பவர்ஸ்டாருக்காக பின்னணி இசையை மாற்றிய ரகுநந்தன்!

N. R. Raghunanthanதென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் இயக்குநர் சீனு ராமசாமியால் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் என்.ஆர்.ரகுநந்தன். முதல்   படத்திலேயே ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்கிற வைரமுத்துவின் வைர வரிகளை அருமையான பாடலாக்கி அதற்கு தேசியவிருதும் பெற்றுத்தந்தவர்.

 

தொடர்ந்து சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம் என அடுத்தடுத்த படங்களின் ஹிட் பாடல்களால் தனக்கான ஒரு நிலையான இடத்தை தமிழ்சினிமாவில் பிடித்துள்ளவர்.. இன்றும் தென்மாவட்டங்களில் எந்த வீட்டில் விசேஷம் என்றாலும் அந்த இடத்தில் இவர் இசையமைத்த சுந்தரபாண்டியன் பாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

 

தற்போது திரைவண்ணன் இயக்கத்தில் சிவா, பவர்ஸ்டார், நைனா சர்வார் இணைந்து நடித்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தில் இசையமைத்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்கிறார் என்.ஆர்.ரகுநந்தன்.

 

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்துல நீங்க கமிட்டாக எந்த விஷயம் ஈர்த்தது..?

 

இயக்குநர் திரைவண்ணனின் ரசனை தான் காரணம். அவரிடம் எனக்கு பிடித்த விஷயமே அவர் ரசனையானவர் என்பதுதான். நகைச்சுவை விஷயங்களை சரியானபடி படத்தில் புகுத்துவதில் கைதேர்ந்தவர். அவருடைய முந்தைய படமான ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை பார்த்திருக்கிறேன்.. பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதோடு தனக்கு வேண்டியதை விடாப்பிடியாக கேட்டு வாங்குபவரும் கூட.. அதுதான் இந்தப்படத்தில் பணியாற்ற என்னை ஒப்புக்கொள்ள வைத்தது.

 

காமெடிப்படம் என்பதால் பாடல்களை முன்னிலைப்படுத்துவது சிரமமாக இருந்ததா…?

 

இது காமெடிப்படம் தான் என்றாலும் இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாகவே வந்திருக்கின்றன. அதற்கேற்றமாதிரி அதிரடியான குத்துப்பாட்டு, கலாட்டா என இறங்காமல், மெலடிக்கும் கொஞ்சம் மென்மையான ‘போக்’கிற்கும் நிறைய இடம் கொடுத்திருக்கிறோம். அதற்கேற்ற மாதிரி திரைவண்ணன் சொன்ன சிச்சுவேஷன்கள் பாடலுடன் இயல்பாக பொருந்திவிட்டது.. காமெடி, பாடல்கள் இரண்டுமே இந்தப்படத்தில் முக்கியத்துவம் பெறும்.

nrrபடத்தில் உங்களை அதிகம் சிரமப்படுத்திய பாடல் எது..?

 

பொதுவாக நான் பாடல்களுக்கு இசையமைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.. ஆனால் இந்தப்படத்தில் ‘யாரு இவ’ பாடலுக்கும் ‘தேவதை தேவதை’ பாடலுக்கும் இசையமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். அதற்கு திரைவண்ணன் சொன்ன சிச்சுவேஷன்கள் ரொம்பவும் இம்ப்ரெஸ்ஸிவாக இருந்தது தான் காரணம். ரசித்து பண்ணியிருக்கிறோம்.

 

ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறாரே அதுபற்றி சொல்லுங்கள்..?

 

இந்தப்படத்துல ‘யாரு இவ.. அடடா யாரு இவ’ பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.. நான் சொல்றதுக்கு முன்னாடியே  திரைவண்ணன் தான் இந்தப்பாடலை ஜி..வி.பிரகாஷை பாடவைக்கலாமேன்னு கேட்டார். எனக்கும் தயாரிப்பாளருக்கும் டபுள் சந்தோசம். ஜி.வி.பிரகாஷ் என்னோட படங்களில் தொடர்ந்து பாடிக்கிட்டு வர்றார்.. அவர் பாடினாலே படம் ஹிட்டாகிடுது.. அந்தவகையில இந்தப்பாடலும் அவ்வளவு அழகா வந்திருக்கு. அதற்காக ஜி.வி.பிரகாஷுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

 

படத்திற்கு பின்னணி இசை அமைக்கும்போது உங்கள் அனுபவம் எப்படி..?

 

உண்மையைச்  சொன்னால் இந்தப்படத்துல பின்னணி இசை அமைக்க உட்காரும்போது எல்லாம் பவர்ஸ்டார்-சிவா காம்பினேஷன் என்னை தினசரி சிரிக்க வச்சுக்கிட்டே இருந்தது… இந்தப்படத்துல பவர்ஸ்டார் திரையில வந்தாலே நீங்க சிரிப்பீங்கன்னு உறுதியா சொல்வேன்.. அதிலும் குறிப்பா பர்ஸ்ட் ஹாப்ல பவர்ஸ்டார் நிறைய பஞ்ச் பேசிருக்கார்.. செகண்ட் ஹாப்ல கொஞ்சம் சீரியஸா வேறமாதிரி மாறுவார். அதற்கேற்றமாதிரி அவருக்கான பின்னணி இசையையும் மாறும்.. மொத்தத்தில் இது ஒரு நல்ல காமெடிப்படம்.. ரெண்டுமணி நேரம் மனம் விட்டு சிரிச்சு ரசிக்கலாம்