‘திறந்திடு சீசே’ விமர்சனம்

seese1நள்ளிரவு நேரத்தில்  ஒரு பஃப்.. குடியும் கும்மாளமாக இருக்கிறது .சற்று நேரமானதும் கூட்டம் கலைகிறது. ஒருத்திமட்டும் போதையில் தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது பஃப்பில் வேலைசெய்யும் ஜான்,உசைன் இருவருக்கும் கண் .அவள் கழிவறை செல்கிறாள். தேடிப் போகிறார்கள் அங்கே  அவள் கீழே விழுந்து கிடக்கிறாள். இறந்து விட்டாளோ என்று நினைக்கிறார்கள். ஆனால் இறக்கவில்லை. தூக்கிக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவள்தான் சாரு.

மயக்கம் தெளிந்தவள் ‘என்னை உங்களில் யாரோ ஒருவன் கற்பழித்து விட்டீர்கள் அவன் யார் என்று தெரியாமல் வெளியே செல்ல மாட்டேன்’  என்று துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறாள்.

இருவரும் நீயா நானா என்ற குழப்ப,குழம்ப  ஜான் ஒருவன் மேல் அவள் அதிகம் சந்தேகப்பட அவனோ தான் நல்லவன் என்று நிரூபிக்க முன்கதை சொல்கிறான்.  அப்போது அவனது மனைவி வர  சாரு அவளை சுட்டுவிட ஜான் பதற தன்னைக் கற்பழித்தவனை சாரு என்ன செய்கிறாள் என்று பார்த்தால் ,நடப்பது யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ்.

படம் முழுக்க பஃப்பில் நடந்தாலும் மனிதனை மது எப்படி அடிமையாக்குகிறது. மது அடிமையின் பல்வேறு நிலைகள் என்ன என்பதை விவரிக்கிறது கதை. முடிவில் மதுதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்று கூறுகிறது.

பாதிப்படம் ஒரு பஃப். என்கிற நான்கு சுவருக்குள் நடக்கிறது இருந்தாலும் போரடிக்கவில்லை.

படத்தில் பஃப் நண்பர்களில் ஒருவராக வரும் நாராயண்,இன்னொருவராக மது அடி மையாக வரும் வீரவன் ஸ்டாலின் ,துப்பாக்கி நாயகி தன்ஷிகா என இந்த மூவரும் படத்தை பகிர்ந்து ஆளுக்கொரு விதத்தில் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஒரே இரவில் நடக்கும் இக்கதையில் வரும் யதார்த்தமான வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.

கலகலப்பு    கிளுகிளுப்போடு அதிர்ச்சிகரமான நிஜத்தையும் அறைந்து கூறுகிறது படம்.மதுவுக்கு எதிராக ஒரு கதையை வயது வந்த வாலிபர்களுக்கு ஏற்ற வகையில் விறுவிறுப்பாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்  இயக்குநர் நிமேஷ் வர்ஷன். அவருக்கு ஒளிப்பதிவாளர் குளஞ்சி குமாரும் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவும் கை கொடுத்து இருக்கிறார்கள்.

வயது வந்த அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.

Pin It

Comments are closed.