‘புறம்போக்கு’ விமர்சனம்

purampokku-2bஒரு தூக்கு தண்டனைக் கைதி,தூக்கு போடும் தொழிலாளி, சிறைத்துறை அதிகாரி, மறைமுக இயக்கம் இவற்றை வைத்து பின்னப்பட்ட கதைதான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.’

இந்தியாவில் உலகநாடுகள் சேர்க்கும் குப்பைகளுக்கு எதிராகப் போராடுகிறார் ஆர்யா. அதற்காக இயக்கம் நடத்துகிறார்.அரசை எதிர்க்கும்  அவர் மீது அதிகார வர்க்கம் பல குற்றச் சாட்டுகள் சுமத்தி தூக்கு தண்டனை விதிக்கிறது.

அவரை விரைவில் தூக்கிலிட ‘ஹேங்மேன்’ விஜய் சேதுபதியை சிறை அதிகாரி ஷாம் அணுகி ஏற்பாடுசெய்ய அவரோ தூக்கிலிடும் வேலையை செய்யத் தயக்கம் காட்டுகிறார். ஷாமின்பல்வேறு முயற்சிகளுக்குப்பின் ஒப்புக் கொள்கிறார்.

கார்த்திகா குழு தங்கள் மறைமுக இயக்கம் மூலம் ஆர்யாவை சிறையிலிருந்து தப்பிக்கச் முயற்சி செய்கிறது.  அதற்கு விஜய்சேதுபதியின் உதவியை நாடுகிறார்கள்.

தூக்கிலிடும் திட்டமும் தப்பிக்கும் முயற்சியும் ஒரு சேரத் தொடங்க..முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

படத்தில் அரசால் தீவீரவாதியாக சித்திரிக்கப்பட்ட பாலுசாமியாக ஆர்யா, எமலிங்கமாக விஜய்சேதுபதி  சிறை அதிகாரியாக ஷாம் என மூன்று முக்கிய பாத்திரங்கள்  வருகின்றன.மூவரையும் அளவோடு அழகாகப் பயன்படுத்தியிருந்தாலும்  ஷாம் நடிப்பில் மேலோங்கி அழுத்தம் பெறுகிறார். தோற்றம், உடல் மொழி, நடை, உடை என எல்லாவற்றிலும் மிகையின்றி மிளிர்கிறார்.
அமைதியாக ஆர்யாவும் அப்பாவித்தனமாக விஜய்சேதுபதியும் கொள்கை மாறாத பெண் திவிரவாதியாக கார்த்திகாவும் பதிகிறார்கள்.

படம் முழுக்க சிறையின் பின்னணியில் செல்கிறது. ஒரு சிறையின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டி காட்சிகளில் பிரமாண்டமும் யதார்த்தமும் காட்டியுள்ளனர்.

சிறை நடவடிக்கை, தூக்கு தண்டனை நடைமுறைகள் பற்றி விவரமாக காட்சிகள் சொல்கின்றன.

ஒரு முழுப்படத்தை சிறைக்குள் காட்டினாலும் சலிப்பூட்டமால் விறுவிறுப்பு கூட்டுகிறது திரைக்கதை.

நடிகர்களை அளவோடு நடிக்கவைத்து அழகு படுத்தியுள்ளார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். தன்னியல்பாக ஆங்காங்கேபாத்திரங்கள் பேசும் வசனங்கள் . நாட்டு நடப்பை அனாயாசமாக தோலுரிக்கின்றன.

படத்தின் பிரதான அம்சமாக என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவைக் கூறலாம். ஹெலிகாப்டர் காட்சியில் உயரே பறந்தாலும் சுரங்கப் பாதையில் சுழன்றாலும் அவரது கேமரா உழைத்துள்ளது.அந்தச் சிறையை வடிவமைத்த கலை இயக்குநர் சொல்வகுமாரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

வர்ஷன் இசையமைத்த பாடல்களில் அந்த சிறைப்பாடல் கருத்துக்குத்து..பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா அட..போட வைக்கிறார்.

தூக்கு தண்டனை எதிர்ப்பு கருத்துகள் பரவலாக உள்ள இக்காலத்தில் அதைப் பற்றி சரியான விமர்சனத்தை முன்வைக்கிற இப்படம் நியாயமான மக்கள் திரைப்படம் என்று உயர்ந்து நிற்கிறது. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனைப் பாராட்டி முதுகு வலிக்கும்வரை தட்டிக் கொடுக்கலாம்.