‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்

naigal-jakkirathai_1ஒரு போலீஸ் நாயை நாயகனைப்போல பிரதானமாக்கி  வெளிவந்துள்ள படம்.

சிபிராஜ் போலீஸ்காரர். மனைவி அருந்ததி. சிபிக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. பக்கத்துவீட்டு ராணுவ மேஜர் ஒருவர் , ஊருக்கு செல்வதாகக் கூறி  சிபியிடம் ஒரு நாயை பார்த்துக் கொள்ளச் சொல்கிறார் முதலில் மறுக்கிறார். பிறகு சிபி தானே சென்று அந்த நாயைத் துன்புறுத்துவோரிடமிருந்து காபாற்றுகிறார். நாய் சிபி வீடு தேடி வந்து விடுகிறது.

படு பயங்கர தோற்றம். அச்சத்துடன் சிபி நாயை எதிர் கொள்கிறார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாயுடன் பழகுகிறார். முதலில் நாய்  சொல்வது எதையும் கேட்பதில்லை. பிறகுதான் அது ராணுவத்துக்கு பழக்கப்பட்டு பயிற்சி பெற்ற நாய் என்று தெரிகிறது..

ஒரு கட்டத்தில் சிபி மனைவியை வில்லன் கோஷ்டி கடத்திக் கொண்டு போய் உயிருடன் சவப் பெட்டியில் போட்டு புதைத்து விடுகிறார்கள். பிறகு அதைக்கண்டு பிடிக்கப்போகும் சிபியையும் புதைத்து விடுகிறார்கள்.நாய் எப்படி மோப்பம் பிடித்து காப்பாற்றுகிறது என்பது மீதிக்கதை.

ஆரம்பத்தில் அழையா விருந்தாளியாக சிபி வீட்டுக்குள் நுழையும் சுப்ரமணி என்கிற அந்த நாய் மெல்ல மெல்லபழகி சிபிராஜிடம் மட்டுமல்ல நமக்குள்ளும் இடம் பிடித்து விடுகிறது.

சிபி வெளியே செல்லும் போது  நாய் விளையாடும்  விளையாட்டுகள் ,இதனால் எதிர் கொள்கிற அவமானங்கள்  ஜாலி சரவெடி.

அந்த நாய் பெறும் ராணுவப் பயிற்சி எல்லாம் அதிரடி. போலீஸ்காரரான  சிபியுடன் நாய் பறந்து பாய்ந்து செய்யும் சாகசங்கள் அடடா.. போடவும் வைக்கிறது. ஒரு கட்டத்தில் படத்தின் ‘நாய்’கனாக உயர்ந்து சிபிராஜை ஓரம் கட்டி வைத்து விடுகிறது சுப்ரமணி என்கிற அந்த நாய்.
naigal-postr
ஒரு ஆங்கிலப் படத்தைப் போல தொடங்கும் படம். அப்படியே போகிறது. ஸ்டைலிஷான காட்சிகள். பரபரப்பான திருப்பங்கள்.. கிடுகிடுக்க வைக்கும் பின்னணி இசை.. என நேர்த்தியாக பயணிக்கும் படம்,
பின்பாதியில் மூக்கை தலைசுற்றித் தொடுவது போல வில்லன் காட்டுக்குள் இருந்து கொண்டு எதிரிகளை கடத்திக் கொண்டு வந்து அதையும் லைவ் ரிலே செய்வதெல்லாம் இந்தக் கலத்தில் டூமச்சல்ல.. த்ரீமச் டைரக்டரே.

சிபிராஜ் போலீஸ்காரர். புதிதாக திருமணம் ஆனவர். அவர் தங்கையுடன் இருக்கும் போது கூட பாட்டிலும் கையும் நடமாடும் டாஸ்மாக்காக இருப்பது ஓவர். அவர் பொறுப்புள்ள போலீஸ் இல்லையா?

முதிர்ச்சியாக போய்க் கொண்டிருந்த படம். பின்பாதியில் இப்படி மிகையான மலிவான காட்சிகளில் கால்பின்னி நடை பயில்கிறது ஓரு குடிகாரனைப்போல.ஸ்டார் ஓட்டல் போய் கடலை உருண்டை சாப்பிடுவது போல் பொருத்தமற்ற பல காட்சிகள் உள்ளன.

அதுவும் நாயைக் கூட்டிக் கொடுக்கும் மயில்சாமி சம்பந்தப் பட்ட காட்சிகளில் சிரிக்க முடியவில்லை சகிக்க  முடியவில்லை .உவ்வே.

எத்தனை குறைகள் இருந்தாலும்என்ன  சுப்ரமணி படத்தை தூக்கி நிறுத்தி விடுகிறது. படத்தின் ‘நாய்’கன் அதுதானே?

நாய்களை நம்பினால் கைவிடப் படார்.