‘நெடுநல்வாடை’ விமர்சனம்

இயக்குநர் செல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ,  அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘நெடுநல்வாடை’.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

படம் வருகிற மார்ச் 15-ந் தேதி வெளியாகிறது.

தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக் காலத்தில் காத்திருக்கும் காத்திருப்பை நீண்ட வாடையாகக் கருதி சங்க இலக்கியத்தில் நெடுநல்வாடை எனப்பட்டது .

அதுபோல காதலர்கள் பிரிவில் ,காத்திருப்பில் இருவரது வாழ்வில் நிகழும் தலைகீழ் மாற்றங்களைச் சொல்வதால் இப்படத்திற்கு நெடுநல்வாடை என்று பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள் போலும்.

படத்தின் கதை மிக எளியது . பாசத்துக்கு குறுக்கே நிற்கும் காதலுக்கும் காதலுக்குக் குறுக்கே நிற்கும் பாசத்துக்குமான போட்டியே கதை .எது வென்றது என்பதே முடிவு .
தாத்தா பேரன் சம்பந்தப்பட்ட பாசக் கதை இது.

தாத்தா பூராமுவின் ஒரு மகள் செந்தி குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலனுடன் ஓடிப் போகிறார்.

கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளுடன் ஒரு நாள் மீண்டும் பிறந்த வீடு வந்து தன் தந்தையின் காலில் விழுகிறார்.

குடும்ப மானத்தை கப்பல் ஏற்றிவிட்டு மீண்டும் இங்கே வருகிறாயா என்று ராமுவின் மகனும் செந்தியின் அண்ணனுமான மைம் கோபி அடித்து விரட்டுகிறார். ஆனால் தந்தை பூ ராமுவோ  மகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு தருகிறார். அந்த மகளின் ஒரு பிள்ளைதான் இளங்கோ . படத்தின் நாயகன்.

பேரன் மீது  அன்பையும் பாசத்தையும் காட்டி வளர்க்கிறார் தாத்தா.

பேரன் வளர்ந்து வயது வந்ததும்  உயர்ந்து தன் மகளின் சிதைந்த வாழ்வில் மலர்ச்சி தருவான் என நம்புகிறார் தாத்தா. அதனால் பேரனை டிப்ளமோ முடித்து வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறார்.தடை படுகிறது.

ஆனால் இளங்கோவுக்கும்  அமுதாவான அஞ்சலி நாயருக்கும் காதல் வருகிறது.

வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நம்பும் தாத்தாவுக்கு பேரன் காதலில் விழுந்ததை அறிந்து வருத்தம் அடைகிறார். காதல் வேண்டாம் லட்சியம் தடைபடும் என்று தாத்தா இதை விரும்பவில்லை.
அதனால் பேரனும்  தன் மனதில் உள்ள காதலை மறைத்து காதலியிடம்  வெறுப்பது போல் நடிக்கிறார் .பேரனின் நிஜக் காதலை உணர்ந்த தாத்தா பெண் கேட்டு நாயகி வீட்டுக்குச் செல்கிறார். தங்கள் தகுதிக்கு வேலை இல்லாத ஒருவனுக்கு பெண் கொடுக்க முடியாது என்று அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள் .

பேரனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தீவிர ஏற்பாடு நடக்கிறது.

இன்னொரு பக்கம் நாயகி அஞ்சலி நாயருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன . இருவரும் சேர்ந்தார்களா? நாயகன் வெளிநாடு சென்றாரா?

வென்றது எது ? காதலா ?பாசமா? என்பதே கதையின் முடிவு .

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நேர்த்தியான நிறைவான முதிர்ந்த கதை நகர்வுடன் ஒரு கிராமத்துப் படத்தைப் பார்க்க முடிகிறது .

இதில் நடித்துள்ள நாயகன் இளங்கோவும் நாயகி அஞ்சலி நாயரும் தாத்தா பூராமுவும் படத்தைப் பகிர்கிறார்கள்.

குறிப்பாக பூராமு பாசக்கார தாத்தாவாக நடிப்பில் ராஜாங்கம் செய்துள்ளார்.

நாயகி அஞ்சலி நாயரும் நெல்லை மண்ணில் பிறந்த கிராமத்து பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். புதுமுகம் என்பதையே நம்ப முடியாத அளவுக்கு இளங்கோவும் நடித்துள்ளார் .மைம் கோபியும் செந்தியும் கூட குறை வைக்காத நடிப்பு .

நட்சத்திர பலம் இல்லாத படமாக இருந்தாலும் படத்தை ஒளிப்பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமியும் இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளினும் தங்களது இரு தோள்களில் படத்தைத்தூக்கிச் சுமந்துள்ளார்கள்.

வைரமுத்துவின் வரிகள் படத்துக்குத் தங்க முலாம் பூசுகின்றன.

அவரது ’கருவா தேவா’ பாடல் பாச ராகம் என்றால் யஏதோ ஆகிப்போச்சுய டூயட் காதல் ரசம் . ’ஒரே ஒரு கண் பார்வை’ பாடலும் சோக இழை. ’தங்க காவடி ’பாடலோ திருவிழா ஆரவாரம் .


காசி விஸ்வநாதனின் எடிட்டிங்கில் படம் ஆற்றோட்டம் போல சீராகப் பயணிக்கிறது.

மொத்தத்தில் மே மாத வெயிலில் வீசும் தென்றல் காற்றைப் போல நமக்குள் புகுந்துவிடுகிறது இப்பட அனுபவம்.

செயற்கையான காமெடி காட்சிகள் அசட்டுத்தனமான நகைச்சுவைகள் பெண்களைக்கேலி செய்யும் அரைவேக்காடு காட்சிகள் இல்லாமல் கண்ணியமான ஒரு படம் தந்திருக்கிறார் இயக்குநர் செல்வகண்ணன்.

உண்மையானபாசத்தையும் காதலையும் உயர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் .

சினிமாத்தனம் இல்லாத காட்சிகள் மூலம் தர முத்திரை பதித்து கதை சொல்லியிருக்கிறார் மொத்தத்தில் கிராமத்துக்குள் நுழைந்து அந்த மண்ணின் மனிதர்களுடன் பழகும் வாழ்க்கை அனுபவத்தை நேரில் கண்ட உணர்வைத்   தந்து விடுகிறது படம். 

Pin It

Comments are closed.