நடிகர் சங்கம் பிறந்த கதை!-‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-3

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-3

fna-kskநடிகர் சங்கம் பிறந்த கதை பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.

நடிகர் சங்கம் பிறந்த கதை!

நாடகம் என்று பேச ஆரம்பித்தால் நாடக சபாக்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.எஸ்.டி சுந்தரம் கதை வசனத்தில் உருவான ‘கவியின் கனவு’ புகழ்பெற்ற நாடகமாகும். சத்திநாடக சபாவின் உரிமையாளர் சக்தி கிருஷ்ணசாமிதான் இதன் தயாரிப்பாளர், இயக்குநர். பின்னாளில் சினிமாவுக்கு வந்து பிரகாசித்துப் புகழ் பெற்ற கே.ஆர்.ராமசாமி, எஸ்.வி. சுப்பையா, நம்பியார், சிவாஜிகணேசன் எல்லாரும் அந்த சபாவின் மூலம் உருவானவர்கள்தான்.

சத்திநாடக சபாவில் ஏழு நாட்களும் நாடகம் போடுவார்கள். ஓய்வே இருக்காது. 4 நாட்கள் மாலை 6 மணி காட்சி போடுவார்கள். மீதியுள்ள 3 நாட்கள் மதியம் 3 மணி காட்சியுடன்சேர்த்து  2 காட்சிகள் போடுவார்கள். .

பல ஊர்கள் சென்று பல நாட்கள் தங்கி நாடகம் நடத்துவார்கள்.

அரங்க அமைப்பில் அசத்துவார்கள். முன்கதை ப்ளாஷ் பேக் சொல்லும் போது திரையில் தூண்கள் நகர்ந்து பின்புலம் மாறும்.

சிவாஜி கவியாக நடித்துள்ளார். இந்த நாடகப் பாத்திரங்கள் படங்களில் எல்லாம் வரும். மற்ற நாடகங்களில் கூட இதைக் காட்டி பயன்படுத்தியது உண்டு.அந்தளவுக்கு பிரபலம்.

இதற்கான ஒத்திகைகள் மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் நடக்கும். 4 அறைகள் இருக்கும். ஒரு அறையில்தான் நடிகர் சங்க அலுவலகம் இருந்தது.

பிற்காலத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இடம் பெற்ற இந்த நடிகர் சங்கம் முதலில் ஒரு சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்டதுதான்.

அவர் பெயர் சோமசுந்தரம். நாடக நடிகர். அவர் நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் நடித்து வந்தவர்.

அவர்தான் நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம்தான். உறுப்பினர் கார்டு அச்சிட 20 ரூபாய் கூட இல்லாமலிருந்தது. என்னைஒரு நடிகராக்கி சேர்த்தார்கள்.

நான் 30 ரூபாய் கொடுத்தேன். அப்போது தபால்களை அனுப்ப ஸ்டாம்ப் ஒட்டக்கூட காசு இல்லை. அதற்கு நான் கொடுத்த அந்த 30 ரூபாய் பணத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் பாருங்களேன்.

பிறகு ‘நடிகன் குரல்’ என்று நடிகர் சங்கம் சார்பாக ஒரு பத்திரிகை வந்தது. அப்போது நடிகர் சங்க உறுப்பினர்கனை அதில் பட்டியலாக வெளியிடுவார்கள்.

‘நடிகன் குரல்’ முதல் புத்தகத்தில் எனது பெயர் 120 ஆவது பெயராக வந்தது. பி.ஜி.ஆனந்தன் என்றிருக்கும். ஆரம்பத்தில் நான் ஒரு நாடக நடிகர்.. ஆனால் அது பலருக்கும் தெரியாது. போட்டோ கிராபராகவே பரவலாக நான் அறியப் பட்டிருந்தேன்.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக்கள் சென்னையில் பிரபலமாக இல்லை. சேலம். கோவை. போன்ற இடங்களில்தான் இருந்தன. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கோவை பட்சிராஜா ஸ்டுடியோ இப்படி சில ஸ்டுடியோக்கள் பிரபலமாக விளங்கின.

அங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அங்கேயே போய்த் தங்கி நடிப்பார்கள். அந்தக் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். சிறுசிறு வேடங்களில்தான் நடித்துவந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் பழக்கம் இல்லை. ஸ்டுடியோக்கள் சென்னை வந்த பிறகுதான் பழக்கம் .அதாவது 1951க்கு முன்பு எனக்கு அவரைத் தெரியாது.

‘மலைக்கள்ளன்’ படம் பட்சிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த படம். அது 7 மொழிகளில் எடுக்கப் பட்ட படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்ல சிங்கள மொழியிலும் எடுக்கப்பட்டது.

தமிழில் எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்தார்கள். தெலுங்கில் என்.டி.ஆர், கன்னடத்தில் கல்யாண்குமார் இந்தியில் திலிப்குமார் நாயகனக நடித்தார்கள்.

அது நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதியது. விருது பெற்ற முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப்படமும் அதுதான்..

எம்.ஜி.ஆர் எனக்கு அறிமுகமானார்!

எம்.ஜி.ஆர்.நடிகர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது ஒருமுறை சங்கத்தில் பொங்கல் தினத்தை நடிகர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தார்.

அனைவரையும் குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தார். பெரிய நட்சத்திரங்கள் பலரும் வரவில்லை.

துணை நடிகர்கள் நாடக சக நடிகர்கள் எனப் பலரும் வந்திருந்தார்கள்.

அவர்களை வைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விழா அமர்க்களப்பட்டது.

விளையாட்டு விழாவும் நடத்தப் பட்டது. இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், கோணி ஒட்டம் என்று எல்லாரும் ஆர்வத்தோடு பங்கு பெற்றார்கள்.

நான் போட்டோ எடுத்தேன். பத்திரிகைகளுக்கு கொடுக்க எண்ணினேன்.

நடிகர்கள் அமெச்சூர்நடிகர்கள், புரொபஷனல் நடிகர்கள் என்று பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

அனைவரும் குழு குழுவாகவும் தனியாகவும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். நான்தான் பரபரப்பாக எடுத்து தள்ளிக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து ‘ஆனந்தன் வாங்க.. இவங்க இப்போதான் புதுசா நடிக்க வந்திருக்காங்க. சலுகை விலையில் எடுத்து கொடுங்க’ என்றார்.

நான் அடக்க விலை வந்தால் போதும் என்று கேபினட் சைஸ் 5 க்கும் முழுப்பக்க படம் 10 க்கும் தர ஒப்புக் கொண்டேன். பிரிண்டுக்கு 1 ரூபாய் போதும் என்று நினைத்தேன். எனக்கு அப்போது சாப்பாட்டு கஷ்டமெல்லாம் இல்லை. எனவே எடுத்தேன்.

முன்பணமாகவே 50 பேர் கொடுத்திருந்தார்கள். 2 நாளில் அனைவருக்கும் பிரிண்ட் போட்டுக் கொடுத்து விட்டேன்..

 (  தொடரும் )

Pin It

Comments are closed.