‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம்

 விருப்பமின்றி கட்டாயத்தாலி கட்டி மாப்பிள்ளையாக்கப்பட்ட ஒரு நாயகனின் கதை அல்லது சினிமாவில் கனவோடு இருக்கும் உதவி இயக்குநரின் கதை தான் இந்த ‘நான் அவளை சந்தித்த போது’ படம்.

 சந்தோஷ் பிரதாப் ( மூர்த்தி  ), சாந்தினி ( குமாரி ) இன்னசன்ட் ,  ஜி.எம்.குமார் ( சாந்தினி அப்பா ), பருத்திவீரன் சுஜாதா    ( சாந்தினி அம்மா  ), கோவிந்த மூர்த்தி (  உதவி இயக்குனர்  ), சாம்ஸ் ( உதவி இயக்குனர் ) , டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.     நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படி?

சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளோடு வாழும் திரைப்பட உதவி இயக்குநர்களில் ஒருவர்தான் நாயகன் சந்தோஷ், உறவினர் முகவரியை தொலைத்துவிட்டு தவிக்கும் நாயகி சாந்தினியைச் சந்திக்கிறார். சென்னையில் யாரையும் தெரியாத சாந்தினிக்கு உதவி செய்வதற்காக அவருடன் பேருந்து நிலையம் வரை செல்பவர், சூழ்நிலையால் அவருடன் அவரது ஊருக்கே செல்ல, அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால், சந்தோஷின் வாழ்க்கையே தலைகீழாக  மாறுகிறது. இறுதியில் அவர் நாயகியைக் கைப்பிடித்தாரா அல்லது இயக்குநர் ஆனாரா, இல்லையா என்பது தான் படத்தின் கதை.

கனவு உலகமான சினிமாத் துறையில் உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் எத்தகைய சிரமங்களை அனுபவிக்கிறார்கள், என்பதை  பதிவு செய்திருக்கும் இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்தர், பசியோடு வாழ்ந்தாலும், தடம் மாறாமல் இருப்போம், என்று கூறி உதவி இயக்குநர்களை கெளரவப்படுத்தியிருக்கிறார்.

உதவி இயக்குநருக்கான கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகும் நடிகர் சந்தோஷ், கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி தேறிவிடுகிறார். செண்டிமெண்ட் காட்சிகளை கச்சிதமாக கையாள்பவர், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்துகிறார்.

எப்போதும் சோகமாக இருக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சாந்தினி, கண்களாலேயே நடிக்கிறார். கிராமத்து பெண் வேடத்திற்கு அழகாகப் பொருந்துகிறார்.

மலையாள திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் மலையாள நடிகர் இன்னசண்ட் வரும் காட்சிகளை ரசிக்கலாம். சினிமாவை உண்மையாக ஏன் நேசிக்க வேண்டும், என்பதற்கான காரணத்தை விளக்கும் அந்த கதாப்பாத்திரத்திற்கு இன்னசண்டின் நடிப்பு பலம் சேர்த்திருக்கிறது.

பருத்திவீரன் சுஜாதா, ஜி.எம்.குமார், சந்தோஷின் நண்பர்களாக நடித்திருக்கும் கோவிந்த் மூர்த்தி, சாம்ஸ் உள்ளிட்ட அனைவரும் பதிகிறார்கள்.

ஆர்,எஸ்,செல்வாவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற காட்சிகளை கொடுத்திருக்கிறது. ஹித்தேஷ் முருகவேலின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன.

உதவி இயக்குநர்களின் வலிகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர், காட்சிகளை உயிரோட்டமாக வடிவமைத்திருக்கிறார்.

நாயகன் சந்தோஷ், தனது லட்சியத்தில் வெற்றி பெற்றாலும், அவரது அம்மாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போகும் போதும், க்ளைமாக்ஸில் தனது அம்மாவுடன் அவர் தியேட்டரில் படம் பார்க்கும் காட்சியும், படம் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கும்.

பிற்பாதிபடத்தை சற்று ட்ரிம் செய்திருந்தால் மேலும் வேகம் கூடியிருக்கும். போரடிக்காமல் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்குநர் கொடுத்திருக்கிறார்.

Pin It

Comments are closed.