நான்கு வாரிசுகள் இணையும் ‘வை ராஜா வை’ கூட்டணி!

Vai Raja Vai--2தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘வை ராஜா வை’.கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி, விவேக், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்  இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா , வைரமுத்து மகன் கார்க்கி,, இளையராஜா மகன் யுவன், கார்த்திக் மகன் கௌதம் என நான்கு வாரிசுகள் இணையும்  கூட்டணி ‘வை ராஜா வை’ படம்.

இசை வெளியீட்டு விழாவில் வழக்கமான நிகழ்ச்சி தொகுப்பாளர், இருக்கைகள் போட்டு வந்திருக்கும் விருந்தனர்களை அமர வைத்து படத்தைப் பற்றி பேச வைப்பது என்று  எதுவும் இல்லாமல் புதுமையாக இருந்தது.

ரஜினிகாந்த், வைரமுத்து, இளையராஜா, கார்த்திக், இளையராஜா ஆகியோர் பேசி வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது.

அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியது:

“ஐஸ்வர்யா தனது முதல் படத்தை ஆர்ட் பிலிமாக இயக்கி இருந்தார். அப்போதே என்னிடம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதை இயக்க திட்டம் வைத்திருப்பதாக கூறினார். அது ‘வை ராஜா வை’ மூலம் நிறைவேறி இருக்கிறது. நான் யுவனின் இசைக்கு பெரிய ரசிகன். ‘பருத்தி வீரன்’ முதல் ‘பில்லா’ வரை பல வகையான பாடல்களை கொடுத்திருக்கிறார். ‘வை ராஜா வை’ படத்தின் பாடல்களைக் கேட்டேன். தனித்துவமாக இருந்தது. படக்குழுவிற்கு என் வாழ்த்துகள்” என்றார்.

‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பிற்கு இடையே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும்போது, “ஐஸ்வர்யா தனக்கு என்ன வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். என்னை இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று பிடிவாதமாகஅழைத்தார். அச்சமயத்தில் 200 துணை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தேன். நான் கண்டிப்பாக வர வேண்டும் என்றார். அதனால் இங்கு வந்திருக்கிறேன். தனக்கு என்ன வேண்டும் என்பதில் ஒரு இயக்குநர் பிடிவாதமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யாவிடம் அது இருக்கிறது” என்றார்.

IMG_6690நடிகர் விவேக் பேசும்போது, “ஐஸ்வர்யாவின் முதல் படம் லாப நோக்கு இல்லாமல் இருந்தது. ‘வை ராஜா வை’ கண்டிப்பாக கே.எஸ்.ரவிகுமார் மாதிரி ஒரு நல்ல கமர்ஷியல் இயக்குநராக முன்னிறுத்தும். ஒரு நாள் ஐஸ்வர்யா, ரஜினிகாந்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை” என்றார்.

இந்த ஆடியோ விழாவில் ‘வை ராஜா வை’ படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரின் இறுதியில், தனுஷ் ஒரு காரில் இறந்து வருவதுபோலவும், இறங்கி வந்து ‘என் பேரு குமாரு, கொக்கி குமாரு. கேள்விப்பட்டிருக்கிறியா?’ என்று வசனம் பேசுவார். இந்த வசனத்தை கேட்டதும், விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் விசில் அடித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொக்கிகுமார் என்பது ‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷ் ஏற்று நடித்த கதாபாத்திரம். இப்போது அந்த வசனத்தை கேட்டதும், ரொம்பவும் உணர்ச்சிவயப் பட்டுள்ளார் தனுஷ்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறும்போது, 8 வருடத்திற்கு பிறகு கொக்கி குமாரை திரையில் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.