‘தர்பார்’ விமர்சனம்

அரசியல் அதிகார பின்புலத்துடன் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போதை போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் கமிஷனரான ரஜினி ,சக்கர வியூகம் அமைத்து வேரோடு அழிப்பதுதான் கதை.

இதற்காக ரஜினி எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சவால்களும்தான் தர்பார் படம் கதை செல்லும் பாதை பயணம்.

மும்பை போலீஸ் கமிஷனராக ஆதித்யா அருணாச்சலம் பாத்திரத்தில் வரும் ரஜினி, போலீஸ் கமிஷனராக இருந்தாலும் சட்டப்படி மட்டுமே நடக்கும் ஆளல்ல. சட்டத்தை மீறுகிறீர்களே என்று கேட்கும் மனித உரிமை ஆணைய உறுப்பினர்களையே மிரட்டுபவர். அப்படிப்பட்டவர் மும்பை மாநகரில் நடக்கும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறார். மும்பைக்கே போதை மருந்து சப்ளை செய்யும் ஒரு வில்லனைக் கைதுசெய்து ஜெயிலில் போடுகிறார். சில நாட்கள் கழித்து விசாரணைக்காக அந்த வில்லனைப் பார்க்க ஜெயிலுக்குப் போனால், யாரோ ஒருவனைக் காண்பித்து ‘இவன்தான் அந்த வில்லன்’ என்கின்றனர்.

ரஜினி, ஆவேசமாகி ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற வில்லனைக் கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார். ரஜினியால் அவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இதனால் ரஜினிக்கு என்னென்ன சிக்கல்கள் உண்டாகின்றன? அவற்றை ரஜினி எவ்வாறு முறியடித்தார்? என்பதெல்லாம் பரபர திரைக்கதை.

ரஜினி ரசிகர்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஏ.ஆர்முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது . வில்லனை ஹீரோ பழிவாங்குவது கதைதான். ஆனால், முழுக்க முழுக்க ரஜினி படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.ரஜினியை இளமையாக காட்டியிருக்கிறார் .நல்ல நேர்த்தியான உடைகளில் ரஜினி செம ஸ்டைலாக வருகிறார்.

படம் தொடங்கி ஏழாவது நிமிடத்தில்தான் ரஜினி வருகிறார்.அதன்பிறகு அவரது தர்பார் தொடங்குகிறது. 13 வது நிமிடத்தில் வரும் ’கிழி’ பாடல் செம மாஸ்.

ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்தில் என்றும் மாறாத சுறுசுறுப்புடன் பரபரவென இருக்கிறார் ரஜினி. இந்த வயதிலும் இப்படியொரு எனர்ஜியா ?

ரஜினிக்குப் பிறகு படத்தில் கவனிக்க வைப்பவர், ரஜினியின் மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸ். வள்ளி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாகவே தன்னுடைய பங்கைச் செய்துள்ளார்.

லில்லி கதாபாத்திரத்தில் வந்து போகிறார் நயன்தாரா.சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு வேலையில்லை.

ஓரிரு காட்சிகளைத் தவிர, தான் வருகின்ற எல்லா காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. அதிகம் பேசாமல், அடக்கி வாசித்திருக்கும் யோகி பாபுவின் டைமிங் வசனங்கள் அனைத்தும் சிரிப்பு வெடிகள். சைக்கிள் கேப்பில் எல்லாம் ரஜினியைக் கலாய்க்க, அதற்கு அவர் “உன்ன வச்சிக்கிறேன்…” என்று சொல்லும் இடங்களில் எல்லாம், தியேட்டரே அதிர்கிறது.
மற்ற துணைக் கதாபாத்திரங்கள் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

ரஜினியைப் போலவே திரைக்கதையும் வேகம்.இருக்கும் சில லாஜிக் மீறல்களை எல்லாம் ரஜினியிஸம் மறக்கடித்து விடுகிறது.

‘ரஜினியின் நடிப்பு மாஸ் என்றால், அனிருத்தின் இசையோடு சேர்ந்து பக்கா மாஸாகியிருக்கிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரஜினியும் நயன்தாராவும் இளமைக்குத் திரும்பியிருக்கின்றனர். ராம் – லட்சுமண், பீட்டர் ஹெய்ன் ஆகியோர்களின் இயக்கத்தில் சண்டைக் காட்சிகள் அனைத்தும் ரஜினி ரசிகர்களுக்கு முழுசாப்பாடு.

வில்லனாக நடித்திருக்கும் சுனில் ஷெட்டி, தனது வேலையைச்செய்துள்ள விதம் கச்சிதம்.

‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’, ‘ஐ யாம் எ பேட் காப்’, ‘நம்புறவனுக்கு வயசுங்கிறது நம்பர்தான்’ என ரஜினிக்கான பஞ்ச் வசனங்களும் ஆங்காங்கே உண்டு.

ரஜினியின் தீவிர ரசிகர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி பார்த்துப் பார்த்து ரஜினிக்கான மாஸ் விஷயங்கள் அனைத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினியைத் தங்களுடைய தலையில் தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடும்படி இப்படமும் இருக்கும்.

மொத்தத்தில் ரஜினி தன் ‘தர்பார்’ எது என்பதைக்காட்டும்படி படம் உள்ளது.என்றாலும் அனைவரும் பார்க்கும்படியான சிறந்த பொழுது போக்குப்படமாகவும் உள்ளது..

Pin It

Comments are closed.