பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது : கமல் கண்டிப்பான பேச்சு

IMG_6162பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது என்றும் தவறானவர்கள்தான் சினிமாவைக் குறை சொல்வார்கள் என்றும்   ஒரு விழாவில் கமல்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு;

தமிழ்த் திரைப்பட  உலகில் ஆண்டு தோறும்  திறமையானவர்களைத் தேர்வு செய்து ‘வி4’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முப்பதாவது ஆண்டாக இவ்வாண்டும் இந்த ‘வி4’ விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில்  தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கமும் இணைந்து பங்கேற்றது.

இந்த விழாவில் ‘ பாபநாசம்’ ,’தூங்காவனம்’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காகச் சிறந்தநடிகர்  மற்றும் சிறந்த தயாரிப்பாளர் விருதுகள் பத்மபூஷண் கமல் ஹாசனுக்கு வழங்கப் பட்டன. தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் விருதுகளை வழங்கினார்.

விருதுகளைப் பெற்ற கமல், மேலும் சிலருக்கு விருதுகளையும் வழங்கினார்.

விழாவில் கமல் பேசும் போது. ” நான் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பி.ஆர்.ஓக்கள் இருக்கிற இடம் தெரியாமல் இருப்பவர்கள்.இது தன்னை வெளிப்படுத்தாமல் அடக்கமாக இருந்து கொண்டு மற்றவர்களை உயர்த்தும் தொழிலாகும்.

இந்த விருதை ஏவிஎம். சரவணன் அவர்கள் கையால் பெறுவதில் எனக்குப் பெருமை. ஏனென்றால் ‘களத்தூர் கண்ணம்மா’ வில் நடித்த போது நான் சிறு குழந்தை. நான் மூன்று வயது குழந்தையாக இருந்த போதே என்னை அழைத்துச் சென்று தேசிய விருது  வாங்கிக் கொடுத்தவர்கள் ஏ.விஎம் அவர்கள்.  அங்கே விருது வாங்கும் போது இப்படி இங்கே நிற்க வேண்டும், இப்படி வாங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்கள். என்னை ஊர் ஊராக அழைத்துச் சென்று பெருமைப் படுத்தியவர்கள்.

அந்தக் குழந்தை இன்று பல பேருக்கு விருது கொடுக்கிறதே என்று என்னைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எனக்குப் பெருமை. இது எவ்வளவு பெரிய கொடுப்பினை?

படப்பிடிப்பில் நான் ஏவிஎம். சரவணன் சாரைப் பார்த்ததே இல்லை, வரவே மாட்டார்.சினிமா எடுப்பது நித்ய கல்யாணம் போன்றது.தினம் தினம் சம்பந்தி சண்டை வரும். இது உதிரிப் பாட்டாளிகள்  அதிகம் உள்ள தொழில் ஒரே மாதிரி எல்லாரும் இருக்க மாட்டார்கள்.

இவ்விழாவில் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்பதை விட அந்த நன்றி,நாம் வெற்றி பெறுவதன் மூலமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.எத்தனை மனிதர்கன்? எத்தனை உறவுகள்? இதையெல்லாம் பார்க்கும் போது வாழ்க்கை ஒரு வட்டம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட தொழிலை 70 ஆண்டுகள் செய்து வரும் ஏவிஎம் நிறுவனத்துக்கு நாம்  வணக்கம் செய்யும் விழா இது என்று கூறலாம். நான் படிக்காமலேயே வெளிநாடு போய் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

நான் படித்த முக்கியமான பள்ளி ஏவிஎம் என்கிற பள்ளிதான்.

அங்கு கற்றதெல்லாம் பற்றியும்தான் வெளிநாடு போய் பேசப் போகிறேன். சாதனை யாளர்களிடம் பணிவைக் கற்றது அங்குதான் .சாதனையாளர்கள் ஆகவேண்டும் என்றால் முதலில் பணிவு வரவேண்டும். பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது.

இங்கே பிலிம் நியூஸ் ஆனந்தன் இருக்கிறார் அவரது சாதனை , சேவை இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் பல பொக்கிஷங்களை சேர்த்து வைத்து இருக்கிறார். அவை தோண்டத் தோண்ட வரும் பத்மநாபா கோவில் பொக்கிஷங்களை விடப் பெரியவை..

சினிமாவில் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் சினிமா மிக நல்ல தொழில் .
சினிமாவை நேர்மையாக எடுத்தவர்கள் ,சினிமாவில் நேர்மையாக இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளையும் இதில் கொண்டு வருவார்கள் .சினிமாவில் தவறு செய்தவர்கள்தான் தங்கள் குழந்தைகள் சினிமாவில்  வரக் கூடாது என்று நினைப்பார்கள்.தவறானவர்கள்தான் சினிமாவைக் குறை சொல்வார்கள்.

அரவிந்தசாமி சினிமா தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தைக் கூறினார். வாழ்க்கை ஒரு வட்டம். எல்லாம் கடந்துதான் நான் இங்கு வந்திருக்கிறேன். நானும் துண்டு போட்டு இடம்பிடித்து மூட்டைப்பூச்சி கடித்து படம் பார்த்தவன்தான. நேராக நான் இங்கு வந்து விடவில்லை.

நான் மூத்தவன் என்பதால் இதையும் சொல்லவில்லை வயதில் மூத்ததால் நான் சிறந்தவன் என்று நினைக்கக் கூடாது.

எப்போதும் நம் திறமையை விட்டு விடக் கூடாது. ஓடிக் கொண்டே திறமையை வளர்க்க வேண்டும். அதற்குத் தீனி போடாவிட்டால் இளைத்து விடும்.

என் பாணியைப் பின்பற்றி தாங்களும் வருவதாக  இயக்குநர் ஒருவர் கூறினார். நீங்கள் ஓடும் ஓட்டம், எனக்கு எந்த விதத்திலும் குறைந்ததாக இருக்கக் கூடாது. நாங்கள் ஓடிய ஓட்டத்தில் உங்கள் ஓட்டம் குறைந்தால் அது எங்களுக்குச் செய்யும்  துரோகமாகும்.இங்கே சுந்தர்.சி. விருது பெற்றார். அதை ‘அரண்மனை’க்கு  கொடுத்தது என்று நான் நினைக்கவில்லை. ‘அன்பே சிவ’ த்துக்கும் கொடுத்ததாகவே நினைக்கிறேன்.

தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தைப் பாராட்டுகிறேன். இவர்களின் இந்த பணி  இத்தோடு நின்று விடாமல் வளர்ந்து ஒரு சொத்தாக மாறவேண்டும்.” இவ்வாறு கமல் பேசினார்.

இவ்விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி,வுண்டர்பார் வினோத், இயக்குநர்கள் சுந்தர்.சி,’தூங்காவனம்’ ராஜேஷ், ‘குற்றம் கடிதல்’ பிரம்மா, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘நானும் ரவுடிதான்’ விக்னேஷ்சிவன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி ருக்மணி அசோக்குமார், குழந்தை நட்சத்திரம் ஆருஷி, டிசைனர் மேக்ஸ் உள்ளிட்ட பலரும் விருது பெற்றனர்.
‘வி4’ நிறுவனர்கள் டைமண்ட் பாபு, சிங்காரவேல்,  மௌனம் ரவி ,ரியாஸ் உள்ளிட்ட திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் பலரும்  விழாவில் கௌரவிக்கப் பட்டனர்.

Pin It

Comments are closed.