பொங்கலுக்கு 4 படங்கள்: ஸ்டன் சிவாவின் தலைப்பொங்கல்!

சுமார் 100 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணி புரிந்து இருக்கும் ஸ்டன் சிவா பங்கேற்பில் நான்கு படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன .இந்த அனுபவத்தைத் தலைப்பொங்கல் மகிழ்ச்சியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்து இருப்பவர் ஸ்டன் சிவா.

இவர் வரும் பொங்கல் திருநாளைத் தலைப்பொங்கலாக எண்ணிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் சிம்பு நடிப்பில் :ஈஸ்வரன்’ படத்தில் பிரதான வில்லனாக நடித்திருக்கிறார்.ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்திற்குச் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்து இருக்கிறார். தெலுங்கில்’அல்லுடு அர்துஷ்’ படத்தில் மாஸ்டர் ஆகவும் ,ரவிதேஜா நாயகனாக நடித்துள்ள ‘க்ராக்’ படத்தில் இரண்டாவது வில்லனாகவும் நடித்திருக்கிறார். இப்படித் தமிழில் இரண்டு தெலுங்கில் இரண்டு என்று நான்கு படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன.

இந்த நான்கு படங்களின் அனுபவம் பற்றி ஸ்டன் சிவா பேசும் போது,
“‘தொட்டி ஜெயா’ படத்தில் நான் மாஸ்டர் ஆகப் பணிபுரிந்து இருக்கிறேன் .அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் பேசப்பட்டன. அந்தப் படத்தில் நான் அமைத்த சண்டைக் காட்சிகளை பார்த்து தான் இந்திப்பட வாய்ப்பே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ‘தொட்டி ஜெயா’ படத்தில் சிம்பு சாரோடு நான் பணிபுரிந்திருக்கிறேன். அன்று பார்த்த அதே சிம்புவையே ‘ஈஸ்வரனி’லும் பார்த்தேன். அவர் எப்போதும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட். அவர் நடிப்பை அருகில் இருந்து பார்த்தால் வியந்து ரசிக்க முடியும். அவர் படத்தில் நான் மெயின் வில்லனாக நடித்திருப்பது மகிழ்ச்சி. அந்த வாய்ப்பு அளித்ததற்கு சுசீந்திரன் சாருக்கு நன்றி .அதுமட்டுமல்ல அதில் நான் பாரதிராஜா சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இந்தப் படத்தின் எனது தோற்றத்திற்காக நான்கு மாதம் தாடி வளர்த்தேன். அப்படி ஒரு மறக்க முடியாத பாத்திரத்தை அளித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன் சார்.

‘ஈஸ்வரன்’ படத்திற்காக காத்திருக்கிறேன்

ஜெயம்ரவி சாருடன் ஏற்கெனவே ‘நிமிர்ந்து நில்’, ‘அடங்கமறு’ படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.அவரது இந்த ‘பூமி’ படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் .இயக்குநர் லட்சுமணன் வித்தியாசமான முறையில் கதையைக் கையாண்டிருக்கிறார். தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் அவர்கள் செலவு பற்றி கவலைப்படாதவர். ‘பூமி’ பிரமாண்டமான காட்சிகளுக்காகப் பேசப்படும் .விவசாயிகள் சம்பந்தப்பட்ட பின்புலத்தில் இந்த கதை இருக்கும்.

தெலுங்கில் சாய் சீனு பெல்ல குண்டம் நடிப்பில் ‘அல்லுடுஅதுர்ஷ்’படத்தில் நான் மாஸ்டராகப் பணிபுரிந்துள்ளேன். அவரது முதல் படமான ‘அல்லுடு சீனு ‘படத்தில் நான்தான் மாஸ்டர்.இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் பேசப்படும். அடுத்து ரவி தேஜா நடிக்கும் ‘க்ராக்’ படத்தில் இரண்டாவது வில்லனாக நடித்திருக்கிறேன். கோபி சந்த் மாலினிதான் இயக்குநர். இதில் எனது கேரக்டர் புதுமாதிரி அடையாளம் சொல்லும்படி இருக்கும்”.

இப்படி நான்கு படங்களில் தன் பங்களிப்பின் சுருக்கத்தைக் கூறிய ஸ்டன் சிவா,ஸ்டண்ட் மாஸ்டரா? நடிகரா ?என்றால்,

“அடிப்படையில் நான் ஸ்டண்ட் மாஸ்டர் தான். நடிப்பிலும் ஆர்வம் உண்டு .என் ஆர்வத்தைத் தூண்டி என்னை அறிமுகப்படுத்தியவர் பாலா சார் தான் .’பிதாமகன்’ படத்தில் என்னை திடீர் நடிராக்கி ஊக்கப்படுத்தியவர் அவர்தான்.
‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் சாருடன் நடிக்க வைத்து கெளதம் மேனன் சார் எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தினார். நடிப்பில் அதன் பிறகுதான் நம்பிக்கை வந்தது என்று சொல்வேன்.”
என்கிறார்.

விஜய் நடித்த
‘லவ்டுடே ‘படத்தில் இயக்குநர் பாலசேகரன் மூலம் மாஸ்டராக அறிமுகமானவர் இந்த ஸ்டன் சிவா, அதே விஜய் நடிப்பில் ஆறு படங்களுக்குச் சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல ‘தெறி ‘படத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால்,தெலுங்கில் பாலகிருஷ்ணா ,ஜூனியர் என்டிஆர் ,நாகார்ஜுன், வெங்கடேஷ் , ராம்சரண், பிரபாஸ், ரவிதேஜா படங்களுக்கும்,கன்னடத்தில் புனித் ராஜ்குமார் படத்திற்கும் இந்தியில் அமீர்கான் ,சஞ்சய் தத் படங்களுக்கும் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.தென்னக மொழிகளில் மட்டுமல்ல இந்தியில் மட்டுமல்ல பிரெஞ்சு மொழியிலும் ஒரு படத்திற்கு சண்டைக் காட்சிகளை வைத்திருக்கிறார்.

‘சேம்பியன்’ படத்திற்கு சிறந்த வில்லன் நடிகராக ஆனந்த விகடன் தேர்வு செய்ததையும், இந்தி ‘கஜினி ‘படத்திற்கு சைனாவில் ஐபா விருது வாங்கிய தையும் மறக்க முடியாது என்கிறார்.
ஹிந்தியில் தன்னை அறிமுகப்படுத்திய ஏ. ஆர். முருகதாஸை தன்னால் என்றும் மறக்க முடியாது என்கிறார்.

ஸ்டன் சிவா கையில் இப்போது நான்கு படங்கள். சம்பளம் வாங்கிக்கொண்டு சண்டை போட ஓடிக்கொண்டே இருக்கிறார்.