‘பூமராங்’ விமர்சனம்

மணிரத்னத்தின் மாணவர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பூமராங்’ .

தீ விபத்தில் சிக்கும் அதர்வா உயிர் பிழைத்தாலும், அவரது முகம் முழுவதுமாக சிதைந்து கோரமாக மாறிவிடுகிறது. அதே சமயம், மூளைச்சாவு அடைந்த சுஹாசினியின் மகனின் உடலுறுத்ப்புகளையும், சதைகளையும் தானமாக வழங்க, அந்த சதைகளை அதர்வாவுக்கு பொருத்தும் மருத்துவர்கள் அவரை முழுவதுமாக மாற்றிவிடுகிறார்கள்.

புதிய முகத்தோடு தனது வாழ்க்கையை தொடங்கும் அதர்வாவுக்கு, நாயகி மேகா ஆகாஷ் நட்பு கிடைக்க பிறகு அதுவே காதலாக மாறிவிடுகிறது.

இதற்கிடையே, அதர்வாவைக் கொலை செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள். அதில் இருந்து தப்பிக்கும் அதர்வா தன்னை கொலை செய்ய துரத்துபவர்கள் யார் என்பதை அறிவதற்காக, சுஹாசினியை சந்திக்கும் போது அதிர்ச்சியானவற்றை அறிகிறார்.

தனது புதிய முகத்தின் பின்னணி மற்றும் அவர் யார்? என்பதை அறிந்தால் மட்டுமே தன்னை கொலை செய்ய துரத்துபவர்கள் யார்? என்பதை அறிய முடியும் என்ற முடிவுக்கு வரும் அதர்வா, முகத்தின் பின்னணி குறித்து அறியும் முயற்சியில் ஈடுபடும் போது, அதன் பின்னணியை அறிய திருச்சிக்கு செல்ல, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதர்வா மீது நடக்கும் கொலை முயற்சிக்கான பின்னணியும் தான் ‘பூமராங்’ படத்தின் மீதிக்கதை.

சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானராக தொடங்கும் படம், முடியும் போது மிகப்பெரிய சமூக விழிப்புணர்வை ரசிகர்கள் மனதில் விதைக்கிறது.

 இயக்குநர் ஆர்.கண்ணன், முதல் பாதியை படு விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

காமெடி, காதல், டூயட் என்று கமர்ஷியல் விஷயங்களுடன் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கும் இயக்குநர் கண்ணன், எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும், அதற்கான தீர்வையும் சொல்லியிருப்பதோடு, படம் முழுவதிலும் சமகால அரசியலையும், ஆட்சியாளர்களையும் வசனங்கள் மூலம் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

நாயகன் அதர்வா, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு,  கதைக்கு ஏற்ற நாயகனாகவே படம் முழுவதும் வலம் வருகிறார்.

நாயகி மேகா ஆகாஷின் கதாபாத்திரமும், அவருக்கான முக்கியத்துவமும் குறைவு தான் என்றாலும், அழகில் நிறைவாக இருக்கிறார். மற்றொரு நாயகியான இந்துஜாவுக்கு டூயட்டும், காதல் காட்சிகளும் இல்லை என்றாலும் படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

சதிஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் காமெடி சிரிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்க வைக்கிறது. அதிலும், ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான வசனங்கள் கைதட்டல் பெறும்.

லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால், விவசாயமும் அதனை நம்பியிருக்கும் மக்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும், என்பது குறித்து இயக்குநர் கண்ணன் அழுத்தமாக கூறியிருக்கிறார்.

‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதனின் இசையும், பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 அரசு எதிர்ப்பைக்கூறுகிற  பல படங்கள் வந்திருந்தாலும்,  கண்ணன் கையாண்ட விதமும் அதை சொல்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட களமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நதிநீர் இணைப்பு என்பதை . வசனங்கள் மூலமாக மட்டுமே தான் சொல்ல நினைத்ததைச் சொல்லாமல், காட்சிகள் மூலமாகவும் பல இடங்களில் சொல்லியிருக்கும் இயக்குநர் கண்ணனின் இந்த ‘பூமராங்’ ஆயுதமாக இருந்தாலும், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை யோசிக்க வைக்கும் படமாகவும் உள்ளம். ‘பூமராங்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம். 

Pin It

Comments are closed.