‘புதியதோர் உலகம் செய்வோம்’ விமர்சனம்

Puthiyathor-ulagam-seivom3லஞ்சத்தை எதிர்த்து பலரும் படம் எடுத்திருக்கிறார்கள். ‘புதியதோர் உலகம் செய்வோம்’ லஞ்சத்துக்கு எதிரான எளிய முயற்சி. லஞ்சத்தை ஒழிக்க வீட்டிலேயே தொடங்குங்கள் என்கிற அப்துல்கலாமின்  கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

பி.நித்தியானந்தம் இயக்கியுள்ளார். நாகராஜன்ராஜா தயாரித்துள்ளார்.

சூப்பர் சிங்கர்ஸ் போட்டியில் வெற்றிபெற்ற  ஆஜத்,அனு,யாழினி,பிரவீன்,சந்தியா,சூர்யேஸ்வர் போன்ற சிறுவர்களை முக்கிய பாத்திரமேற்க வைத்துள்ளார்கள். இமான் அண்ணாச்சியை ஒரு முழுநீள பாத்திரம் ஏற்க வைத்துள்ளார்கள்.

நான்கு சிறுவர்கள் நண்பர்கள். அவர்களில் ஒருவனின்  அப்பா லஞ்சம் கொடுக்க முடியாததால் குடும்பம் லஞ்சத்தால் பாதிக்கப் படுகிறது. இன்னொருவனின் அப்பாதான்காரணம் என்று புரிகிறது. இன்னொருவனின் அப்பா லஞ்சத்துக்காக முறைகேடு செய்யும் போலீஸ் என்றும் தெரிகிறது. தங்கள் அப்பாக்களின் லஞ்சம் வாங்கும் செயலால் தங்கள் நண்பனைப் போல எத்தனை பேர் பாதிக்கப் படுகிறார்களோ என்று வீட்டுக்குள் லஞ்சத்துக்கு எதிரான யுத்தம் தொடங்குகிறார்கள்.

இமான்அண்ணாச்சி  உதவியுடன் முறை கேடாக வந்த பணத்தை சேர வேண்டிய இடத்துக்கு சேர வைக்கிறார்கள்.  குழந்தைகளை லஞ்சத்துக்கு எதிராக செயல்படுவது,புரட்சியை வீட்டுக்குள் தொடங்குவது நல்ல சிந்தனைதான் ஒவ்வொரு வீட்டிலும் இது நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பு வருகிறது.

லஞ்சம் வாங்குகிற பெற்றோரை குழந்தைகள் திருத்துகிற கதை இது.நல்ல கருத்தை வெகு எளிமையாக சொல்லி இருக்கிறார்கள். இதே கருத்தை பளிச்சென்று முதிர்ச்சியான காட்சிகளுடன் காட்டியிருந்தால் பாராட்டும்படி இருந்திருக்கும். சிறுவர்களை மையப் படுத்திய கதை என்றால் சிறுபிள்ளைத் தனமாகவே படத்தை இயக்க வேண்டுமா என்ன? ஆனாலும் இப்படி ஒரு கதையை படமாக்க முயன்ற தயாரிப்பளருக்கு பாராட்டு கூறலாம்.