‘ஜெய்பீம்’ விமர்சனம்

சூர்யாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் த.செ.ஞானவேல் இயக்கத்திலும் வெளிவந்துள்ள படம்.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துக் கொண்டு போன கணவன் காணாமல் போனதைக் கண்டு பிடிக்கப் போராடும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உணர்ச்சிமிகு போராட்டமே ‘ஜெய்பீம்’

இருளர் சமூகத்தைச் சேர்ந்தவன் ராஜாகண்ணு செங்கல் சூளையில் வேலை செய்பவன். பாம்பு பிடித்து காட்டுக்குள் விடுவது அவனது உப வேலை. இப்படித் தன் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவி செங்கேணி மாமா மாமா என்று கணவனை உலகமாக நம்பி உயிராய் நேசிக்கிறாள்.கூரை வீட்டில் வாழும் அவர்களுக்கு ஒரு கல் வீடு கட்டி அதில் குடியேறுவது என்பதே வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. இச்சூழலில் அந்த ஊர்த் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்துவிடுகிறது. ராஜாகண்ணு அதைக் கண்டுபிடித்து காட்டிலும் விட்டு விடுகிறான்.
புதுவீடு கட்டும் கனவில் தொலைதூர ஊரில் செங்கல் சூளையில் வேலை செய்யச் செல்கிறான். பாம்பு பிடித்த இடத்தில் நகைகள் காணாமல் போகிறது . பழி அவன் மீது விழுகிறது.

ராஜாகண்ணுவின் சக நண்பர்கள், மனைவி, சகோதரி என அனைவரையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போகிறது. லாக்கப்பில சித்திரவதை செய்கிறது. ராஜாகண்ணுவும் போலீஸாரின் பயங்கரத் தாக்குதலுக்கு ஆளாகிறான். பிறகு ராஜாகண்ணு, இருட்டப்பன், மொசக்குட்டி மூவரும் காவல் நிலையத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இந்நிலையில் கணவனின் நிலை தெரியாமல் வயிற்றுப் பிள்ளையுடன் தவிக்கிறாள் மனைவி செங்கேணி.
அவளால் கணவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா ? நகை திருடியது யார்? சித்திரவதைக்கு ஆளானவர்கள் தப்பித்து ஓடியது உண்மையா? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடிப் படம் பயணிக்கிறது.

காணாமல் போன கணவனைத் தேடித் தவிக்கும் மனைவியின் தேடலாக ,ஒரு சிறு மலைவாழ் கிராமத்தில் ஒரு சின்ன குடும்பத்தின் விடை தெரியாக் கேள்வியாக ஆரம்பித்து, அந்த ஊரின் கதையாக ,அதிகாரவர்க்கத்தின் கதையாக ,அரசியல் சட்டத்தின் அமைப்பு பற்றிய கேள்வியாக, நாட்டின்சிறுபான்மை பழங்குடியினர் வாழ்க்கையாக, அதிகார வர்க்கத்து போக்காக, ஒடுக்கப்படும் மக்கள் வலியாக என்று கதை விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே செல்கிறது.

குரல் அற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு கதையாக எடுத்துக்கொண்டு ஒரு காத்திரமான படத்தை இயக்கியிருக்கிறார்
இயக்குநர் த.செ.ஞானவேல்.

வணிக சினிமா நாயகனாக தன்னை நிலை நிறுத்தி வைத்திருக்கும் சூர்யா சமூக விழிப்புணர்வு நோக்கம் கொண்ட இந்தப் படத்தில் நடித்திருப்பது பெரிய திருப்புமுனை.அவரே படத்தைத் தயாரித்தது கூடுதல் பெருமை.

அவர் ஏற்று நடித்துள்ள சந்துரு என்கிற வழக்கறிஞர் பாத்திரம் வாழ்நாள் முழுக்க அவர் முன் சிவப்புக் கம்பளம் விரித்து பெருமை சேர்க்கும்.

ஒடுக்கப்பட்ட இனத்தின் குடும்பத் தலைவனாக அத்தனை அல்லல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி ராஜாகண்ணுவாக வாழ்ந்துள்ளார் மணிகண்டன்.

லிஜோமோல் ஜோஸ் இதில் செங்கேணியாகவே வாழ்ந்துள்ளார் . அவர் ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்தவர் இவர் என்பதை நம்பவே முடியவில்லை.பல்வேறு விதமான உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது முதிர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ்,எம்.எஸ். பாஸ்கர் போன்ற மூத்த நடிகர்களும் தத்தமது பணிகளில் முத்திரை பதித்து இருக்கிறார்கள்.

எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் வரும் தமிழும் வசவுகளையே வாழ்த்துகளாக வாங்குகிறார். இருட்டப்பனாக நடித்த சின்ராசுவும், மொசக்குட்டியாக நடித்த ராஜேந்திரனும் மனதில் ஆணி அடிக்கிறார்கள். அறிவொளித் திட்ட ஆசிரியை ரஜிஷா விஜயனும், பொதுவுடமைக் கட்சி தோழர்களாக வரும் பவா செல்லத்துரை போன்றோரும்கூட நினைவில் நிற்கிறார்கள்.

90களின் காலகட்டம் கலை இயக்குநர் கதிரின் கரங்களின் மூலம் கண்முன் தெரிகிறது. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காவல் நிலைய வன்முறையை, லாக்கப் கொடூரத்தை விசாரணை படத்தை விட பல மடங்கு பதற்றத்தை நமக்குள் செலுத்துகிறது. ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் உணர்வு கடத்தும் ரகம்.காத்திரமான அழுத்தமான காட்சிகளைப் போல கூர்மையான வசனங்களும் உண்டு.

சிறிது பிசகினாலும்ஆவணப்படம் ஆகும் அபாயமும் ஆக்ஷன் படமாகும் ஆபத்தும் , பிரச்சார நெடி அடிக்கும் பின்னடைவும் இருந்தாலும் எல்லை மீறாமல் அனைத்தையும் சமன்செய்து தான் எடுத்துக்கொண்ட கதையை சரியாகச் சொல்லி தரமான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.

கண் முன் நிகழ் வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற ஓர் உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது இந்தப் படம்.

பொழுதுபோக்கு படங்கள் நடுவே சமூகப் பழுது நீக்கும் படமாக வெளிவந்திருக்கிறது ஜெய்பீம் . நல்லதொரு படைப்பின் மூலம் இப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குக் கௌரவம் சேர்த்துள்ளார் இயக்குநர்.