‘நேர்கொண்ட பார்வை’ விமர்சனம்

இந்தியில் வந்த “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்தான் நேர்கொண்ட பார்வை. “பிங்க்” படம் ஒரு மாஸ் படமல்ல. “பிங்க்” படத்தின் சாரம் கெடாமல் அஜித்தின் இமேஜும் முழுதாய் சரியாமல் படத்தை தந்திருக்கிறார் இயக்குநர் வினோத்.

நவீன சமூகம் எத்தனை வளர்ந்திருந்தாலும் பெண்களின் மீதான பார்வை, அடக்குமுறை என்பது பழைய பாணியிலேயே இன்றும் நீடிக்கிறது. நாகரீகம்  வளர்ந்த  நிலையிலும் ஒரு பெண் தனியே இரவில் நடப்பது பிரச்சனை தான். ஆணுக்கான நியாயங்கள் பெண்ணுக்கு சரியாக, சமமாக எப்போதும் கிடைப்பதில்லை. சமூகம் பெண்ணை பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறதே அன்றி , ஆண்களை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதில்லை. இந்த நிலைகள் எல்லாவற்றையும் படம் அழுத்தமாய் பேசியிருக்கிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா மூவரும் ஒரே அறையில் தங்கி வேலைக்குப் போய் வரும் நவீன பெண்கள். செக்ஸ், ட்ரிங்ஸ், பார்ட்டி எல்லாம் அவர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு நாள் ஒரு பணக்கார – அரசியல் பின்னணி கொண்ட இளைஞன் மற்றும் அவனது நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போக, அங்கே ஷ்ரத்தாவிடம் எல்லை மீறுகிறான் பணக்கார இளைஞன். அவனை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தோழிகளுடன் வெளியேறுகிறார் ஷ்ரத்தா. அந்த இளைஞன் தன் அரசியல் செல்வாக்கை வைத்து, ஷ்ரத்தாவையும் தோழிகளையும் துரத்த ஆரம்பிக்கிறான். அவர்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்யவும் வைக்கிறான். இதையெல்லாம் எதிர்வீட்டில் வசிக்கும் வக்கீல் அஜித் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்களுக்காக வாதாடவும் வருகிறார். அவரால் அந்தப் பெண்களைக் காக்க முடிந்ததா என்பதுதான் முடிவு.

இப்படத்தில் அஜித் தன் பிம்பத்தை விட்டு முழுக்க வெளியே வந்து இப்படியான ஒரு படத்தில் நடித்திருப்பது பெரும் துணிச்சல். வக்கீல் வேடம் ஏற்று, மன நலப் பிரச்சனை கொண்டவராக, தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேடத்தில், இதுவரை நாம் பார்த்திராத அஜித்தாக இதில் வருகிறார்.

வக்கீலாக நடுங்கும் குரலில் அவர் வாதம் செய்யும் இடங்கள் கிளாப்ஸ். பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சமூகம் வைத்திருக்கும் வரை முறையை சட்டமாக அவர் சொல்லும் இடங்கள் மொத்த சமூகத்திற்கான பாடம்.  ஆனால் அவரின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

ஸ்ரதா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா , அபிராமி இன்றைய நவீன பெண்களின் மனசாட்சியாக திரையில் பிரதிபலித்திருக்கிறார்கள். படம் முழுவதும் பரவும் அவர்களது அழுகையும், பயமும், குற்ற உணர்வும், எந்தத் தவறும் செய்யாத அவர்கள் மீது, சமூகம் வைக்கும் பார்வையை நம்முள் கடத்தியிருக்கிறது. மூவரின் நடிப்பும் அற்புதமாக திரையில் அரங்கேறியிருக்கிறது. அஜித்துக்கு எதிராக வழக்காடுபவராக வரும் ரங்கராஜ் பாண்டே ரொம்ப சவுண்ட் விடுகிறார்… ஒரு நடிகராக ஜஸ்ட் பாஸ்தான்.

இயக்குநர் வினோத், அஜித்துக்கு இப்படி ஒரு படம், அவரது ரசிகர்களும் ரசிக்க வேண்டும், அதே நேரம் ஒரிஜினல் படத்தின் சாரமும் கெட்டுவிடக்கூடாது என இரண்டையும் சமன் செய்திருக்கிறார். 

படத்தின் பெரும் பலம் இசை. படத்தின் பிரச்சனையுடன் நம்மை கட்டிப்போடும் வேலையை சரியாய் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. நீரவ் ஷா ஒளிப்பதிவு அருமை. படத்தின் மேக்கிங் கவனம் ஈர்க்கிறது. நேர் கொண்ட பார்வை சமூகத்திற்கு தேவையான சினிமா.

இந்தப் படம் வசனங்கள் மூலம் நகர்த்தப்பட வேண்டிய படம். இந்திப் படத்தின் ஒப்பிட்டால், வசனங்கள் இன்னும்கூட ஷார்ப்பாக இருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு அலுப்பைத் தருகின்றன நீதிமன்றக் காட்சிகள்.

வாதங்கள் காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தவில்லை. அதனால் படத்தின் பின் பாதி நீளம் அதிகமாக தோன்றுகிறது. 

நவீன பெண்களின் பிரச்சனைகளை அழுத்திச் சொல்லும் அழகான சினிமா! ஆனால் அஜித் ரசிகர்களுக்கானது அல்ல! பெண் உரிமை பேசும் கதையில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்வு செய்து அஜித் நடித்திருப்பதும், பிங்க் படத்தின் சரியான தமிழ் ரீமேக்காக இந்தப் படம் அமைந்திருப்பதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.