‘மரகத நாணயம்’ விமர்சனம்

IMAG6098மூன்று  வெவ்வேறு வகையான காலக்கட்டங்களில் நடக்கும் கதை இது.  விலை மதிப்புள்ள ஒரு மரகத நாணயத்தைத் தேடும் பயணம்தான் படத்தின் திரைக்கதை. நாயகன் ஆதியின் குழுவும் வில்லன் ஆனந்தராஜின்  குழுவும் இந்த மரகத நாணயத்தை தீவிரம் காட்டி மும்முரமாகத் தேடுகின்றன. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார். கொஞ்சம் பயமுறுத்தி  நிறையவே  சிரிக்க வைத்து உருவாகியிருக்கிறது படம்.

பல்லவ மன்னர் ஒருவர் தான் வைத்திருந்த மரகத நாணயத்தின் மூலம் பல வெற்றிகளை பெற்றதால், அந்த நாணயத்தை தனது வாரிசுகளுக்கு கூட கொடுக்க மனமில்லாமல், அதை வைத்துக்கொண்டே உயிருடன் சமாதியாகிவிட்டாராம். இறந்த அவரது ஆவி அந்த நாணயத்தை பாதுகாத்து வருவதாகவும், யாராவது அந்த மரகத நாணயத்தை எடுத்தால் அடுத்த நொடியே அவர்களை ஒரு வாகனம் மோதி மாண்டு விடுவார் என்றும் வரலாற்று செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.

அப்படி 120 பேர் மரகத நாணயத்தை எடுத்து உயிர் விட்டிருக்க, பணத்திற்காக அந்த மரகத நாணயத்தை எடுக்க ஆதி முடிவு செய்கிறார். மரகத நாணயத்தை எடுக்க வேண்டும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அனுபவிக்க உயிரோடும் இருக்க வேண்டும், என்று நினைக்கும் ஆதி, அதற்காக சாமியார் ஒருவரிடம் உதவி கேட்க, அந்த சாமியாரோ, ”மரகத நாணயத்தை எடுத்து, இறந்துபோன ஒருவரது ஆவியை துணைக்கு வைத்துக்கொண்டு அந்த ஆவி மூலம் மரகத நாணயத்தை எடுத்துவிட்டால், உங்கள் உயிருக்கு ஆபத்து வராது” என்று கூறுகிறார்.

சாமியாரின் சொன்னபடி  ஆவியை துணைக்கு அழைக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆதிக்கு ஆவி உதவி செய்ததா, அவர் மரகத நாணயத்தை, எடுத்தாரா இல்லையா, என்பதுதான் கதை போகும் பாதை.

மரகத நாணயத்தை எடுத்து பலர் இறந்திருந்தாலும், படத்தின் நாயகன் ஆதி இறக்க மாட்டார் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்தான்.  என்றாலும், அந்த நாணயத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் ஆதிக்கு உதவி செய்ய வரும் ஆவிகள் அடிக்கும் லூட்டிகளும், மரகத நாணயத்தை எடுத்த பிறகு பல்லவ மன்னனின் ஆவியிடமிருந்து ஆதி எப்படி தப்பிக்கிறார், என்ற ரகசியமும் தான் படத்தின் சுவாரஸ்யம்.

’முண்சாசுப்பட்டி’ படத்தில் பணியாற்றிய  ஏ.ஆர்.கே.சரவணன்தான் இப்படத்தின் இயக்குநர். அந்த படத்தில் ரசிகர்களை கவர்ந்த ராமதாஸை வைத்து பெரிய அளவில் இப்படத்தில் காமெடி கலாட்டாவை நிகழ்த்தியிருக்கிறார்.

மசாலா அனைத்தையும் மறந்துவிட்டு, கதைக்கு தேவையான ஒரு கதாபாத்திரமாக மட்டுமே நடித்துள்ள ஆதியும், இதுவரை எந்த நாயகியும் நடித்திராத வேடத்தில் நிக்கி கல்ராணியும், தங்களது  இமேஜை மறைத்துவிட்டு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற குணச்சித்திர நடிகர்களாக வருகிறார்கள்.

’முனிஷ்காந்த்’ வேடத்திற்குப் பிறகு இப்படத்தில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கும் ராமதாஸ் மற்றும் அவரது குழுவினருடன், ஆனந்தராஜ் இணையும் காட்சிகள் அத்தனையும் சிரிப்பு  பட்டாசுகள.

மரகத நாணயத்தை தொட்டவர்களை எல்லாம் வாகனம் ஒன்று மோதி கொள்வது போல காட்சியமைத்திருக்கும் இயக்குநர், அந்த வாகனத்திற்கும் பல்லவ மன்னரின் ஆவிக்கும் என்ன தொடர்பு இருக்கும், என்று ரசிகர்களை படம் முழுவதும் யோசிக்க வைத்துவிட்டு, அதற்கான விடையை கடைசியில்  இயல்பாக சொல்லியிருப்பது திரைக்கதைக்கு கூடுதல் பலம் .

திபு நினன் தாமஸின் இசையும், பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் கலகலப்பான காமெடிக் காட்சிகளையும் கடந்து நம்மை கவனிக்க வைக்கின்றன.

படத்தின் ஆரம்பமே முடிவு எப்படி இருக்கும், என்பதை நமக்கு புரியவைத்தாலும், திரைக்கதையும் அதை படமாக்கிய விதத்திலும் பளிச்சிடும் ஏ.ஆர்.கே.சரவணன் ஒரு புதுமுக இயக்குநராக நம்பிக்கை தருகிறார்.

Pin It

Comments are closed.