’நட்புனா என்னானு தெரியுமா’ விமர்சனம்

லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், அறிமுக நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ எப்படி என்பதை பார்ப்போம்.

கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல்.

இது போதாதா? ஒரு காதல்படத்துக்கு .

நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது.
ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார்.

பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான் திரைக்கதை.

மூன்று நண்பர்களின் காதலும், அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. ரொம்ப எளிமையான கதை என்றாலும், இயக்குநர் சிவா அரவிந்த் அதை கையாண்ட விதமும், நடிகர்களின் நடிப்பும், படத்தில் வரும் இயல்பான நகைச்சுவைகளும் படத்தை ரசிக்க வைக்கிறது.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்துள்ள கவின், இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருப்பவர் புதுமுகம் ராஜு. புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி முதல் படத்திலேயே மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். இவருக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அதிக வாய்ப்பு உள்ள வேடம் சரியாகச் செய்திருக்கிறார் .

மூன்றாவது நாயகன் அருண்ராஜா காமராஜ் . பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். அவருடைய அப்பாவித்தனமான முகம் அதற்குப் பெரிதும் உதவுகிறது.

கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது.

இளவரசு ,மொட்ட ராஜேந்திரன், மன்சூரலிகான், அழகம்புருமாள் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

உயிருக்கு உயிரான நட்பு, நண்பர்களின் பிஸினஸ் பிறகு காதலால் நட்பில் ஏற்படும் பிளவு என்று  படம் தொடங்கினாலும், இதுபோன்ற படங்களில் இடம்பெறும், காதல் தோல்வியால் பெண்களை திட்டுவது, துரோகம் செய்த நண்பனை துரோகியாக நினைத்து பழிவாங்க துடிப்பது போன்ற புளித்துப்போன விஷயங்களை தவிர்த்துவிட்டு அடுத்தடுத்த காட்சிகள் மூலம் படத்தை வித்தியாசமாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும், அதை ஜாலியாக கையாண்டிருக்கும் இயக்குநர் இடைவேளைக்கு பிறகு காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைத்து வயிறு வலியே ஏற்பட வைத்துவிடுகிறார்.

தரணின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான் என்றாலும், சாதாரண வார்த்தைகளுக்கு மெட்டுப் போட்டு அதை பாட்டாக்கி ஒலிக்கவிட்டதற்காக பாராட்டலாம். யுவராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

இயக்குநர் சிவா அரவிந்த் நட்பை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்.

இரண்டாவது பாதி கலகலப்பாகப் போகிறது. அதனால் வருகிறார்கள் சந்தோஷமாகப் போகலாம். 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pin It

Comments are closed.