‘தடம்’ விமர்சனம்

சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் குற்றவாளிகள் எப்படித் தப்பிக்கிறார்கள், என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக சொல்லியிருக்கும் இந்த ‘தடம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எழில் ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமாக சைட் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் கவின் பல திருட்டு வேலைகளை செய்து சம்பாதிப்பவர்.

ஒருநாள் எழில் மிகவும் மனவேதனையில் இருக்கின்றார், அதே நேரத்தில் கவினுக்கு ரூ 9 லட்சம் வரை பணத்தேவை ஏற்படுகின்றது. இரண்டு பேருமே ஒரு இரவு தங்களுக்கான ஒரு தேவையை நிறைவேற்ற செல்கின்றனர்.

அப்போது ஒரு பணக்கார இளைஞரை அருண் விஜய் கொலை செய்கின்றார், அடுத்தநாள் போலிஸ் இந்த கேஸை கையில் எடுக்க, இதில் அருண் விஜய் புகைப்படம் அந்த வீட்டில் இருப்பது தெரிகின்றது.

ஆனால், இரண்டு அருண் விஜய் இருப்பதால், இவர்கள் யார், இவர்களில் யார் அந்த கொலையை செய்தார்கள்? என்பதை போலிஸ் துப்பறிய ஆரம்பிக்கின்றது, அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களே  இந்த தடம்.

 

இரு வேட அருண்விஜய்,இரண்டு பேரையும் விசாரிக்கும் போது அவர்கள் மாறி மாறி தங்கள் கதையை சொல்லும் இடம் மிகவும் ஈர்க்கின்றது, படத்தின் அருண் விஜய் தாண்டி நம்மை மிகவும் கவர்வது இவர்கள் கேஸை விசாரிக்கும் பெண் போலிஸாக வித்யா ப்ரதீப் தான்.

இந்த கேஸை முடித்தே ஆகவேண்டும் என்று அவர் அலைவதை கண்டு நமக்கே அட இப்போதே கண்டுப்பிடித்துவிட மாட்டாரா? என்று நினைக்கவைக்கின்றது, இந்த புகழ் அனைத்து மகிழ்திருமேணிக்கே சேரும். ஆம், இரண்டாம் பாதியில் எ யார் கொலை செய்துள்ளார் என்று அறிய  ல்லாரையுமே சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகின்றார்.

படத்தின் முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் மெதுவாக சென்றாலும், கதை உள்ளே சென்றவுடன் நம்மையும் திரைக்கதையுடன் அழைத்து செல்கின்றது, 

கெவின், எழில் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் அருண் விஜய், தனது கடினமான உழைப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். லுக்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், அவரது நடிப்பும், ஆக்‌ஷனும் அசர வைக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பவர், எந்த இடத்திலும் ஓவர் டோசஜ் இல்லாமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கெவின் மற்றும் எழில் இரண்டு வேடங்களையும் ரசிக்க வைத்துவிடுகிறார்.

தன்யா ஹோப், ஸ்மிருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்களும் குறைவான இடங்களில் மட்டுமே ஸ்கோர் செய்திருந்தாலும் அதை நிறைவாகவே செய்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கு ஜோடியாக அல்லாமல் கதையின் நாயகிகளாகவே இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பெப்ஸி விஜயன், யோகி பாபு, மீரா கிருஷ்ணன், ஜார்ஜ் என்று படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். காமெடிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் யோகி பாபு கூட படத்தில் குணச்சித்திர நடிகரை போல கவர்கிறார்.

திரைக்கதை யுக்தி மூலம் ஒரு படத்தை மக்கள் மனதில் எப்படி ஆழமாக பதிய வைக்கலாம் என்பதை இந்த ‘தடம்’ மூலம் மீண்டும் ஒரு முறை இயக்குநர் மகிழ்திருமேணி நிரூபித்திருக்கிறார்.பணத்திற்காக கெவின் கொலை செய்துவிட்டார் என்று படம் பார்ப்பவர்களை நம்ப செய்யும் இயக்குநர், அடுத்தடுத்த காட்சிகளில், எழில் கூட இந்த கொலையை செய்திருக்கலாமோ! என்று யோசிக்க வைக்கும்படி தனது திரைக்கதையை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அருண் விஜய் வரும் சில இடங்களில் எழில், கெவின் என்று பெயர் போட்டு காட்டுபவர், படத்தின் ஆரம்பத்தில் இருவரும் ஒருவர் தானோ, என்றும் நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கு காட்சிகளை படு சஸ்பென்ஸாக நகர்த்துகிறார்.   

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு ஒரு கிரைம் படத்திற்கான வேலையை சரியாக கொடுத்துள்ளனர், படத்தின் மிகப்பெரும் பலம் எடிட்டிங் தான், இரண்டு அருண் விஜய், அவர்களையும், அவர்கள் சொல்லும் கதையையும் அனைவருக்கும் புரியும் விதத்தில் கட் செய்து காட்டியுள்ளனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையையும், காட்சிகளையும் கச்சிதமாக வடிவமைத்த இயக்குநர் மகிழ்திருமேணி, நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் இருந்து வேலை வாங்கிய விதம் போன்றவற்றிலும் காட்டியிருக்கும் நேர்த்தி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில், ‘தடம்’ ரசிகர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிந்திவிடும் ஒரு பக்கா சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்.

Pin It

Comments are closed.