மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு

vaira-okமதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது ” திருவள்ளுவரை உயர்த்திப்பிடிக்கிறபோது தமிழர்கள் தங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்று பொருள். திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூல் என்ற போதிலும் அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.

திருக்குறள் தமிழர்களுக்குச் சொல்லப்பட்ட போதிலும் அது எல்லா மாநிலத்திற்கும்
பொதுவானது.இங்கே ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று ஒரு குறள் பாடப்பட்டது. திருவள்ளுவர் உடுக்கை இழந்தவன் கைபோல  என்றுதான் எழுதியிருக்கிறார்.
சட்டை இழந்தவன் கைபோல, வேட்டி இழந்தவன் கைபோல, சேலைஇழந்தவள் கைபோல,  ஜீன்ஸ்இழந்தவன் கைபோல என்று எழுதவில்லை.காரணம் ஆடைகள் மாறலாம். உடுத்தல் என்கிற கலாச்சாரம் என்றும் மாறாது. எனவே காலம் கடந்து  நிலைக்கவே திருவள்ளுவர்  ‘உடுக்கை’ என்று எழுதினார்.

16.16முதலில் திருவள்ளுவரை இன்று நிரம்பவே நினைக்க வேண்டிய சூழலில் தமிழ்ச் சமூகம் இருக்கிறது.

மது அருந்துதல் என்பது தமிழர்களின் பழைய கலாச்சாரம் தமிழன் மது அருந்தவில்லை என்பது பொய். அதியமான் அருந்தியிருக்கிறான்; ஔவை கூட மது அருந்தியிருக்கிறாள் என்று குறிப்பு இருக்கிறது. ஆனால் அந்த மது ,வாழ்வுக்கு எதிராக, கலாச்சாரத்துக்கு எதிராக, மனிதகுல மேன்மைக்கு எதிராக ஆகிற போது அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் திருவள்ளுவர் என்கிற பெருங்கவிஞர்தான்  என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மதுவுக்கு எதிராக எழுந்த முதல்  திருக்குரல் திருக்குறள்தான். கள்ளுக்கு எதிராக, போதைக்கு எதிராக, மயக்கத்துக்கு எதிராக அந்த கருத்தை தமிழகம் அமல் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இப்போது நிற்கிறது.

தமிழ்ச் சமூகம் மனித வளம் மிக்கது இம்மண்ணின் மிகப்பெரிய சொத்து மனித வளம்தான். அந்த மனித வளத்தை பாழ்படுத்துகிற ,பின்னுக்குத் தள்ளுகிற மனித வள மேம்பாட்டைக் குலைக்கிற மதுவை முற்றிலும் எதிர்த்து போராடினால் ஒழிய தமிழ்ச் சமூகம் மேம்பட வழியில்லை என்றே தோன்றுகிறது.

மதுவற்ற தமிழகம் ,மதுவற்ற தமிழன்,வள்ளுவன் கனவு கண்ட தமிழகம் உருவாக வேண்டும் என்பதே இந்தத் திருவள்ளுவர் திருநாளில்  நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாக  இருக்கிறது. இந்த நேரத்தில் மேலும் ஒரு செய்தி ,தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் .அது இப்போது தடைசெய்யப் பட்டிருக்கிறது .அந்தத் தடையை யார் செய்தார்கள் என்பது இரண்டாம் பட்சம். நீதிமன்றத்தைக் குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. சட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்.

ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு எந்தக் காயமும் இல்லை. சட்டம் என்பது காட்சிப்பட்டியலில் காளைகளை சேர்த்ததால் தடை செய்யப் பட்டிருக்கிறது. சட்டத்தை திருத்தினால் ஒழிய காளைகளுக்கு விடுதலை இல்லை. வாடிவாசலில் தேங்கி நிற்கிற காளைகள் வெளிவரவேண்டும் என்றால் சட்டத்திருத்தம்தான் தெளிவான தீர்க்கமான தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏறு தழுவுதல் என்பது ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரம். அந்த ஈராயிரம் ஆண்டுக் கலாச்சாரத்தை ஒரு சட்டம் முடக்குகிறது என்பதை தமிழினம் ஏற்றுக் கொள்ளாது. ஏறுதழுவுதலில் காளைகளுக்கு எந்தக் காயமும் இல்லை. அது ஒரு வீர விளையாட்டு மனிதர்கள் தங்கள் வீர விளையாட்டை எருதுகளோடு விளையாடிக் கொண்டாடுகிறார்கள் அது ஒரு விளையாட்டு என்று கருத வேண்டுமே தவிர விலங்குவதை என்று கருதக் கூடாது. ” இவ்வாறு  வைரமுத்து பேசினார்.