புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 467 வது ஆண்டு பெருவிழா !

புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையாரின் திருத்தலம் சென்னை மாநகரில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலையில் சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலையில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் சென்னை மாநகரிலுள்ள பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். ஓவ்வொரு வருடமும் உயிர்ப்பு ஞாயிறுக்கு பின்வரும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா வெகு ஆடம்பரத்துடன் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்த வருடம் இத்திருவிழாவானது ஏப்ரல் 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா ஏப்ரல் 19ம் தேதி மாலை 6.00 மணி அளவில் மேதகு. னுச. ஜார்ஜ் அந்தோணிசாமி பேராயர், சென்னை – மயிலை உயர் மறைமாவட்டம் அவர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணி அளவில் பல அருட்தந்தையார்களால் சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் 9ம் நவநாளன்று (28.04.2018, சனிக்கிழமை) ஆடம்பரத் தேர்த்திருவிழாவானது மேதகு. சிங்கராயர், ஆயர், சேலம் மறைமாவட்டம் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் இறுதி நாளில் (29.04.2018, ஞாயிறு) மாலை 6.00 மணி அளவில் கொடியிறக்கம் மற்றும் சிறப்பு திருப்பலியோடு இத்திருவிழா நிறைவுபெற உள்ளது. 
 
புனித ஆரோக்கிய அன்னையின் பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் பக்தியோடு பங்கேற்று அன்னையின் ஆசீரை பெற்று செல்ல இத்திருத்தலத்தின் அதிபரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை. P. து. லாரன்ஸ்ராஜ் அவர்கள் அன்போடு அழைக்கிறார். 
திருத்தலத்தைப் பற்றிய சிறிய வரலாறு:-
 
இத்திருத்தலத்தில் அநேக அற்புதங்களும், அதிசய சுகங்களும் நடந்துள்ளன. இப்பெருவிழா நாட்களில் எண்ணற்ற திருப்பயணிகள் இத்திருத்தலத்தை நாடி தேடி வருகின்றனர். சின்னமலை திருத்தல வளாகம், உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும்கூட வரலாற்று சான்றுகளை தாங்கியுள்ளது. இது சென்னை மாநகரின் வரலாற்று சொத்தாகும். இந்த புனித திருத்தலத்தின் தொடக்கம் கி.பி. 68ஆம் ஆண்டாகும். இயேசுவின் அப்போஸ்தலர்களுள் ஒருவரான புனித தோமையார் இந்தியாவில் வாழ்ந்த 20 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் சின்னமலையில் வாழ்ந்திருக்கிறார். புனித தோமையார், அன்னை மரியாளின் சிறப்பு பக்தர். புனித தோமையார், கால் பதித்த இப்பூமியில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இப்பகுதியில்தான் கிறிஸ்தவம் ஐரோப்பிய நாடுகளுக்கும் முன்பே பிறந்தது. முதன்முதலில் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயம் கி. பி. 1551 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் இந்த மலை குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போதுள்ள வட்ட வடிவிலான ஆலயமானது 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், இந்த வளாகத்தில் புனித தோமையார் வாழ்ந்த குகை, பலிபீடம், அதிசய நீருற்று, இரத்தம் கசியும் கற்சிலுவை மற்றும் மலை சரிவிலே வடிவமைக்கப்பட்ட படைப்புகள் வரலாற்று சான்றுகளாக திகழ்கின்றன.
 
இத்திருத்தலத்திற்கு வரும் அன்னையின் பக்தர்களுக்கென்று பேருந்து வசதிளும், மெட்ரோ இரயில் மற்றும் மின்சார இரயில் வசதிகளும் உண்டு. அருட்தந்தை. P.து. லாரன்ஸ் ராஜ் இத்திருத்தலத்தின் அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பொறுபேற்று, பங்குமக்களை ஆன்மீகத்திலும், புனித தோமையார் பறைசாற்றிய விசுவாசத்தை உலகறிய செய்யவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அனைவரும் வாரீர் ! ஆசீர் பெறுவீர் !!
 
 
Pin It

Comments are closed.