த்ரிஷாவின் அப்பாவாக நடிக்க ஆசை: அப்பா நடிகர் ஒருவரின் ஆசை

onk-sentilசென்ற வாரம் வெளிவந்து அனைவரின் நல் வரவேற்பையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் “ ஒரு நாள் கூத்து “. இத்திரைப்படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான நடிகை நிவேதா பெத்துராஜின் தந்தையாக வந்து நமது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் செந்தில். “ பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காரு ல “: என்று இவரது அழகை படத்தின் ஒரு காட்சியில் நடிகர் பாலா சரவணன் திரைப்படத்தில் வர்ணித்திருப்பார். அந்த அளவுக்கு அழகும் , திறமையும் தன்னிடத்தே கொண்ட நடிகர் செந்தில் தன்னை பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் 1995 ஆம் ஆண்டு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் பயின்றேன். படித்து முடித்த பின்னர் பல்வேறு டி.வி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடித்து வந்தேன். ஒரு கட்டத்தில் இப்படியே டி.வி சீரியல்களில் நடித்து வந்தால் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கண்ட கனவு நிறைவேறாமல் போய்விடும் என்பதால் சீரியலில் நடிப்பதை தவிர்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

சீரியலில் நடிப்பதை தவிர்த்த பின்னர் சினிமாவில் எப்படி நடிக்க வாய்ப்பு தேடுவது என்று தெரியவில்லை. பின்னர் திரைப்படங்களில் மேனேஜர் ஆகப் பணியாற்றலாம் , அதன் மூலம் வாய்ப்புகளை கிடைக்கும் என்று எண்ணி சினிமாவில் மேனேஜராக முடிவு செய்தேன். இதற்கு எனக்கு எடுத்துக்காட்டாக நடிகர் சத்யராஜ் அவர்களை எடுத்து கொண்டேன் ஏன் என்றால் அவரும் சினிமாவில் மேனேஜராக இருந்து நடிகராக ஆனார் என்பதால். ஆக நான் அந்த வழியை பிடித்து பயணிக்கலாம் என்று முடிவு செய்து. நான் மேனேஜர் ஆகும் முயற்சியில் வெற்றியும் கண்டேன்.

முதலாவது வாய்ப்பே எனக்கு நவரச நாயகன் கார்த்திக் அவர்கள் நடித்த “ முதலாம் சந்திப்பு “ படத்தில் கிடைத்தது. அப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.அப்படத்தின் படபிடிப்பு சுமார் 100 நாட்கள் நடைபெற்றது. நான் வேலை செய்த முதலாம் சந்திப்பு படத்தின் படபிடிப்புக்கு மட்டும் நடிகர் கார்த்திக் அவர்கள் சரியாக வந்துவிடுவார். இதனாலேயே எனக்கு அப்போது அனைவரிடமும் நல்ல பெயர் கிடைத்தது. அதன் பின்னர் நான் நிறைய சிறிய படங்களில் பணியாற்றினேன்.  எனக்கு முதலாவதாக பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய படமாக அமைந்தது எஸ்.பி. சரண் அவர்கள் தயாரித்த “ மழை “ என்னும் பிரம்மாண்டமான படம் தான். அதிலிருந்து தயாரிப்பாளர் எஸ்.பி.சரணுடன் நான் சென்னை-28 , குங்குமபூவும் கொஞ்சுபுறாவும் , ஆரண்ய காண்டம் என்று  அனைத்து படங்களிலும் எக்ஸிக்யுடிவ் மேனேஜராக பணியாற்றினேன் இது எனக்கு நல்ல பெயரை எல்லோரிடமும் வாங்கி தந்தது. அப்படியே என்னுடைய பயணம் சென்று கொண்டு இருந்த போது. செல்வ குமாரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

பின்னர் நாங்கள் இணைந்து அவர் தயாரித்த  திருடன் போலீஸ் படத்தில் பணியாற்றினோம். அப்படத்தில் சரண் அவர்கள் இணை தயாரிப்பாளராக இருந்தார். இப்போது நான் செல்வ குமார் அவர்களோடு இணைந்து அவர் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் பணியாற்றி வருகிறேன். செல்வ குமார் தயாரிப்பாளர் நான் நிர்வாக தயாரிப்பு. இப்போது ஒரு நாள் கூத்து , ப்ருஸ் லீ போன்ற படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒருநாள் கூத்து படத்தின் இயக்குநர் நெல்சன்  கனமான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு படத்தில் அளித்தார். இப்போது அந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நான் நடிகனாக வேண்டும் என்று கண்ட கனவை இப்படத்தில் வாய்ப்பு அளித்து நிறைவேற்றி வைத்த இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நானும் எல்லோரையும் போல ஹீரோவாக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். காலம் கடந்து இப்போது எனக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நான் முழுமையாக பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். ஒரு நடிகன் என்றால் இயக்குநர் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். இந்த சின்ன வயதில் அப்பாவாக நடித்ததில் நான் பெருமை கொள்கிறேன். நானும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து தான் சினிமாவிற்கு நடிக்க வந்தேன்.

இப்போது அப்பாவாக நடிப்பத்தால் நடிகர் விஜய் , அஜித் ,  , நயன்தாரா போன்ற அனைவருக்கும் அப்பாவாக நடிக்க ஆவலாக உள்ளேன். என்னுடைய நடிப்பில் நடிகர் விஜய் குமார் அவர்களின் சாயல் இருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். தற்போது நான் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ப்ருஸ் லீ திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் அதை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் சர்வர் சுந்தரம் படத்தில் பிஜேஷ் நாகேஷின் தந்தையாக நடித்து வருகிறேன் ”என்று கூறினார்.