‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5

எம்.ஜி.ஆர் பற்றிய  தனது அனுபவங்களை  கலைமாமணி பிலிம்நியூஸ்ஆனந்தன் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

தினமும் எம்.ஜி.ஆர்.வீட்டுக்குப் போவேன்!

எம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த போது நடிகன் குரலில் தனக்குத் தெரியாமல் எதுவும் வரக் கூடாது என்று கவனமாக இருப்பார். அதன் ஆசிரியராக வித்வான் வே.லட்சுமணன் இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் நண்பர். எனக்கும் நண்பர்.

தினமும் வித்வான் வே.லட்சுமணன் எங்கள் வீட்டுக்கு வருவார். என்னை அழைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர்.வீடு செல்வார். இப்படித் தினமும் எம்.ஜி.ஆர்.வீட்டுக்குப் போவோம். தினமும் போனாலும் எம்.ஜி.ஆரைப் பார்க்க வாய்ப்பு இருந்தாலும் ஒட்டிக் கொண்டு உள்ளே போகமாட்டேன். அவர் ஆசிரியர் என்கிற முறையில் செல்லட்டும் நாம் ஏன் போக வேண்டும் என்று வெளியேயே அமர்ந்து விடுவேன்.

அங்கே ஆர்.எம்.வீ. இருப்பார். ஆர்.எம்.வீ. ஒருகாலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் நடிகர். அப்போதிலிருந்து எம்.ஜி.ஆருக்குப் பழக்கம். பிறகு எம்.ஜி.ஆருடன் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர் ..பிக்சர்ஸ் என்று படமெடுத்த போது மேனேஜராகிவிட்டார்.

அப்போது  லாயிட்ஸ் ரோட்டில்தான் எம்.ஜி.ஆர் வீடு இருக்கும். இன்றைக்கு அதிமுக கட்சி ஆபீசாக இருக்கிறது. அங்குதான் போவோம் அடுத்த வீடு எம்.ஜி.ஆரின் வக்கீல் ராமன்வீடு.தினம் அங்கு செல்லும் நான் ,ஆர்.எம்.வீயுடன்  பேசுவேன். நாங்கள் நாட்டுநடப்பு பேசிக் கொள்வோம்.

தினசரி படப்பிடிப்புக்குப் போவேன். ஸ்டில்ஸ் எடுப்பேன். நடிகருடன் இயக்குநர். இயக்குநருடன். நட்சத்திரங்கள். தயாரிப்பாளருடன்  நட்சத்திரங்கள். என்று படங்கள் எடுப்பேன். இதுமாதிரி படத்துக்கான போட்டோகிராபர் எடுக்க மாட்டார்கள்.

அப்போது இப்படிப்பட்ட படங்களை ‘நடிகன் குரல்’ பத்திரிகைக்குக்  கொடுப்பேன். நட்சத்திரங்கள் பிறவேலைகள் செய்வது போல நான் வணங்கும் தெய்வம், நட்சத்திரங்களின் பங்களா என்றெல்லாம் படங்கள் எடுத்து கொடுப்பேன் .அவை  பத்திரிகையில் வெளிவரும்.

என்னை வெளியேற்றிய எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பதவியேற்ற பிறகு முதல் கூட்டம் நடந்தது.

நூறுபேர் அந்த ஹாலில் கூடியிருந்தார்கள் எம்.ஜி.ஆர். உள்ளே நுழைந்தார். கேமராவுடன் என்னைப் பார்த்தார்.அவர் முகம் சிவந்தது.

நடிகர் சங்க கூட்டத்தில் போட்டோகிராபருக்கு என்ன வேலை என்று நினைத்திருக்க வேண்டும். ‘ஆனந்தன் மன்னிக்கணும்.. தயவுசெய்து வெளியே போய்டறீங்களா?’ என்றார்.. நானும் விடுவிடுவென வெளியேறினேன்.

நானும் நடிகர் சங்க உறுப்பினர் என்பது அவருக்குத் தெரியாமல்தான்அப்படிப் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. எந்த விளக்கமும் சொல்ல விரும்பாமல் நான் வெளியே வந்து விட்டேன்.

நான் வெளியேறியதும் வித்துவான் வே. லெட்சுமணன் ,’ஆனந்தனும் நடிகர் சங்க உறுப்பினர்தான்’ என்று கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர். பதறிவிட்டாராம். உடனே என்னை கூப்பிட ஆள் அனுப்பினார். நான் அதற்குள் வெளியே வந்துவிட்டேன். எம்.ஜி.ஆர்.ஆள் என்னைத்தேடி வந்து  கேட்ட போது நான் தவறாக நினைக்கவில்லை என்று சொல்லி அனுப்பினேன்.  பிறகு நடிகர் சோமசுந்தரத்திடம் எனக்கு விஷயம் தெரியாது. மன்னிச்சிட கேட்டதாக எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.

‘அவர் உறுப்பினர் அவரை வெளியே அனுப்பியதற்காக எல்லார் மத்தியிலும் உங்களிடமே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூட்டத்தில் பகிரங்கமாகவே பேசினாராம் எம்.ஜி.ஆர்..  பிறகு இதைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டேன். தவறு என்றால் பிடிவாதம் மறந்து ஒப்புக் கொள்ளும் அவரது பண்பு கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.இன்று எத்தனை பேருக்கு அந்த பெருந்தன்மை இருக்கிறது?

எம்.ஜி.ஆர். தனியே கொடுத்த ஷீல்டு!

‘நாடோடி மன்னன்’ படம் பார்த்து விட்டு பத்திரிகையாளர்கள் கூறிய கருத்தை எல்லாம் எடுத்துச் சொன்னேன். அதில் பாராட்டு, விமர்சனம் எல்லாமும் கலந்திருந்தது. எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார் .நிறை குறை எல்லாவற்றையும் அவ்வளவு ஆர்வமாகக் கேட்டார்.

அப்போது கூறினார்.. ‘படத்துக்கு வேற யார் இதைக் கவனித்தாலும்.என் எல்லாப் படங்களுக்கும் நீதான் ஷோ ஏற்பாடு செய்யணும்.. ‘என்று வாக்குறுதி கொடுத்தார்.

‘நாடோடி மன்னன்’ மாபெரும் வெற்றி 100வது நாள் வெற்றி விழா நடந்தது.

பொதுவாக வெற்றிவிழாவில் கேடயங்கள் 40 பேருக்குத்தான் கொடுப்பார்கள்.

இதில் படத்தில் பணியாற்றிய அனைத்து உதவியாளர்களுக்கும் கொடுக்க விரும்பினார். எல்லாமும் சேர்த்து 64 பேர் வந்தது. நான்தான் பட்டியல் தயார் செய்து கொடுத்தேன்.

‘வசூல் விவரம் கலெக்ஷன் ரிப்போர்ட் கொடுக்கிறேன். படத்தை தேலுங்கில் டப் செய்யும் எண்ணம் உள்ளது எனவே தெலுங்கு பத்திரிகைகளையும் கூப்பிடணும் ‘என்றார். பத்திரிகைகள் எல்லாவற்றையும் நான் தான் அழைத்தேன்.

அண்ணாதான் அனைவருக்கும் கேடயங்கள் வழங்கினார். அப்போது அண்ணா கட்சித் தலைவர்.விழா இனிதே முடிந்தது. அந்த விழா எஸ்ஐஏஏ மைதானத்தில் நடந்தது மைதானம்முழுதும் நிரம்பி வழிந்தது. பத்திரிகையாளர்கள் தரப்பில் 60 பேருக்கு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

எல்லாருக்கும் கேடயம் கொடுத்து முடிந்தது. விழா முடிந்து பேசிக் கொண்டிருக்கும் போது வித்துவான் லெட்சுமணன் கேட்டார்.

எல்லாருக்கும் ஷீல்டு கொடுத்தீர்களே. இவ்வளவும் செய்த ஆனந்தனுக்கு ஷீல்டு இல்லையா? என்றாரே பார்க்கலாம். அப்படிக்கேட்டதும் எம்..ஜி.ஆர். அதிர்ச்சியடைந்து விட்டார். ஒரு கணம் என்னையே உற்றுப்பார்த்தார். மனம் கலங்கி விட்டார். கண்கள் கலங்கி விட்டன.. மாபெரும் தவறு செய்தது போல குற்ற உணர்வு..’என்ன சொல்றே ?’ என்றார். ஒருத்தர் மட்டும் மறந்து விட்டது. எல்லாருக்கும் கொடுத்தாயிற்று.

முகம் சிவந்து விட்டது. ‘நியாயமா முதல் ஷீல்டு உனக்குதான் கொடுத்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சுடு..’ என்றவருக்கு அழுகையே வந்துவிட்டது.

இதை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருக்கலாம் யார் யாரோ போட்ட பட்டியல் பெயர் விட்டு விட்டது என்று கூட விட்டு விடலாம். ஆனால் மற்றவர் மனம் புண்பட்டுவிடுமோ என்று எண்ணிய அவர் மனம்.. அந்த குணம் யாருக்கும் வராது.

அப்போது நான் எதுவும் தப்பாக நினைக்க வில்லை என்று எவ்வளவோ சொன்னேன். அவர் விடவில்லை .அடுத்தவாரமே எனக்காக ஒரு கேடயம் தயார் செய்து படப்பிடிப்பில் பலருக்கு மத்தியில் எனக்கு வழங்கினார்.

(   தொடரும் )