நடிக்க வந்த பின்புதான் ஒழுங்கையும் பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன் ‘ஆடுகளம்’ நரேன்

aadukalam-naren-rsஅண்மைக்காலமாக எந்தரகப் படத்திலும் முகம் காட்டி தன்னை அழுத்தமாகப் பதிய வைத்து வருபவர் ‘ஆடுகளம்’  நரேன்.

நல்லவராகவோ கெட்டவராகவோ  எதுவாயினும் நடிக்கத் தயங்காமல் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் மிளிர்பவர், ஒளிர்பவர்  இந்த நரேன்.

இனி நரேனுடன் பேசுவோம்.

ஆடுகளம்’ படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்ற உங்களுக்கு அதற்கு முந்தைய நிலை எப்படி இருந்தது?

நான் முதலில் நடித்த படம் ‘ஓம் சரவணபவா’ சிவன் வேடம். பிறகு ‘ராமன் அப்துல்லா’வில் அடியாள். பிறகு டிவியில் பாலுமகேந்திராவின் கதைநேரம் தொடர். அதற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு வரவில்லை. டிவி பக்கம் போனேன். சில காலம் கழித்து ‘அஞ்சாதே’ ‘ஜாம்பவான்’ ‘ஜூலிகணபதி’ இப்படி பல படங்கள் நடித்தாலும் ‘ஆடுகளம்’ படம்தான் அழுத்தமான பெயரை வாங்கிக் கொடுத்தது.

அந்தப் படவாய்ப்பு அனுபவம் பற்றி..?

நான் பாலுமகேந்திரா அவர்களின் படத்தில் நடித்த போதும் அவரது கதை நேரத்தில் நடித்தபோதும் ஓர் உதவி இயக்குநரைப் போலவே வேலை பார்த்தேன். அப்போது உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன் எனக்கு நல்ல நண்பன்தான். அவர் ‘பொல்லாதவன்’ இயக்கிய போதே நான் நடிக்க வேண்டியது. ‘ஆடுகளம்’ படத்தில் கதை விவாதத்தில் கலந்து கொண்டேன்.

அந்த ரத்தினசாமி கேரக்டர் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதற்கு மட்டும் நடிகர் யாரையும் தேர்வு செய்யாமல் இருந்தார். யார் நடிக்கப்போகிறார் என்று கேட்டேன். சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தார். கடைசியில்தான் சொன்னார் நீங்கள்தான் என்று. நட்புக்காக வாய்ப்பு கொடுக்கிறாயா என்று கேட்டேன். நண்பனுக்கு தேவை என்றால் உதவி செய்யலாம். நடிக்கவைக்க முடியுமா? இது ஒரு நடிகனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புதானே தவிர நரேன் என்கிற நண்பனுக்கு அல்ல என்றார் தெளிவாக. அந்தப்படம் வெளிவந்ததும் ரஜினிசார் பாராட்டு உள்பட பலரது பாராட்டும் கிடைத்தது.

வெற்றிமாறன் என் இனிய நண்பன் மட்டுமல்ல நல்ல இயக்குநர் மட்டுமல்ல. தீயாய் வேலை செய்யும் குமாரு. பேயாய் வேலை செய்யும் பெரியசாமி.. இப்படி எவ்வளவோ கூறலாம். அந்த அளவுக்கு  முரட்டுத்தனமான வேலைக்காரன்.உழைப்பாளி.

பாலுமகேந்திரா, வெற்றிமாறன் அனுபவங்கள் எப்படி?

நான் இந்த குருவிடமும் சிஷ்யனிடமும் வேலை பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் கற்றுக் கொள்கிறேன்.

இப்போது வரும் இளைஞர்களின் புதிய முயற்சிகளில் எல்லாம் இருக்கிறீர்களே?

narenkaduபெரிய இயக்குநர் படங்களிலும் இருக்கிறேன். புதிய இளைஞர்கள். இயக்குநர்கள் படங்களிலும் இருக்கிறேன் இருவரும் தேடும்படி பொருத்தமான இடத்தில் இருப்பதாக நினைத்து பெருமைப் படுகிறேன்.

டிவி மூவி அனுபவ வேறுபாடு என்ன?

டிவியில் இடைவிடாது வேலை வாங்குவார்கள் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் எடுப்பார்கள். சினிமாவில் மூச்சுவிட நேரம் இருக்கும். டிவியில் நான் தொடர் முழுவதும் வர மாட்டேன். சிறுசிறு வேடங்களில்தான் வருவேன். அளவோடு நடிக்க வேண்டும்.  டிவியில் நிறைய வருபவர்களை சினிமாவில் ரசிக்கமாட்டார்கள். இதனால் நானும் பாதிக்கப் பட்டேன். ‘பொல்லாதவன்’ வாய்ப்பு அதனால்தான் பறிபோனது.

உங்களுக்கான இடம் எது? யாருடைய இடத்தில்  இருக்க  அல்லது பிடிக்க ஆசை?

யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கவும் முடியாது. யாரும் யாருடைய இடத்தையும் இட்டு நிரப்பவும் முடியாது. ஒருவர் போனால் அந்த இடம் இட்டுநிரப்ப முடியாத வெற்று இடம்தான். லூஸ்மோகன், டவுசர்பாண்டி இடத்தைக் கூட யாரும்இட்டு நிரப்பவும் முடியாது.  மார்க்கெட் ,வியாபாரத்தை, படவாய்ப்புகளை வைத்து பேசுகிறார்களே தவிர யாரும்  யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது.எனக்கான இடம் எது?நான் இயக்குநரின் நடிகன். இயக்குநர் தரும் பாத்திரத்தை செய்வது என் வேலை. அவ்வளவுதான்.

நடிகர்களில் நண்பர்கள்?

எல்லாருடனும் படத்தில் நடிக்கும் போது நன்றாகவே பழகுவேன்.எல்லாரும் நன்றாகவே பழகுகிறார்கள். விஜய், விஜய்சேதுபதி, ஜீவா, உதயநிதி, ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, சத்யராஜ் எல்லாருமே பழக இனியவர்கள். என்னைப் பெரிதும் பாதித்த நடிகர் நாசர். அவருடன் ‘ஜிகர்தண்டா’ ‘ஒஸ்தி’ படங்களில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. அவர் ‘அஞ்சாதே’ வில் என் நடிப்பைப் பாராட்டியதும் பெருமையாக இருந்தது.

இப்போது நடிப்பவை?

அதர்வாவுடன் ‘ஈட்டி’ யில் அவரது அப்பா, ‘ஈட்டி’யில் கோச், ‘ஆடாம ஜெயிச்சோமடா’வில் படத் தயாரிப்பாளர், ‘விலாசத்தில் போலீஸ், ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் மேனேஜர், ‘காடு’ படத்தில் பாரஸ்ட் ஆபீசர், ‘கவாத்து’ வில் தொழிலதிபர் இப்படி நிறைய  பாத்திரங்கள் வாய்ப்புகள் .

மறக்க முடியாத பாராட்டு?

பெரிய இடங்களில் வந்ததைவிட கண்ணில்படும் சராசரி மனிதர்கள் பாராட்டுவது மறக்க முடியாது. ‘நண்பன்’ படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு இந்தமாதிரி அப்பா எனக்கில்லையே என்று பலரும் சொன்னதை மறக்க முடியாது. பலரும் என்னை அப்பாவாகப் பார்க்கிறார்கள். இது என்னை மாற்றியிருக்கிறது.

எல்லாரும் வேலைக்கோ தொழிலுக்கோ போகும் முன்பு ஒழுங்கையோ பண்பாட்டையோ கற்றுக்கொள்வார்கள். நான் நடிக்க வந்த பின்ஒழுங்கையும்  பண்பாட்டையும் கற்றுக் கொண்டேன். நடிப்பு என்னை நாகரிகம் பண்பாடு உள்ளவனாக மாற்றியிருக்கிறது. ‘ஆசை’ ஏவி எம்மின் தொடரில் நடித்த போது ஒரு பெண்மணி அடிக்க வந்தார்.  பிள்ளைங்களை இப்படி டாச்சர் பண்றியேநீ நாசமா போய்டுவே என்று திட்டினார்கள். அது நெகடிவ் ரோலுக்கு கிடைத்த பாராட்டு. ‘ஆடுகளம்’ பார்த்து ரஜினி சார் பாராட்டினார். ஷங்கர் சாரும் பாராட்டியிருக்கிறார்.

குடும்பம் மனைவி மக்கள்.. பற்றி?

என் மனைவியின் பெயர் ஆர்த்தி மகன் மித்ரன் 9வது படிக்கிறான். மகள் தீப்தி 6வது  படிக்கிறாள்.எனக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. 15 ஆண்டு மனைவி வேலைக்குப் போனார். எனக்கு பெரிதாக வருமானமில்லை. இப்போது ஒரு ஆண்டாகத்தான். மனைவி வேலைக்குப் போகவில்லை. மனைவி தந்த ஊக்கமும் ஆதரவும் இல்லை என்றால் நானில்லை.

-நமது நிருபர்