்பட்டுள்ளது. வில்லனே இல்லாவிட்டாலும் கூட காதலில் வரும் உளவியல் சிக்கல்களின் விளைவுகளைச்சொல்லும் படமாக வந்துள்ளது. 
 
முக்கோண காதல், அதனால் ஏற்படும் தோல்வி, அதை தொடர்ந்து கிடைக்கும் கேள்வி அதற்கான பதில் என முற்றிலும் காதல் படமாகவே ‘ஜூலை காற்றில்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, மூன்று பேர் தொடர்பான கதை என்பதால், அவரவர் பார்வையில் பயணிக்கிறது கதை எனலாம். . 
 
 
ஆனந்த் நாக் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.இவர்  நேரம், அமர காவியம், பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வரும் அஞ்சு குரியன் கதாநாயகியாக நடித்துள்ளார். தவிர, சம்யுக்தா மேனன் என்பவர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 
ஒருதலைகாதல், காதல் தோல்வி இதனால் தாடி வளர்த்துக்கொண்டு, காதலித்த பெண்ணை வசை பாடுவது போன்ற எந்தவித பிற்போக்கு தனமும் இல்லாத ஒரு காதல் தோல்விக்கான படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் கே.சி. சுந்தரம்.  ஆனால் படம் முற்போக்குக்கான படமா என்றால் இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாங்களில்  அபத்தம் நிறைந்து இருப்பதால் முற்போக்கு படமும் அல்ல. நம் சமூகம் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளாத ஒரு கலாச்சாரத்தில் நடைபெறும் காதல் தோல்விகளை அடுக்கும் திரைப்படம்.
 
நாம் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்துதான் வாழக்கையின் பல்வேறு அனுபவங்களை நாம் பெறுகிறோம். அதுதான் இந்த படம் சொல்லும் மய்யக்கருத்து.
 
ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப்பிரிவில் பொறுப்பான உயர்ந்த பதவியில் இருக்கிறார் நாயகன் அனந்த்நாக். தான் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு சுதந்திரமான பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து வாழ நினைக்கிறார். அந்த நேரத்தில்தான் அஞ்சு குரியனைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களது காதல் நிச்சயம் வரை செல்கிறது. பணி நிமித்தமாக அஞ்சு குரியன் பெங்களூர் சென்று விடுகிறார்.
 
அந்த நேரத்தில் சம்யுக்தா மேனனைச் சந்திக்கிறார் .தான் எதிர்பார்த்த கனவு தேவதை போலவே அவர் இருக்கிறார். முழு காதல் இல்லாத அஞ்சு குரியனைத் திருமணம் செய்து கொண்டு பொய்யாக வாழ்வதைவிட தனக்கு பிடித்த சம்யுக்தாவை காதலித்துத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் அனந்த்நாக்.
 
இதனால் அஞ்சு குரியன் சென்னை வந்ததும் பிரிந்து விடலாம்  என்று அதற்கான காரணத்தைச் சொல்லி இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிறகு சம்யுக்தாவும், அனந்த்நாக்கும் காதலிக்கிறார்கள். சம்யுக்தா தனிமனித சுதந்திரத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார் .அதனால் தனக்கான சுதந்திரம் ஒரு போதும் தன்னுடைய காதலால் காதலனால் பறி போய்விடக். கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அனந்த்நாத் அதை உடைக்கிறார் இதனால் சம்யுக்தா இந்த காதல் சரிபட்டு வராது என்று கூறி அனந்த்நாக்கை விட்டு பிரிகிறார். காதல் பிரிவில் இருந்து விடுபட கோவா வரை பயணம் மேற்கொள்கிறார். போன இடத்தில்  அங்கு ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
 
தனிமனிதனுடைய வாழ்க்கையில் ஒரு  காதல் தோல்விக்கு பிறகு இன்னொரு காதல் வருவது என்பது இயல்பானது என்பதும் வாழ்கை ஒரு பயணம் போன்றது என்பதே படம் சொல்ல வரும் கருத்து. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தில் திணிக்கப்பட்டிருக்கக்கூடிய சினிமா காதல் போல் இல்லாமல் இயல்பாக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
 
கதாநாயகன் முதலில் காதலிக்கும் அஞ்சு குரியனை உன் மீது முழுமையான காதல் இல்லை என்று நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பிறகு சொல்வது பலவீனம்.  அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். எளிமையான அழகுடனான தோற்றம், பேச்சு, உடல்மொழி  என அவருடைய கதாபாத்திரம் நம் மனதில் பதிகிறது. இப்படிபட்ட பெண்ணை ஒரு பலவீனமான காரணம் காட்டி தனக்கு பொருத்தமில்லாதவர் என்று அனந்த்நாக் சொல்லும் போது கோபம்தான் வருகிறது. 
 
புகைப்படக்கலைஞராக வரும் சம்யுக்தா மாடர்ன் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். தனிமனித சுதந்திரத்தின் மீது முழு நம்பிக்கை உடையவராக இருக்கிறார் சம்யுக்தா. அதன் அடிப்படையில் தன்னுடைய சுதந்திரத்திற்கு யார் முட்டுகட்டை இட்டாலும் அதை விரும்பாதவராக சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
 
கதாநாயகனின் நண்பனாக வரும் சதீஷ் வழக்கம் போல் முயன்று சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் காற்றே..காற்றே…பாடல்  காதலர்களின் நினைவில் நிற்கும்.
 
 
காதலித்து விட்டு பிரிவதற்கான காரணங்களில்  இன்னமும் வலு சேர்த்திருக்கலாம். காதல் தோல்வி, ஒருதலை காதல் போன்ற விஷயங்களில் நேர்மை தன்மையோடு எடுத்திருக்கிறார் இயக்குநர் அந்த வகையில் பாராட்டை பெறுகிறார். ஒருவரை ஒருவர் சமரசம் இல்லாத ஈகோவால் காதல் பயணம் முடியாமல் நீள்கிறது .இப்படத்தில் உளவியல் நோக்கில் ஆராய்ந்து பயணிக்கிறது திரைக்கதை..எத்தனை மலர்கள் தாவும் பட்டாம் பூச்சி மனம் கொண்ட ஆண்களின் மனோபாவத்தையும் அழகாக்கஃ காட்டியுள்ளார் இயக்குநர் .இப்படிப்பட்ட. ஒரு வித்தியாசமான அணுகுமுறையால் படத்தை ரசிக்க முடிகிறது.
 
 
Pin It

Comments are closed.