நட்சத்திர கிரிக்கெட் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்னை ரைனோஸ்

Jeeva at CCL 3 Chennai Rhinos Vs Bengal Tigers Match Photosஇந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஜீவா, பீல்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே, வீர் மராத்தி அணிக்கு சென்னை ரைனோஸ் அணி வீரர்கள் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே வீர் மராத்தி அணியின் முதல் விக்கெட் சரிந்தது. 3-வது ஓவரை வீசிய ஜீவா, அந்த ஓவரில் வீர் மராத்தி அணியின் கேப்டன் தேஷ்முக்கை ரன் எதுவும் எடுக்கவிடாமல் வீழ்த்தினார். அந்த ஓவரிலேயே மற்றொரு வீரரையும் வீழ்த்தி வீர் மராத்தி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்த ஓவரை வீச வந்த விஷ்ணுவும் தன் பங்குக்கு ஒரு விக்கெட் வீழ்த்த வீர் மராத்தி அணிக்கு அடிமேல் அடி விழுந்தது. ஒருகட்டத்தில் வீர் மராத்தி அணி 7 ஓவரில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த சரிவிலிருந்து வீர் மராத்தி அணியை சரத் கெல்கரும், கோரும் மீட்டெடுத்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் வீர் மராத்தி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. வீர் மராத்தி அணியில் அதிகபட்சமாக சரத் கெல்கர் 60 ரன்கள் எடுத்திருந்தார். கோர் 37 ரன்களுடனும், தூத்வட்கர் 24 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஜீவா 3 விக்கெட்டுகளும், விஷ்ணு 2 விக்கெட்டுகளும், சாந்தனு 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரரான விக்ராந்த் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, சென்னை அணி சோகத்தில் வீழ்ந்தது. இதையடுத்து, ஜோடி சேர்ந்த ரமணாவும், விஷ்ணுவும் வீர் மராத்தி அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறியடித்து, சென்னை அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

ஒருகட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து அரை சதங்களை கடந்து சென்னை அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்கள். இறுதியில் 12.3 ஓவரிலேயே சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 155 ரன்களை கடந்து வெற்றியை ருசித்தது. விஷ்ணு 82 ரன்களுடனும், ரமணா 54 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 2 போட்டிகளை வென்று  சென்னை அணி முதலிடத்தை பெற்றுள்ளது.