‘தர்மதுரை’ விமர்சனம்

dharma-duraiவிஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ்,ராதிகா, ராஜேஷ்,கஞ்சா கருப்பு, எம். எஸ். பாஸ்கர்,  நடித்துள்ளனர். சீனுராமசாமி இயக்கியுள்ளார்.

அந்தக்கிராமத்தில் பார்ப்பவரிட மெல்லாம் பட்லர் இங்கிலீஷ் பேசிக் கொண்டுதிரிகிறார் விஜய் சேதுபதி. ஊரில் யாருக்கும் அடங்காமல் வீட்டுக்குள்ளும் விரோதம் சம்பாதித்து குடித்து முறுக்கிக் கொண்டு திரிகிறார்.

ஊரிலு அவரது அண்ணன் தம்பிகள் சீட்டு பிடித்து வருகிறார்கள். விஜய் சேதுபதியோ ‘அவர்கள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் ‘என்று சீட்டுப் பணம் போட்டவர்களிடமே போட்டுக் கொடுத்து உளறுகிறார். இவரது ரவுசு தாங்காமல் உடன் பிறந்தவர்களே இவரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் போடுகிறார்கள்.

ஒரு நாள் வீட்டிலிருந்து துணிமணிப்  பையுடன் வெளியூர் கிளம்பிப் போய்விடுகிறார். அவசரத்தில் அவர் கிளம்பிப் போகும்போது எடுத்துக் கொண்டு போன பையில்தான் ஊர்க்காரர்களின் சீட்டு பிடித்து வைத்திருந்த மொத்த பணமும் இருக்கிறது. பணத்தை தர்மதுரை திருடிக் கொண்டு போய்விட்டதாக தர்மதுரையின் உடன் பிறந்தவர்கள் சொல்ல தாய் மட்டும் அதை நம்ப மறுக்கிறாள்.பெரிய பிரச்சினையாகி பணத்தை இழந்த தர்மதுரையின் குடும்பத்தினர்  அவமானப்பட்டு நடுத்தெருவுக்கு வருகிறார்கள்.

விஜய் சேதுபதி ஒரு மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்குப் படித்தவர். தன்னுடன் படித்தவர்களைத் தேடிப் போகிறார். இப்படி முன்கதை விரிகிறது.விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே எல்லாரும் மருத்துவக் கல்லூரியில்  ஒரு வகுப்பு மாணவர்கள். சேவை நோக்கில் மருத்துவம் படித்த நல்லவர்கள். அப்படிப்பட்டவர் ஏனிப்படி குடிகாரர் ஆனார் என்று கதை செல்கிறது. முடிவு என்ன என்பதே ‘தர்மதுரை’ கதை.
ஒரு கிராமத்து வாலிபனின் டைரிக் குறிப்பு போல கதை செல்கிறது. படிப்பு சார்ந்த உலகம், வீடு சார்ந்த நிகழ்வுகள். திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று கதை,தன் போக்கில் செல்கிறது. இயல்பான போக்கில் செல்வதால் வேகக்குறைவு போலத் தோன்றலாம். ஆனால் தனக்கான வேகத்தை தேடிக்கொண்டுள்ளது கதை. படத்தில் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறையவே உள்ளன.

விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ராதிகா ,ராஜேஷ்,கஞ்சா கருப்பு, எம். எஸ். பாஸ்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் நடிப்பில் ஸ்கோர் செய்ய இடமுண்டு. யுவன் -வைரமுத்து கூட்டணியில் பாடல்கள் சுகராகங்கள். கதையின் தலையெழுத்து நன்றாக இருக்கும் போது சீனுராமசாமி தன் படத்துக்கு ரஜினிபடத் தலைப்பை தேடிப் போயிருக்க வேண்டாம்.Dharmadurai_29