புலமைப்பித்தனின் அழகுணர்வும் தமிழுணர்வும்!

திரைப்படப் பாடல் எழுதுவது என்பது முற்றிலும் வேறு மாதிரியானது.
கதை கவிதை கட்டுரை எழுதுவது போலல்லாதது ;
சிக்கலான நெருக்கடிகள் நிறைந்தது.

கதை ,சூழல், பாத்திரம்,  மெட்டு, சந்தம் ,எளிமை, தரம் ,நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று பலமுனைக் கேள்விகளுக்கும் பொருந்தும் ஒரே பதிலாக எழுதப்பட வேண்டும்.

அது விரும்பிய வண்ணத்தில் வரையும் ஓவியமல்ல, கேட்கும் அனைத்து வண்ணங்களையும் கலந்து உருவாக்கும் ஓவியம் .

இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டுப் பாடல் எழுதும்போதும் புலமைப்பித்தனால்  மட்டும்தான் இவை அனைத்தையும் தாண்டி  அழகுணர்வையும் தமிழுணர்வையும் ஓசைப்படாமல் உள்ளீடாகக் கலந்து  வைக்க முடிந்தது.

புரட்சிக் கவிஞரைப் போல் எழுதுகிறார் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டு , திரையில் எம்ஜிஆரால் ஆதரிக்கப்பட்டு,
அரசவைக் கவிஞராக்கப்பட்டவர்.  அதேநேரம் கலைஞர் வசனம் எழுதிய படத்துக்கும்  பாடல் எழுதி,ஜெயலலிதா காலத்திலும் செல்வாக்குடன் இருந்தவர் புலமைப்பித்தன். இப்படித் தமிழ்நாட்டு அரசியலின் இரு துருவ எல்லைகளையும் தொட்டுத் தனது தமிழால் உறவாடியவர்.

கண்ணதாசன் இலக்கியங்களில் உள்ள கருத்துக்களைப் பாடல்களில் கலந்து கொடுத்தவர் என்றால் , புலமைப்பித்தன் பாடல்களையே இலக்கியமாக மாற்றிக் கொடுத்தவர் எனலாம்.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் ஆசிரியராக இருக்கும் தகுதி கொண்ட ஒருவர் தான் புலவர் புலமைப்பித்தன்.

‘குடியிருந்த கோயில்’ படத்தில் மூலம்  1966 -ல் நான் யார் என்று எழுத ஆரம்பித்தவர், கடைசிவரை தான் யார் என்று தனது தமிழால் நிரூபித்தவர்.அன்றைய எம்.ஜி.ஆர் முதல் இன்றைய விஜய் வரை எழுதியவர்.காகிதக் காலம் முதல் கணினிக் காலம் வரை நீண்டு நெடியது அவரது பயணம்.

அத்திக்காய் காய் காய் ,வான் நிலா நிலா அல்ல தந்த கவியரசரின் பாடல் வரிசையில் இவரது இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்,பாவை நீ மல்லிகை, கல்யாணத் தேன் நிலா, பாடல்கள் கண்டிப்பாக இடம்பெறும்.காதல், வீரம், சிருங்காரம் ,அவலம், துயரம்,ஆவேசம்,எழுச்சி என்று எந்த வகைமை உணர்விலும் அதில் அவர் தனது ஒளிர் தமிழை ஒளித்து வைத்திருப்பார்.

வணிகத் தேவையைப் பூர்த்தி செய்தாலே திரைப்பாடல் திருப்தியடையும்.
சங்கீத நடைக்கேற்ற சொற்கள் போதும் எனக் கருதாமல் அச் சொற்களில் சாகித்திய எடை ஏற்றியவர்.
திரைவணிக சூத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் செய்து முடித்து அதில் தமிழ் எண்ணெய் ஊற்றி கவிதீபம் ஏற்றியவர்.அதனால்தான் அவரது பாடல்கள் அழகு தமிழின் அடர்த்தியால் காலத்தைக் கடந்து நிற்கின்றன.இன்றைய  யூடியூப் காலத்திலும் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து  அவரது பாடல்கள் பார்க்கப்படுகின்றன.  அவை கடந்தகால ஏக்கமூட்டுகின்றன; மக்களின் நினைவுகளை மீட்டுகின்றன..

புலமைப்பித்தன் பிரபல கதாநாயகர்கள் பலருக்கும்  நல்ல பாடல்கள் எழுதியவர்,
எம்ஜிஆருக்காக  சிறப்பான பாடல்கள் நிறையவே எழுதியவர்.

 ‘நான் யார் நீயார்’  என்ற முதல் பாடலில் ‘வருவார் இருப்பார் ,போவார் நிலையாய், வாழ்வார் யார் யாரோ?’
என்று நிலையாமையை நிறுத்தி, ‘உள்ளார் ரசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ?’என்று எளியவர்களுக்கு இரக்கம் காட்டி  ‘அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ?’ என்று குரலற்றவர்களுக்கும் குரல் கொடுத்துச் சொற்சிலம்பமும் ஆடி இருப்பார்.

பெரும்பாலும் திரைப்பாடல்களில் ஒலிப்பது பாத்திரத்தின் குரல்தான் என்றாலும், நடிக்கும்  எம்ஜிஆரின் பிம்பத்துக்காகவும் எழுதினார். எம்ஜிஆரால் ஆதரித்து ஆராதிக்கப்   பட்டதால்,   ‘நாளை உலகை ஆள வேண்டும் ‘என்று அவருக்குப் பீடம் அமைத்து விசுவாசம் காட்டியிருப்பார்.

‘நல்ல நேரம்’ படத்தில்,’ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

ஆடி பாடி நடக்கணும் அன்பை நாலும் வளர்க்கணும்’,என்று எம்ஜிஆரின் மனமொழியில் எழுதியவர்,

‘நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்’ என்று
கொள்கை விளக்கமும் அளித்தார்.

 ’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில்   ‘பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்’ என்றவர் ,’காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க! கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’என , எம்.ஜி.ஆருக்கு வாழ்த்துப்பூக்கள் தூவுகிறார்.

‘நவரத்தினம்’ படத்தில் ஒரு படி மேலே போய் ‘உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்,
 அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன்’ என்று எம்ஜிஆருக்கு மகுடம் சூட்டி எழுதினார்.

 ’ உழைக்கும் கரங்களி’ல் ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
 இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே;

கடமை செய்வோம் கலங்காமலே; உரிமை கேட்போம் தயங்காமலே’ என எம்ஜிஆரின் கொள்கைகளைத் தன் தமிழ் வழியே அடுக்கினார்.

‘ எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று,விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது’ என்றவர், ‘சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம் சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்’ என்று நம்பிக்கையும் தருகிறார்.

‘இதயக்கனி’  யில்  ‘ இன்பமே உந்தன் பேர் பெண்மையோ?’ என்றும்’ இன்பமே உந்தன் பேர் வள்ளலோ?’ எனத்
தற்குறிப்பேற்றி எழுதியவர், பிறகு,’பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறது’ என்று    நாயகி மொழிவழி எம்ஜிஆரிடம் தனது அன்பைக் கசிய விட்டார்.

அதே  படத்தில் ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற;நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’
என்றும் ’நல்லவங்க எல்லாரும்  உங்க பின்னாலே;
நீங்க  நினைச்சதெல்லாம் நடக்குமுங்க   கண்ணு முன்னாலே’ என்றும் அரசியல் கனவுக்கு அச்சாரம் போட்டார்.

‘காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது ‘என்றவர்

‘மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது’
என்று பொதுவுடமை பேசி, மேலும்
‘நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
 கடலைப் போல விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
 வானம் போல பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்’
என்று கூறும்போது இதற்கு மேல் எம்ஜிஆருக்கான  கொள்கைப் பிரகடனம் வேறென்ன இருக்கப் போகிறது?என்று சொல்லவைத்தார்.

புலமைப்பித்தன்  இடதுசாரி மனநிலையும் பெரியாரிய குணநிலையும் கொண்டவர்.

பொதுவாக நாத்திகம் பேசுபவர்கள் எழுதும்போது சில சொற்கள் மீது தீண்டாமை காட்டுவதால் அவர்களின் படைப்புகளில் கலையின் ஈரம் காய்ந்துவிடுவதாகப் புகார் உண்டு.  அதற்கு இவர் விதிவிலக்கு.பெரியார் விருது பெற்ற ,பழுத்த நாத்திகவாதியாக இருந்தாலும் புலமைப்பித்தன்  தெய்வீகம் ,தீபாவளி ஏகாதசி,மோகினி ,ஆகாயகங்கை,மன்மதன், சங்கீதம்,தீர்த்தம்,மங்கல நீராடல், மோகன மயக்கம், இந்திரலோகம் ,தேவதை, பாற்கடல், பள்ளிகொள்ளல், மோகனப் பண், ஆத்மாவின் தாகம், செந்தூரம், பிரம்மன், கோவில் , ஜாமம்,யாகம்,தேவன், பூஜை, ஆராதனை, ராகதேவன், பூலோக சொர்க்கம், தரிசனம், மதன், காமன், ஜென்மம், வைபோகம், வேதம் என்று  ஆத்திக அடையாளங்கள் ஏராளம் எழுதியவர்.

‘காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இருவிழியில் ‘
 என்று ‘அழகெனும் ஓவியம் இங்கே’ பாடலில் எழுதியவர், ‘ஆயிரம் வாசல் இதயம்’ படத்தில்  ‘தென்றல் தேரில் வருவான், அந்த காமன் விடுவான்  கணை இவள் விழி’ என்றும்

‘அக்கினி  பிரவேசம்’ படத்தில் ‘கல்யாண பெண் போல வந்தாலே ‘ பாடலில்
‘பெண் என்பதோ காமனின் சீதனம்;கண் என்பதோ  கம்பனின் காவியம்’ என்பார்.

  ’உழைக்கும் கரங்கள்’ படத்து ‘கந்தனுக்கு மாலையிட்டாள் ‘ பாடலில்,’சொக்கருடன் மீனாட்சி சொக்கி நிற்கும் திருக்காட்சி’ என்றெல்லாம் எழுதுகிறார்.  

‘நீ சிரித்தால் நான் சிரிப்பேனி’ல்  ‘உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்’ என்றவர்,  ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடலில்,’அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்’   என்றார்.

‘நடிகன்’ படத்தில் ‘தேவ மல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே’ என்றும்,’தீபம்’ படத்தின்  ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி ’ பாடலில் ‘காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்’ என்றும் எழுதியிருப்பார்.

‘வானத்தின் மீன்களில் மல்லிகை தெளித்து,மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து, மங்கல இசை தரும் வீணையை மீட்டு மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு’என்று அலங்காரங்களில் ஆலாபனை செய்கிறார்.

‘நூறாவது நாள்’ படத்தில் ‘விழியிலே மணி விழியிலே’ பாடலில் ,’அர்த்த ஜாமங்களில் நடக்கும் இந்த யாகங்களில் கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்’ என்றும் ‘இவள் ரதியினம் உடல் மலர்வனம், இதழ் மரகதம் அதில் மதுரசம்,இவள் காமன் வாகனம், இசை சிந்தும் மோகனம் அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே!’
என்பார்.  

‘காதல் கிளிகளி’ல் ,’செவ்வானமே சீர் கொண்டு வா,இந்திரலோகத்து தேவதை ஒருத்தி பூமிக்கு வருகின்ற நேரம்’   என்றும் ’ஈரமான ரோஜாவே’யில்’ உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான்’என்றும்  எழுதினார்.

‘நல்ல பெண்மணி’ படத்தில் தமிழ் எழுத்துகளின் வகைமையை நினைவூட்டி,’இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்,நீயே என் செல்வரத்தினம் நெஞ்சம் தான் காஞ்சிப்பட்டினம்,
விழி நிறம் அஞ்சனம் ,சிவந்தது ஒரு நூதனம்’என்று தமிழ்ச்சுவை காட்டுவார்.

‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் ‘எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது?’ என்றவர், அடுத்து
‘இனியவளே என்று பாடி வந்தேன் ’இனி அவள்’ தான் என்று ஆகி விட்டேன்,
என்கிறார்.இதில் அனாயாசமாக மடக்கணியைப் பயன்படுத்தியிருப்பார்.

எவ்வளவோ வெளிவந்துள்ள திரைப்பாடல்களில் தனது தமிழ் மணக்கும் வரிகளின் மூலம் அவர் இட்டுச் சென்றிருக்கும் தமிழ்க் கையெழுத்தை நம்மால் படிக்க முடியும்.

‘தெய்வீக ராகங்கள்’ படத்தில் ‘பாவை நீ மல்லிகை’ பாடலில் ‘காரிகை, ஒத்திகை, மேனகை , கன்னிகை, நாழிகை’, என்றவர்,’தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை; அதில் தேன் ஊற நீ பாடும் இசை ஏழ்வகை’  என முத்தமிழையும் ஏழு வகை இசையையும் கூறியவர்,’சேல்விழி வேல் வகை சிற்றிடை நூல்வகை , தாங்கியே வந்த கை வாங்குமோ வாடகை? பண்புகள் நால்வகை ,அம்புகள் ஐவகை அல்லவோ என்பகை?

மாதமோ கார்த்திகை, மையலில் காரிகை மன்மதன் பண்டிகை மாலையில் காதலின் ஒத்திகை’
என்று எதுகையிலும் மோனையிலும் அழகுச் சொற்களை அடுக்கித் தன் கைவரிசையைக் காட்டி இருப்பார்.

‘ மதன மாளிகை’யில் ‘பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே;

கண் படும்போதே கசங்கிய மேனி கை படும்போது என்னாகும்?’ என்று வரும் இதே சிந்தனையை,
‘காக்கிச்சட்டை’யில் கமலுக்கு, ‘கண்மணியே பேசு ‘ பாடலில்  ‘கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்’ என்றும் ரஜினியின் ‘பணக்காரன்’ படத்தின் ‘சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது ‘பாடலில்

“பார்க்கும் பார்வையில் பாதி தேய்ந்தது என் மேனி; வேர்த்து வேர்த்து தான் மீதி தேய்ந்ததே’ என்றும் நிறம் மாற்றியிருப்பார்..

‘அழகன்’ படத்தில் ‘ஜாதி மல்லி பூச்சரமே ,சங்கத் தமிழ் பாச்சரமே’ பாடலில் ‘காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் ;கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று’ என்றும் காதலனுக்கும் கடமை வலியுறுத்தியவர், ‘யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி, பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி’  என்று தன் உள்ளக் கிடக்கையையும்உள்ளே வைத்திருப்பார்.

சிருங்கார ரசத்தை சிங்காரமாகச் சொல்வதிலும் இவர் கைதேர்ந்தவர் .  
முதல் உறவு பாடலைக் கூட ’சொர்க்கத்தின் திறப்பு விழா இன்று சோலைக்கு வசந்தவிழா’ வாக்கி பருவ நிலா ,இனிய பலா,  இன்ப  உலா  என்று தமிழ் செய்தவர்.

‘தொட்டில் இடும் இரு  தேமாங்கனி என் தோளில் ஆட வேண்டுமே;கட்டில் இடும் உன் காமன் கிளி மலர் மாலை சூட வேண்டுமே’ என்று காதலர்களின் மணம் பரப்பினார்.

இன்னொரு பாடலில் ’முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து ,மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து’என்பார் .வேறொரு பாடலில் ‘பூமேனியே மலர் மாளிகை பொன் மாலையில் ஒரு நாழிகை ,நாளும் நான் ஆடவோ?’ என்று எழுதியிருப்பார்.பாலுணர்வையும் படைக்கும்போது பூடகமாகச் சொல்லி வரிகளில் இலை மறை காய் மறைவாய் அழகுணர்வால் அலங்காரம் செய்துவிடுவார். 

‘ஆயிரம் வாசல் இதயம்’ படத்தில்  ‘கிச்சி கிச்சி தாம்பாலம்  கியா கியா தாம்பாலம் எங்க ராஜாவுக்கு எப்ப கல்யாணம்?’  என்று நகைச்சுவை கலந்தவர், ‘தீபம்’ படத்தின் ‘ராஜா யுவராஜா’ பாடலில்
பல மலர்கள் நாடும் வண்டான நாயகன் மனதைப் பற்றிக் கூறும்போது
 ‘ஒன்றா அது ரெண்டா? அது சொன்னால் ஒருகோடி ,ரசித்துச் சுவைப்பவன் நான்’, என்றும்
 ‘உன் போல் ஒரு பெண்பால்,விழி முன்னால் வரக் கண்டால் மயக்கிப் பிடிப்பவன் நான்’, என்றவர், மேலும் ஒரு படி மேலே போய் ‘நடிப்பிலே எவரையும் மயக்குவேன்; அணைப்பிலே கலைகளை விளக்குவேன்
 என் ராசி பெண் ராசி நீ வா வா’என்று குணச்சித்திரத்தின் பொழிப்புரையாக வரிகள் வரைந்திருப்பார்.

’கன்னிப்பருவத்திலே’யின் ’பட்டுவண்ண ரோசாவாம்’ பாடலில் வழிகிற துயரம் இன்றும் ஈரம் உலராமல் உணர வைக்கிறதே? ‘நாயகன்’படத்தின் பாடல்களில் இவரது வரிகளில் நம்மைக் காவியச்சுவையை உணரவைக்கவில்லையா?
‘எல்லோரும் நல்லவரே’ படத்தில் ‘செவப்புகல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி,
தங்க முகத்தில் குங்குமப் பொட்டு வச்சிக்கிட்டு, நீ எங்கடி போற சிங்கிடி சேலைய கட்டிக்கிட்டு?’ என்றும்
‘வெத்தல பாக்கு வைக்கிற சேதி சொல்லு மச்சான் ஒன் கள்ளச் சிரிப்புல கொள்ளையடிச்சது என்ன மச்சான்’
எனக் கிராமிய மணம் தூவியிருப்பார்.

தமிழ் திரையின் பேரவலம் எவ்வளவு தமிழறிவும் கவிதைச் செறிவும் கொண்டிருந்தாலும் தமிழ்சினிமா குடிகாரனுக்குப் பாட்டு எழுதாமல் கவிஞனை விடாது.இவரும் எழுதினார் ’வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட
ஊத்திக்கிட்டு கேட்டுக்கோடா என்னோட பாட்ட’ பாடல் பெரிய வெற்றி பெற்றது.

 ‘எல்லோரும் நல்லவரே’யில் ‘பகைக் கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்;
 தீராத கோபம் யாருக்கு லாபம்?’ எனக் கேட்டு, ‘வற்றிய குளத்தை பறவைகள் தேடி, வருவது கிடையாது, வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது’ என்று தத்துவத்தைத் தக்க வைத்திருப்பார்.

‘பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிர் ஒன்றும் விளையாது,
 பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது’ என வரிகளில்
 உலகியல் உண்மையை ஒளித்து வைத்திருப்பார்.

எஸ்பிபி க்கு ‘ஆயிரம் நிலவே வா ‘ என முதல் பாடல் தந்தவர்,அதன்பின் எஸ்பிபி பல்லாயிரம் பாடல் பாடினார்.

எம்.ஜி.ஆர்,சிவாஜிக்கு எழுதிய  அதே கவிஞர் நான்காம் தலைமுறையாக ‘ஈரமான ரோஜாவே’
நாயகன்  சிவாவுக்கும் எழுதினார் இப்படி, ‘அதோ மேக ஊர்வலம், அதோ மின்னல் தோரணம் அங்கே;
 இதோ காதல் பூவனம் இதோ காமன் உற்சவம் இங்கே’ . தொடர்ந்து, ‘குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்,முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்’ என்பார்.

‘எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன  இறைவன் கோர்ட்டிலே ?
மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தர்மம் கூண்டிலே’ என்று

‘எழுதாத சட்டங்கள்’ படத்தில் வெப்பமாகி, புதிய வந்தே மாதரம் எழுதி இருப்பார்.
அதே படத்தில்  ‘தேன் குளத்திலே குளிக்க வா மிதக்க வா’
பாடலில் ஈரத்தில் நனைந்து தெப்பமாகி ‘செம்பருத்தி பூவெடுத்து செஞ்சுவச்ச தேகம்
 தேவருக்கும் மூவருக்கும் இன்பம் தரும் யாகம்’ என்பார்.

‘கை கொடுக்கும் கை’ படத்தில் ‘தாழம்பூவே வாசம் வீசு’ பாடலில் ‘நடந்தால் காஞ்ச நிலம் செழிக்கும் சிரிச்சா கோயில் மணி அடிக்கும்’ என்கிறார் .

புலமைப்பித்தன் புலவருக்குப் படித்தவர்தான். தமிழ் பாண்டித்தியம் நிறைந்தவர்தான் இருந்தாலும் சமகால மொழியிலும் எழுத முடியும் என்பதற்கு
பாக்யராஜுக்காக ஜனரஞ்சகமாக எழுதும்போது புரிய வைத்தார். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ‘நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் நாடறிஞ்ச  மன்மதன் தான்’ என்பார்.

‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திலிருந்து ‘உச்சிவகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்சக்கிளி, பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க,சொன்னவங்க வார்த்தையில நியாயமில்ல  கண்ணாத்தா’

‘வட்டுக் கருப்பட்டி,வாசமுள்ள ரோசா, கட்டெறும்பு மொச்சுது ‘என்றெல்லாம் என்று அப்பாத்திரத்தின்  பேச்சு மொழியில் எழுதினார்.

’நேற்று இன்று நாளை’  யில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று,
பருவ மங்கையோ தென்னங் கீற்று’ என்று தொடங்கி
‘மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியை கொஞ்சம் அணைத்து,
இதழில் தேனைக் குடித்து,
ஒரு இன்ப நாடகம் நடித்து’ என்று காதலர் வழியே  நம்மை தமிழ்ச்சோலைக்குள் அழைத்துச் செல்வார்.

‘ரசிகன் ஒரு ரசிகை ‘படத்தில் ‘பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம், ‘கோவிலில் தேவிக்கு பூஜை அதில் ஊமத்தம் பூவுக்கேன்  ஆசை?  தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன்’ எனக் கர்ப்பக்கிரகத்தில் கற்பூர வாசனை தூவினார்.

‘மனிதனின் மறுபக்கம் ‘ படத்தில் ‘நீ என்ன மாயம் செய்தாய் நீருக்குள் தீயை வைத்தாய்’ என்பதும்
‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் ‘உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது’
என்பதும் கவிதைக்கூறல்லவா?

 ‘சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்’, என்றும் ’இதமாக மைபோட்டு இமை என்னும் கைபோட்டு, உன் கைகள் என்னைக் கொய்தன’ என்று ஜனரஞ்சக  ரஜினியின்
 ‘துடிக்கும் கரங்களி’ல் கூட தமிழ் மணம் கமழ வைப்பார்.

‘நீதிக்கு தலைவணங்கு’ படத்தில் ‘இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’
பாடலில் ‘தூக்க மருந்தினைப் போன்றவை  பெற்றவர் கூறும் புகழுரைகள்;நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்’  என உலகியல் உண்மையை உரக்கக் கூறுகிறார்.அதே பாடலில்,’பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை;
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை’ என்ற தாலாட்டுப் பாடலிலும் தத்துவங்களை முத்துக் கோர்க்கிறார்.

‘இன்று போல் என்றும் வாழ்க’ படத்தில்  ‘புதுமைப் பெண்கள் அறிவுக் கண்கள்
 ‘ என்றவர்,’அச்சம் என்றும் மானம் என்றும் அடக்கி வைத்தார்கள்
ஆண்கள் நம்மை ஆளத் திட்டம் தீட்டி வைத்தார்கள்’ என்று பெண்மைக்காக வாதிடுகிறார். அதே பாடலில்,’காசுக்காக மாலை சூட்டும் இழிந்த உள்ளங்கள்;கண்ணில் பட்டால் அச்சம் இன்றி விலங்கு பூட்டுங்கள்’’என்று  உரத்துப் பேசுகிறார்.

‘உலகம் சுற்றும் வாலிபனி’ல் ‘சிரித்து வாழ வேண்டும்’ பாடலில்  ‘முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை? சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை ?’ பிறப்பிடத்தைவிட  சிறப்பிடம் தான் முக்கியம்  என்றவர் ,தனது கனவுப் பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கூறும் போது,’வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்;
 காற்றில் ஏறி பயணம் செய்ய பாதை அங்கே இருக்கும்’ என்று எதிர்காலச் சிந்தனையை ஏற்றியிருப்பார்.

‘நீங்கள் கேட்டவை ‘ யில் ‘ஓ வசந்த ராஜா பாடலில் ‘உன் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்’ என்பார்.

கமல்ஹாசனுக்கு ‘நீயா’ வில்  எழுதும்போது ‘உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை,
 என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை’ என்று தொடங்கி
‘கலைகள் பயிலும் மாலைப் பொழுது ,விடியும் வரையில் நீயும் தழுவு’ என்று மன்மத மகரந்தம் தூவுவார்.

பாலச்சந்தரின் ’உன்னால் முடியும் தம்பி ‘ யில்  ‘அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா’ பாடலில்

‘கட்சிக் கொடிகள் ஏறுது  அங்கே,கஞ்சிப் பானை தெருவில் இங்கே ‘ என்று ஆவேசப்பட்டார்.
அதே படத்தில் வரும்  ’புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்ல’ என்று ஆதங்கப்பட்டு,’வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?’ என்றும் ’ ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ, வீடின்றி வாசல் இன்றித் தவிக்குது?’ எனக் கொதிக்தவர்,’ கங்கை தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?’என்றும் கேள்வி கேட்கிறார்.

அதே படத்தில் ’ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாராய கங்கை காயாதடா;
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை, கையோடு இன்றே தீ மூட்டுவோம்’ என்று புரட்சித் தீ மூட்டுகிறார்.

‘என்னடி மீனாட்சி ‘ யில் ‘தாமரை பூவிதழ் அங்கம் அல்லவோ? தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ?’ எனக் குறும்பு செய்கிறார்.

‘காதல் கிளிகள்’  படத்தில் ‘நடந்து நடந்து நலிந்த இடையோ? கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ?
வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ? வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ?’ என்பார்.

‘கோவில் புறா’ வில் ‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ மற்றும் ’வேதம் நீ பாடல்’ இசையும் தமிழும் இணைந்த விருந்தல்லவா?

‘மதன மாளிகை ‘யின் ‘ஒரு சின்னப் பறவை’ பாடலில்
’அன்னை என்பது மானுடம் அல்ல அது தான் உலகத்தில் தெய்வீகம்; அன்று அவள் சொன்னது தாலாட்டல்ல ஆன்மா பாடிய சங்கீதம்; வேதம் என்பது வேறெதுமல்ல, தாய் அவள் கூறிய உபதேசம்’ என்று தாய்மை உணர்த்தியவர்,’ விண்ணிலிருந்து இருப்பது சொர்க்கமும் அல்ல ,அதுதான் அன்னையின் மலர்ப் பாதம்’ என்று நபி வழியில் தாயின் பெருமையை உயர்த்துகிறார்.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’  ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ;
புவி அரசர்குலம் வணங்கும் புகழில் புரட்சித் தலைவன் நீ;
நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன?’ என்றும்

’தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்’ பாடலில்,’மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திரலோகம்?
அந்தி மாலையில் இந்த மாறனின் கணையில் ஏன் இந்த வேகம்?’  என்பவை சுகமான வரிகளல்லவா?
 
’எல்லாமே என் ராசாதான்’ படத்தில் ராஜ்கிரணுக்கும் எழுதுகிறார் ‘வீணைக்கு வீணை குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு’என்று. 
’சிவா’ வில் ரஜினிக்கு ‘அடி வான்மதி என் பார்வதி’ பாடலில் ‘கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்’ என்பார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்! அத்தனையிலும் அழகுணர்வும் தமிழுணர்வும் பின்னிப் பிணைந்து  இழையோடி மின்னும்.கவிஞர்  புலமைப்பித்தன்  எப்போதும் தன்னை முன்னிலைப் படுத்தாமல் தமிழை முன்னிலைப்படுத்தியவர்.

எந்தச் சூழலில் எழுதினாலும் எந்த நடிகருக்கு எழுதினாலும் பாடலில் ஜரிகை போல் தன் தமிழினை மினுக்கம் கொள்ள வைப்பார்.

 எந்த வகைமையிலும் மேற்கோள் காட்டப்படும் பாடல்களை  எழுதி இருப்பதால் புலமைப்பித்தன்  தன் தமிழ்ப்புலமையால் தன்னிகரற்ற திறமையால் என்றும் ஓர் ஆசானாக உயர்ந்து நிற்பார்.  திரைத்தமிழ் மேடையில் அவர், தானே தயாரித்து அமர்ந்திருந்த அந்த கம்பீர நாற்காலி என்றும்  காலியாகவே இருக்கும்.

-அருள்செல்வன்