‘தரமணி’ விமர்சனம்

சென்னையில் ‘தரமணி’ பகுதி தகவல் தொழில் நுட்ப கேந்திரமாக விளங்கும் ஒரு பகுதியாகும்.

அந்தப்பகுதிவாழ் மேல்அடுக்கு மாந்தர்கள் பற்றிய கதை என்பதால் ‘தரமணி’ என்பதை ஓர் அடையாளமாக வைத்துள்ளார் ராம்.

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஏட்ரியன் நைட் ஜெஸ்ஸி, அழகம்பெருமாள், ஜே.எஸ்.கே., லிஸி ஆண்டனி, சாரா ஜார்ஜ், அபிஷேக் டி.ஷா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஜே.எஸ்.கே.புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், இசை – யுவன் சங்கர் ராஜா, எழுத்து, இயக்கம் – ராம்.

படத்தின் கதை என்ன?

அடை மழைக்காக சாலையோரம் ஒதுங்கும் ஆண்ட்ரியா சட்டென பின்னால் இருப்பவரை பார்த்து மிரள்கிறார். அந்த தாடிக்கார வழிபோக்கன் தான் நம்  நாயகன். அவர்கள்  இருவரும் பேசிக்கொள்வதிலேயே பின்னால் என்ன நடக்கப்போகிறது எனப் புரிந்து கொண்டு விடலாம்.

ஆண்ட்ரியா ஓர் ஆங்கிலோ இந்திய பெண். ஐடி நிறுவனத்தில்  வேலை . தன்னுடன் அம்மா,  தன் சிறுவயது மகன் என தனிக்குடும்பமாக வாழ்கிறார்.  ஐடி நிறுவன  வேலை என ஒருசொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் இவருக்கு பின்னாலும் ஒரு  கதை இருக்கிறது.சில சோகங்கள்  இருக்கின்றன.கதையின் நாயகனாக வசந்த்ரவி இவரின் பின்னாலும் ஒரு தனி ட்ராக் சோகங்கள் உண்டு.

இருவரும் ஒரு கட்டத்தில் நண்பர்களாக, பின் காதலர்கள் ஆகிறார்கள். சீக்கிரம் வந்த காதல் சட்டென விரிசலாகிறது. ஆண்ட்ரியா ஒரு பாதையில் செல்ல,  வசந்த்ரவி வேறான பாதையில் செல்கிறார். முன் பின் அறிமுகமில்லாத இவர்கள் எதற்காக சந்தித்தார்கள், ஏன் பிரிந்தார்கள், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக் கதை.

இதற்கிடையில் அஞ்சலி வேறு. அவர் ஒருவரை காதலித்து விட்டு, வெளிநாடு சென்றதும் மாறிவிட்டார். இவர் இப்படி மாறக்காரணம் என்ன என்பதையும் இப்படம் சொல்கிறது.

ஆண்ட்ரியா இக்கதைக்கு பொருத்தமானவர் என அவரது உடல் மொழியும்  நடிப்பும் சொல்கின்றன. அவருக்கே உரிய ஸ்டைல், தனக்கென ஒரு கொள்கை என சுற்றும் இவர் ஆண்களின் மாற்று பார்வையில் பரிதவிக்கும் பெண்களில் ஒருவர்.

சூழலை எதிர்கொள்ளும் விதம், தைரியம் என இருந்தாலும் தன் மகன் தான் தனக்கு உலகம் என நினைப்பவர். இக்கதையில் நடிப்பதற்கே இவருக்குத்தனி தைரியம் இருந்திருக்கிறது. கம்பி மேல் நடக்கும் பாத்திரம். விளைவு எதிர்மறையாகிவிடும் ஆபத்துண்டு.

வசந்த் ரவி அறிமுக நாயகனாக நடித்திருந்தாலும், திறமையை காட்ட இது ஒரு நல்ல  வாய்ப்பு.  காட்டியுமிருக்கிறார். படம் முழுக்க  இயல்பான நடிப்பு.

அஞ்சலி ஒரு கௌரவ வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இவரால் கதையில் ஒரு  வலுவான ஃபிளாஷ் பேக் சுழல்கிறது. இவரின் நடிப்பும்  இயல்பு.

இயக்குநர் ராம் சற்று வித்தியாசமாக ஆண் என்னும் போர்வையில் சிலர் பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறார் ராம்.பெரு வணிக மயமாதலில் அடியோடு மாறிப் போன நமது குடும்ப உறவுகள்.. நட்புகள் இதையெல்லாம் இன்னமும் புரிந்து கொள்ளாத நம்மிடையே இருக்கும் சில மனிதர்கள்.. இவற்றையெல்லாம் தொகுத்துதான் இந்தத் ‘தரமணி’யை செதுக்கியிருக்கிறார் .

இதமான யுவன் சங்கர் ராஜா  பாடல்கள்  இப்படத்திலும் தொடர்கிறது.

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்   மீண்டும் நம் எண்ணங்களில் தான் இருப்பதை தன் வரிகள் மூலம் காட்டியிருக்கிறார்.

ஆண்ட்ரியாவின் நடிப்பு கதைக்கு மெருகூட்டுவதை சொல்லாமல் இருக்க முடியாது.

கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படத்திற்கு பிறகு தனது மூன்றாவது படைப்பான இந்தத் ‘தரமணி’யிலும் தனது படைப்புத் திறனை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

இயக்குநர் பார்வையில்  ஆண்பெண் உறவுச்சிக்கல்களையும் மனித வாழ்வில்  தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கங்களையும் கூறியுள்ளார். இப்படம் எந்த முடிவையும் கூறாமல் முடிவை பார்வையாளருக்கே விட்டு விடுகிறது.

 

Pin It

Comments are closed.