கமல், ரஜினி படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் :திரையுலகிற்கு புது பிரச்சினை

   இப்படியே போனால்…!

இப்போதெல்லாம் எந்தப் படத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு,போராட்டம் வரும் என்று திரையுலகம் பீதியில் இருக்கிறது.

இப்படி வருகிற எதிர்ப்பு சில நேரம் விளையாட்டுத்தனமாக இருக்கிறது சில நேரம் விபரீதமான ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலான போராட்டங்கள் விளம்பர நோக்கிலோ குறுக்கு வழியில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கிலோதான் உள்ளன.

இதை  இப்படியே வளர விட்டால் என்ன ஆகும்? எப்படித்தான் ஆகும்? இப்படித்தான் ஆகும்.சில அமைப்புகளின் போராட்ட அறிவிப்புகளைப்  பாருங்கள்.

கமல், ரஜினி படம் வந்தால் கண்டிப்பாய் எதிர்க்கும் சங்கம்!

kamal-rajini-639நாட்டில் எவ்வளவோ சங்கங்கள் உள்ளன. போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் அவை பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ளாது சினிமாக்காரர்களுக்கு எதிராக யார் போராட்டம்  நடத்தினாலும், ஒரு சாதா தபாலில் புகார் கடிதம் போட்டாலும் உடனே செய்தி வெளியிடுகிறார்கள். குறிப்பாக கமல், ரஜினி என்றால் உடனே செய்தி வரும். ரஜினி வீட்டு நாய் குளிப்பாட்டுகிறவர் வீட்டு நாய்க்கு ஜுரம் வந்தால்கூட செய்தியாகிறது. விடுவோமா? இதை புரிந்து உருவானதே எங்கள் சங்கம்.

சாதாரண மனிதர்கள் இவர்கள் இருவர் மட்டும் எப்படி இவ்வளவு செல்வாக்காக இருக்கிறார்கள்?இது அநியாயம் இல்லையா?அவர்களிடம் நேரடியாக  எங்களால் மோத முடியாது. எனவே அவர்கள் படம் வரும் போது ஏதாவது செய்து விளம்பரம் தேடி சங்கத்தை பிரபலமாக்கிவிட வேண்டியதுதான். இனியும் விடமாட்டோம். ரஜினி, கமல் படம் வந்தால் கதை பற்றியோ  போஸ்டரின் நிறம் பற்றியோ சர்ச்சைகளை எழுப்புவோம்.லோகோ வந்தால் கூட விடமாட்டோம்.நல்லதை விட கெட்ட செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்கள் இருக்கும் வரை எங்களுக்குக் கவலை இல்லை. ஊக்கமுடன் செயல்படுவோம்.ஊரார் செலவில் விளம்பரம் பெறுவோம்.

 beggarபிச்சைக்காரர்கள் அகில இந்திய கூட்டமைப்பு!

படங்களில் எங்களை இழிவாகக் காட்டி வருகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.  பிச்சைக்காரர்களை அழகு குறைந்தவர்களாக அழுக்கு மனிதர்களாகக் காட்டி வருகிறார்கள். இந்தத் தொழிலில் நாங்கள் எப்படி வந்தோம் தெரியுமா? நாங்கள் உருவாக இந்த சமுதாயம், அதிகார வர்க்கம்தான் காரணம். மனம் போனபடி எங்களை காட்ட இனியும் முயற்சி செய்யாதீர்கள்.  பிச்சைக்காரர்கள் சம்பந்தமாக இனி காட்சிகள் எடுப்பதாக இருந்தால் எங்களிடம் திரைக்கதை புத்தகத்தை காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே படமெடுக்க வேண்டும். பிச்சைக்கார வர்க்கம்தான்உலகெங்கும் உள்ள வர்க்கம். அனைத்து மொழி, மாநில எல்லைகளை கடந்த வர்க்கம். எச்சரிக்கை எல்லாரையும் திரட்டிப் போராடுவோம்.

அனைத்திந்திய பலே திருடர்கள் கூட்டமைப்பு !

எங்கள் தொழில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே உருவானது. நல்லதாக இல்லை என்றாலும் வள்ளுவரே எங்களைப்பற்றி கூறியிருக்கிறார். இதிலிருந்து இதன் தொன்மை பெருமை விளங்கும்.

போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைந்திருப்பது நாங்களும் போலீஸ்காரர்களும்தான். எங்கள் உறவு பலமானது. பாரம்பரியச் சிறப்பு மிக்கது- நாங்கள் இல்லை என்றால் பல போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்காது.

எங்களை இழிவு படுத்தும் வகையில் கதை எழுதுகிறார்கள். காட்சி வைக்கிறார்கள். இவர்களுக்கு என்னே துணிச்சல்! ‘திருடாதிருடா’, ‘திருட்டுப் பயலே’ என்று கூட பெயர் வைக்கிறார்கள் .அவ்வளவு தைரியம் வந்து விட்டதா இந்த சினிமாக்காரர்களுக்கு?.

இனி எங்களைப்பற்றி இழிவாகப் பேசக்கூடாது. திருடர் ,திருடன் சார் என்றே அழைக்கவேண்டும். இல்லை என்றால் எங்களது பிக் பாக்கெட்,ஜேப்படி ,ராபரி, ஏடிஎம் கொள்ளையர், பீரோ புல்லிங் கொள்ளையர், செயின் அறுப்போர்,மொள்ளமாரி,கேப்மாரி போன்ற பல தளங்களில் இயங்கும் பல கிளை அமைப்பு களோடு இணைந்து போராட வேண்டியிருக்கும்.

திருடனை வைத்து காமடி எல்லாம் செய்கிறீர்கள்.இந்தத் தொழிலில் உள்ள பிரச்சினைகள். பாதுகாப்பு இன்மை, அபாயம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள்.எச்சரிக்கை.

lazymanகுப்புறப் படுத்து குதர்க்கமாக போசிப்போர் சங்கம்!

எங்கள் சங்கத்து பெயரைப் பார்த்து விட்டு ஏளனமாகச் கருதிவிட வேண்டாம். நாங்கள் தான் மெஜாரிட்டியாக இருக்கிறோம். பேஸ்புக், இண்டர் நேட், வாட்ஸ் அப், ட்விட்டர் என்று என்று கலக்கி வருவது நாங்கள்தான். நாங்கள் அடிக்கும் கமெண்ட் கருவை அலேக்காக சுட்டு படங்களில் பயன் படுத்தி காசு பார்த்து வருகிறார்கள் அப்படி உள்ளதை பட்டியலிட்டு காப்புரிமை கோரி ராயல்டி பெறுவதே எங்கள் உரிமை. மீறினால் போராட்டம் வழக்கு என்று இறங்குவோம். கண்டு கொள்ளாத படங்களை  எல்லா சமூக ஊடகங்களிலும் கிழி கிழியென்று கிழிப்போம்.

எந்தக் கதை எடுத்தாலும் எங்கள் சொந்தக்கதை என்பவர்கள் சங்கம்!

இப்போது கதை திருட்டுகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. எந்தப் படம் பார்த்தாலும் நாங்கள் திண்ணையில்பேசிய கதையாக, மால்களில் பேசிய கதையாக, டாஸ்மாக் பார்களில் உளறிய கதையாக, ஸ்டுடியோ வாசலில் பேசிய கதையாக இருக்கிறது. நாங்கள் பேசிய கதையை யாரோ ஒட்டுக் கேட்டு விரிவுபடுத்தி படமாக எடுத்து விடுகிறார்கள். எனவே படமெடுக்கும் முன்பு  கதையை எங்களிடம்காட்ட வேண்டும். காட்டும் முன்பு சங்கத்துக்கு 10 ஆயுள் சந்தாகட்டணமாகச் செலுத்த வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி போராடுவோம்.

ஹாலிவுட் பட ரசிகர்கள் சங்கம்!

எந்தப் படம் வந்தாலும் அது ஹாலிவுட்டில் வந்த படத்தின் கதையை உல்டா செய்தது போலவே இருக்கிறது. நாங்கள் எவ்வளவு ஹாலிவுட் படங்களை காலைக்காட்சி பார்த்து அறிவை வளர்த்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

கெயிட்டி, கேசினோ திரையரங்குகளில்ஒருகாலத்தில் எங்களுக்கு வாடிக்கையான இருக்கைகளே  இருந்தன .

இனியும் இதைத் தொடர அனுமதிக்க மாட்டோம். படம் வரும் 3 நாள் முன்பு இது ஜுராசிக்பார்க் காப்பி என்றோ டெர்மினேட்டர் தழுவல் என்றோ கேசினோராயல் நழுவல் என்றோ படத்தை முடக்குவோம்.ஆளுக்கேற்ற மாதிரி பேரம் பேசிப் பணம் பறிப்போம்.

glamourgirlகவர்ச்சி நடிகைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு!

கவர்ச்சி நடிகைகளை கிள்ளுக்கீரையாக காட்டுவது வன்முறை. அது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. படங்களில் விளம்பரத்துக்காக இவர்கள் பயன்படுத்தப் பட்டு கறிவேப்பிலையைப்போல தூக்கியெறியப் படுகிறார்கள். தொப்புளை, மார்புகளை, இடுப்பை எல்லாம் க்ளோஸப் காட்சிகளாக்கி அதையும் ஸ்லோ மோஷனில் காட்டிவிட்டு காசு பார்க்கிறார்கள். ஆனால் உருப்படியாக அவர்களுக்கு காட்சிகள் வைப்பதில்லை. கதையில்லாமல் கூட படமெடுக்கிறார்கள்.கவர்ச்சி நடிகைகளின் ச தையில்லாமல் படமெடுப்பதில்லை.

இதை எதிர்த்து போராடுவோம். பிறமகளிர் இயக்கங்களுடன் இணைந்து போர்ப்பரணி பாடுவோம் என  எச்சரிக்கிறோம்.

 

டாஸ்மாக் ரசிகர்கள் நடவடிக்கை பேரவை!

drinker4தமிழ்நாட்டிலேயே வலுவான அமைப்பான இந்த டாஸ்மாக் ரசிகர்கள் நடவடிக்கை பேரவை யின்அடுத்தகட்ட நடிவடிக்கை ஆக்ரோஷமாக இருக்கும்.

இந்த ஆள் பலம் பொருந்திய அமைப்பை எல்லாரும் மறந்து விடுகிறார்கள். இப்போது வருகிற எல்லா படங்களிலும் குடிகாரர்கள் பற்றி காட்சிகள் வைக்கிறார்கள். உடனே எச்சரிக்கை வாசகம் பளிச்சிடுகிறது ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று. இதை அகற்றவேண்டும் என்பது முதல் கோரிக்கை. குடிகாரர்களை இழிவாகச் சித்தரிக்கிறார்கள். குடிகாரனாக இருப்பது என்பது எவ்வளவு சிரமமான காரியம் தெரியுமா? கடன் வாங்கி ,வட்டிக்கு வாங்கி, அதை இதை அடகு வைத்து சிலநேரம் மனைவியின் தாலி அறுத்துக் கூட குடிக்கிறோம். இந்தப் பதவியை தக்க வைக்க நாங்கள் படும் போராட்டம் யாருக்காவது தெரியுமா?

இனியும் எங்களை இழிவு படுத்தினால் ஃபுல் பாட்டிலை ராவாக  அடித்துவிட்டு ராவோடு ராவாக வள்ளுவர்கோட்டம் அருகே தடுமாறாமல் சுதிமாறாமல் கோஷம் போடுவோம். எங்கள் போராட்டம் வலுவாக இருக்கும். கூட்டத்தைக் கண்டு மிரண்டு போலீஸ் தடியடி நடத்தினால்கூட அங்கேயே கால் பின்னி கிடப் போமே தவிர மற்றவர்கள் போலச்சிதறி ஒட மாட்டோம் என்பதை எச்சரிக்கையுடன் தெழிவித்துக் கொழ்கிறோம். சாரி… தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிங்கிலீஷ் எதிர்ப்பு இயக்க ஒன்றியம்!

இப்போது தமிழை மறந்து விட்டார்கள். எந்தப் படத்தில் பார்த்தாலும்  தமிழைப் பேசுவது இல்லை. தமிங்கிலீஷ் தான் பேசுகிறார்கள். இதை வன்மையாகக் கண்டிக் கிறோம்.

ஒரு வார்த்தை தமிங்கிலீஷ் இருந்தாலும் அரசு வரிவிலக்கு அளிக்கக் கூடாது ,படத்தை தடை செயப்கோருவோம்.இதை எதிர்த்து போராட்டம் செய்வோம்.

அகில இந்திய அகிம்சாவழி  இயக்கம் (ஒரிஜினல்)!

விலங்கு வதை ,பறவை வதைக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. மேனகா காந்தி வந்தபிறகு அந்த விழிப்புணர்வு வர ஆரம்பித்துள்ளது. ஆனால் சினிமாவில் காட்டப்படும் மனிதவதைக்கு எதிராக போதிய சட்டங்கள் இல்லை. நாட்டில் எங்குமே இல்லாதவகையில் காட்டப்படும் ஆயுதங்களை தடைசெய்ய வேண்டும். அப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் படத்தையே தடை செய்யலாம். ஊமைத்தங்காய் தலைகொண்ட தடிகள்.விதவித பிச்சுவாக்கள், சுருள் கம்பிகள், கத்திகள் எல்லாம் எங்கும்  நடைமுறையிலேயே இல்லை. படத்தின் க்ளைமாக்ஸில் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில் வைத்து கதாநாயகனை, நாயகியை, குழந்தைகளை தூக்கிச் சென்று மிரட்டும் காட்சி வந்தால் உடனே படத்தை தடை செய்யவேண்டும். வாளால்  அறுப்பது, டிரில்லிங் மிஷினால் துளையிடுவது, தலையில் தடியால் அடிப்பது போன்ற காட்சி கள் வைக்கும்இயக்குநரையே கைது செய்ய வேண்டும்.

இதை இப்படியே வளர விட்டால் என்ன ஆகும் என்று ஒரு கற்பனைதான் இது . ஆனால் நாளை இது நடந்தாலும் ஆச்சரியமில்லை.!
கற்பனை: சூரி

,