புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வரவேண்டும் : கமல்

kamal23.4புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வரவேண்டும் என்று ‘ மோ’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் பேசினார்.

WTF எண்டர் டெய்ன் மெண்ட் மற்றும்  மொமெண்ட் எண்டர்டெய்ன் மெண்ட்   நிறுவனங்கள்  சார்பில் ரோஷித் ரமேஷ், ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மோ’ .

இப்படத்தை புவன் நல்லான். ஆர் எழுதி இயக்கியுள்ளார் . இவர்  இயக்குநர்கள் செல்வா, ஹோசிமின் ஆகியோரிடம் சினிமா கற்றவர். சில குறும்படங்கள் இயக்கியுள்ளார். இது ஒரு ஹாரர் காமெடி படம். .’மோ’ என்பது மோகினி என்கிற பாத்திரத்தைக் குறிக்கிறதாம்.

இத்திரைப்படத்தில் சன் மியூசிக்  வீடியோ ஜாக்கியான சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ‘சூது கவ்வும் ‘  ரமேஷ் திலக்,  செல்வா, ‘முண்டாசுப் பட்டி ‘முனீஸ்காந்த்  ராமதாஸ் , யோகி பாபு, மைம் கோபி, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

விஷ்ணு ஸ்ரீ .K  ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இவர் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மிடம் பணிபுரிந்தவர்.ஏ.ஆர். ரகுமானின் மாணவர் சமீர் D. சந்தோஷ் இசையமைத்துள்ளார். இவர் ‘இனிமே இப்படிதான் ‘ படத்தின் இசை அமைப்பாளர்.கலை – பாலசுப்ரமணியன், படத்தொகுப்பு – கோபிநாத்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் டீசரை உலகநாயகன் கமல்ஹாசன்  வெளியிட்டார்.  டீசரை பார்த்தவர்,’மோ’ படக்குழுவினரை  மனம் திறந்து பாராட்டி வாழ்த்தினார்.

 டீஸரை வெளியிட்டு உலகநாயகன் கமல் பேசினார். அவர் பேசும் போது,

“இந்தப் படத்தை பத்திரிகை குடும்பத்திலிருந்து வந்தவர் எடுத்திருக்கிறார். இவரது தாத்தா பத்திரிகை துறையில் மட்டுமல்ல சினிமா எடுத்தும் சாதனை படைத்தவர். அந்தக் காலத்தில் பல வெற்றிப் படங்கள் எடுத்தவர்.

சினிமாவுக்கு நல்ல இளைஞர்கள் வரவு முக்கியம் .இவர்களை வரவேற்போம். இந்த இளைஞர் தன்னை அமெச்சூர் என்றார். அமெச்சூர் என்பதை ஆர்வமுள்ளவர் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்குஅமெச்சூர் மீது எப்போதும் மரியாதை உண்டு .அவர்கள் தொழில் கற்ற புரொபஷனல்களை விட கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

சினிமாவுக்குப் புதியவர்கள் வரவேண்டும் .அப்படி வருகிற இளைஞர்கள் சினிமா மீது காதல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இயக்குநர் புவன் நல்லானுக்கு வாழ்த்துக்கள் . இசையமைத்துள்ள சமீர் D. சந்தோஷ், ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீ, கலை – பாலசுப்ரமணியன், படத்தொகுப்பு – கோபிநாத். ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

இப்போது வேண்டுமானால் இவர்களின் பெயர்கள் தெரியாமல் இருக்கலாம். வெற்றிக்குப்பின் நாளை பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு இவர்கள் வளரவேண்டும் ;வளர்வார்கள். நல்ல திறமையான இளைஞர்கள் சினிமாவுக்கு வரவேண்டும்.புதிய திறமையான இளைஞர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். .அப்படி வந்தவர்கள் நீண்டநாள் இங்கே தங்கவேண்டும்.

இவர்கள் தனித்தும் குழுவாகவும் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.”  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் படக்குழுவினருடன்  நடிகர்கள் செல்வா, சுரேஷ் ,ரமேஷ் திலக், சிவா,ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.