தங்கள் அணியின் நட்சத்திர வீரர்களை அறிமுகப்படுத்திய ‘சென்னை ராக்கர்ஸ்’

nasser1.9கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் நம் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இறகுப் பந்தாட்டத்திற்காக  வெள்ளி பதக்கம் வென்றதும், நாடெங்கும் அந்த விளையாட்டின் புகழ் பரவத் தொடங்கிவிட்டது.
தற்போது அந்த இறகுப் பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க தயாராக உள்ளது விரைவில் நடைபெற இருக்கும் ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் – 2016’ (சீசன் 1). விளையாட்டு மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் எப்போதுமே  மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு உண்டு. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து தொடங்கப்பட்டிருப்பது தான் இந்த நட்சத்திரங்களுக்கான இறகுப் பந்தாட்டப் போட்டி.
தமிழ்நாட்டின் சார்பில் களம் இறங்க இருக்கும் ‘சென்னை ராக்கர்ஸ்’, தங்கள் அணியின் விளையாட்டு வீரர்களை சென்னையில் உள்ள ஹயாத் ரீஜென்சி நட்சத்திர ஹோட்டலில்  அறிமுகப்படுத்தியது. தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களும், சென்னை ராக்கர்ஸ் அணியின் வீரர்களுமான பிரசன்னா, சாந்தனு, முன்னா, அபிநே, அமிதாஷ், வைபவ், பரத், இனியா, ரூப்பா மஞ்சரி மற்றும் காயத்ரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
நடிகர் ஆர்யா சென்னை ராக்கர்ஸ் அணியின் கேப்டனாகவும், நடிகர் மாதவன் அணியின் விளம்பர தூதராகவும், நடிகை அமலா பால் அணியின் ஊக்குவிப்பாளராகவும் செயல்படுவது மேலும் சிறப்பு. விமர்சையாக நடந்த இந்த நிகழ்ச்சியில், சென்னை ராக்கர்ஸ் அணியின் கீதத்தையும், ஜெர்சியையும் வெளியிட்டார் தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் பரத்தும், பிரசன்னாவும் நட்பு ரீதியாக போட்டி போட்டு கொண்டு, ஐம்பதுக்கும் அதிகமாக  தண்டால் எடுத்து அனைவரையும் உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
“முன்பெல்லாம் கிரிக்கெட் மட்டையை வாங்க கடைக்கு சென்றால், இது சச்சின் விளையாடும் மட்டை, இது கங்குலி விளையாடும் மட்டை என்று தான் கடைக்காரர்கள்  சொல்லி நாம் கேட்டிருப்போம்….ஆனால் இன்றோ, இது பி வி சிந்து விளையாடும் பாட்மிண்டன் மட்டை என்று அவர்கள் சொல்வதை கேட்டு வருகிறோம்…ஒட்டுமொத்த இந்தியாவையும் இறகு பந்தாட்டத்தை பற்றி பேச வைத்த பி வி சிந்துவிற்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்…
தங்களின் இறகு பந்தாட்ட திறமையை வெளிப்படுத்த நினைக்கும்  ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும்  இந்த ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் – 2016’ (சீசன் 1) போட்டியானது ஒரு சிறந்த அடித்தளமாக விளங்கும். இறகு பந்து விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்டுள்ள பிரபலங்கள் தான் எங்களின் சென்னை ராக்கர்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என நாங்கள் நினைத்தோம்….தற்போது அந்த கனவு நிறைவேறி  உள்ளது…  நடக்க இருக்கும் இந்த ‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் – 2016′ போட்டியில் எங்களது சென்னை ராக்கர்ஸ் அணி நிச்சயமாக சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…’ என்கிறார் சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளர் சி. ஆர். வெங்கடேஷ்.
“பாட்மிண்டன் விளையாட்டு தற்போது இந்தியாவில் ஒரு புதியதொரு சகாப்தத்தை படைத்து வருகிறது… சென்னை ராக்கர்ஸ் அணியின் கீதத்தையும், ஜெர்சியையும் வெளியிடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு புதுமையான முயற்சியை எடுத்து, அதில் திறமையான பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கும்  ஹேமச்சந்தர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் எனது பிள்ளைகள் அனைவரும்  நமக்கு பெருமையை தேடி தருவார்கள் என முழுமையாக நம்புகிறேன்…இன்னும் பல பி.வி சிந்துகளை உருவாக்கும் சக்தி இந்த போட்டிக்கு இருக்கின்றது….உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…”  என்று நம்பிக்கையுடன் கூறினார்  தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.