பி.சுசீலாவுடன் மலரும் நினைவுகள் :முதியோர் நெகிழ்ச்சி

psusila1rdதென்னிந்திய மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த இசைக்குயில் பி.சுசீலாவுக்கு ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு பாராட்டு விழா நடத்தியது.

மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்நிறுவனம், அன்னையர் தினத்தன்று இந்த பாராட்டு விழாவை நடத்தியது. இந்த அமைப்பின் தூதராக உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா விழாவிற்கு தலைமை தாங்கினார். சென்னை அம்பத்தூரில் உள்ள மூத்த குடிமக்களுக்கான ஆனந்தம் இல்லத்தில் இப்பாராட்டு விழா நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் இந்த முதியோர் இல்லத்தில் தான் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு, அன்னையர் தின விழாவை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இந்த அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாட ரெயின்ட்ராப்ஸ் முடிவு செய்தது. இந்நிகழ்ச்சியில் ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ராவின் இசையோடு பிரபல பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா, ஸ்ரவன், ஹரிதா, ஸ்வேதா, அரவிந்த் மற்றும் பலர் பி.சுசீலா பாடிய பாடல்களை பாடினர். இளமை காலத்தில் கேட்டு, ரசித்து, ஆனந்தமடைந்த பாடல்களை பாடியவரான இசைக்குயில் சுசீலாவை சந்தித்து, தங்களின் இளமைக்கால நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்பார்க்கும் வாய்ப்பு ஆனந்தம் இல்ல முதியோர்களுக்கு இந்த அன்னையர் தினத்தில் கிடைத்தது என்று ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நிறுவனரான அரவிந்த் ஜெயபால் கூறியுள்ளார்.