‘மகளிர் மட்டும்’ விமர்சனம்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில்பெரும்பாலும் பெண்களை காட்சிப்பொருளாகவே பயன்படுத்துவர்.அவர்களை மையப்படுத்திய கதைகள் அரிதாகவே வருகின்றன. அப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் படம்தான் ‘மகளிர் மட்டும்’ .

சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் பால்யகால நட்பினர்.பள்ளிக் காலத்தில் நெருங்கிய தோழிகள். விடுதியில் தங்கிப் படிக்கும்  போது இவர்கள் ஒருநாள்  விடுதியிலிருந்து திருட்டுத்தனமாக வெளியேறி நிர்வாகத்திடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த் தவறுக்காக அவர்களது  பெற்றோர்,படிப்புக்கும் நட்புக்கும முற்றுப்புள்ளி  வைத்துவிடுகிறார்கள்.

பிறகு காலங்கள் ஓடிவிட, இந்த மூன்று பேருடைய நட்பு குறித்து அறியும் ஊர்வசியின் மருகளான ஜோதிகா, இந்த தோழிகளை மீண்டும் சந்திக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அவர்கள் பள்ளி காலத்தில் ஆசைப்பட்டதையும் நிறைவேற்றும் முயற்சியில் இறங்க, அது நடந்ததா இல்லையா? என்பதுதான் மகளிர் மட்டும்’ படத்தின் கதை..

 பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.‘
“தங்கை நகைகளை போட்டுக் கொண்டு, ஒரு பெண் தனியாக நடந்து செல்வது, பெண் சுதந்திரம் அல்ல”, ”தான் விரும்பும் ஆணை எந்தவித தடையும் இன்றி ஒரு பெண் எப்போது திருமணம் செய்துகொள்கிறாளோ அது தான் பெண் சுதந்திரம்” என்ற மிகப்பெரிய விஷயத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதையும், காட்சி அமைப்பும் நம்மை எப்படி ரசிக்க வைக்கிறதோ, அதைவிட ஒரு பங்கு அதிகமாகவே நடிகர்களின் கதாபாத்திர தன்மையும், அதில் அவர்கள் நடித்த விதமும் கவர்ந்துவிடுகிறது.

துதுறுவென்று சுட்டி பெண்ணாக இருக்கும் ஜோதிகா தனது தோற்றத்திலும் நடிப்பிலும்

மிகப்பெரிய மாற்றத்தை காண்பித்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் தான் கதையின் நாயகிகள் . அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பணியை கொடுத்திருக்கிறார்கள்.

ஜோதிகாவுக்கு பிறகு நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பவல் மற்றும் நாசர். ஆக்ராவில் வசிக்கும் தமிழர்களாக நடித்துள்ள இந்த இரண்டு பேரும், ரொம்ப சின்ன காட்சியாக இருந்தாலும், தங்களது இயல்பான நடிப்பு மூலமாக கைதட்டல் வாங்குகிறார்கள். மனைவி,, மருமகள், மகள், பேத்தி என யாராக இருந்தாலும் பெண்களை அதட்டி பேசும் திமிர் பிடித்த ஆணாக நடித்துள்ள நாசர், தனது நடிப்பால் படத்தில் உள்ள  பலரையும் ஓரம் கட்டிவிடுகிறார்.

ஜிப்ரானின் இசையில் அனைத்து மெட்டுகளும் ஓகே என்று சொல்ல வைப்பதோடு, பின்னணி இசையோடு, பாடல்கள் இசையிலும் தனது தனித்தன்மையை காண்பித்திருக்கிறார். பள்ளிக் காலத்தில் மூன்று தோழிகளை காட்டும் போதும், அவர்களை முதியவர்களாக காட்டும் போது ஒளிப்பதிவில் வித்தியாசத்தை காண்பித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இயக்குநர் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேமின் பணியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

அப்பா, அம்மா ஆகியோரது கட்டுப்பாட்டில் வாழும் பெண், பிறகு கணவனுக்காக, பிறகு பிள்ளைகளுக்காக, என்று தனது காலம் முழுவதும் பிறருக்காகவே வாழ்வதாகவும், அப்படி இல்லாமல் தங்களுக்காக தாங்கள் விரும்பும் வகையில் வாழ வேண்டும், அப்படி வாழ்வது தான் உண்மையான பெண் சுதந்திரம், என்பதை இப்படத்தின் மூலம் நமக்கு பாடமாக சொல்லாமல், ஜனரஞ்சகமான முறையில் நல்ல படமாகவே இயக்குநர் பிரம்மா கொடுத்திருக்கிறார்.

பிரிந்த மூன்று தோழிகள் மீண்டும் ஒன்றாக சேருவது என்ற கருவை வைத்துக்கொண்டு, அதை பெண்களுக்கான படமாகவும், அதே சமயம் ஆண்களும் ஏற்றுக்கொள்ளும் படமாகவும் இயக்குநர் பிரம்மா கொடுத்திருக்கிறார்.

Pin It

Comments are closed.