‘பிச்சுவாகத்தி ‘ விமர்சனம்

சிறு தவறு  செய்து மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த போலீசும் அமைப்பும் எப்படி முழுக்குற்றவாளியாக்குகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம் ‘பிச்சுவாகத்தி ‘எனலாம்.வாழ்க்கையில் செய்யும் சிறு குற்றச் செயல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் படி ஆவதைச்சொல்லும் கதை இது.

‘பிச்சுவாகத்தி ‘ எதிரியை மட்டுமல்ல எடுத்தவனையும் குத்தும் என்பதே படம் சொல்லும் நீதி.படத்தின் கதை என்ன?

வெட்டிஆபீசரான நாயகன் இனிகோ பிரபாகரிடம், நாயகி ஸ்ரீ பிரியங்கா  தன்காதலை ச்சொல்ல, குஷியாகும் இனிகோ, தனது நண்பர்கள் யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோருடன் சேர்ந்து குடித்துவிட்டு, போதையில் ஆடு ஒன்றை திருட முயற்சிக்கும் போது ஊர் மக்களிடம் சிக்கிக்கொள்ள, அவர்கள் போலீசிடம் பிடித்துக்கொடுத்து விடுகிறார்கள். ஒரு மாதம், தினமும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது.

கையெழுத்து போடப் போகும் போது அங்குள்ள  இன்ஸ்பெக்டர், தலைக்கு ரூ.10 ஆயிரம் என்று 30 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டுகிறார்.

மூவரையும் மேலும் சில தவறுகளை செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் தூண்டுகிறார். இதனால், அந்த ஊரில் உள்ள தாதா ஒருவர் சொல்லும் வேலைகளை செய்துவரும் மூன்று நண்பர்களும் ஒரு கட்டத்தில் கொலை செய்யவும் துணிந்துவிடுகிறார்கள்.அதன் பின் அவர்களின் வாழ்க்கையில் திகழும்  திசைமாற்றம் பற்றிய கதையின் பயணம்தான் மீதிக்கதை.

நாயகன் இனிகோ பிரபாகரன் என்றாலும், படத்தில் நடித்த யோகி பாபு, ரமேஷ் திலக், செங்குட்டுவன் என அனைத்து நடிகர்களும் படம் முழுவதும் வருகிறார்கள். அனைவருக்கும் சம  வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுக நடிகரான செங்குட்டுவனும்  போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார். ஸ்ரீ பிரியங்கா, அனிஷா என இரண்டு பேர் இருந்தாலும், அனிஷாவுக்கு தான் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

யோகி பாபு, பால சரவணன் என இருவரும் காமெடி ஏரியாவில் கலக்குகிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசை, கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு இரண்டும் ஓகே ரகம்.

இனிகோ, யோகி பாபு, ரமேஷ் திலக் இவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிக்கொண்டு சிரமப்படுவதையும், பிறகு அங்கிருந்து அவர்கள் எப்படித்தப்பிக்கிறார்கள், என்ற அளவில் மட்டுமே திரைக்கதையாக்கி இருந்தாலே படம் பாராட்டு வாங்கியிருக்கும்.

செங்குட்டுவன் – அனிஷா ஆகியோரது காதல் பகுதியை நுழைத்தது திணிப்பு.

இருந்தாலும் பரபரப்பான காட்சிகளுக்குப்படத்தில் பஞ்சமில்லை என்றே கூறலாம்.

சிற்சில குறைகளைப் புறந்தள்ளி படத்தைப்பாராட்டலாம். கருத்துள்ள படத்துக்கு ‘பிச்சுவாகத்தி’ தலைப்பு ஏன்?

தாய்மார்களைப் படம் பார்ப்பதற்குத் தயங்க வைக்காதா?

படத்தின் முதல் பாகத்தில் ‘பிச்சுவாகத்தி’ யை கூர்மை மறுபாதியிலும் காட்டி இருந்திருந்தால்  இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.இருந்தாலும் புதிய இயக்குநர்   ஐயப்பன் ஆபாசம் அருவருப்பில்லாத ஒரு கதையையும் வன்முறைப்பாதை வருத்தமே தரும் என்கிற கருத்தையும் அழகாகக் கூறியிருக்கிறார்.