’மான்ஸ்டர்’ விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா ,பிரியா பவானி சங்கர் ,கருணாகரன் சில காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம்தான்  ’மான்ஸ்டர்’.சரி இதன் கதை என்ன?

படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா  ஒரு மின் வாரிய ஊழியர். அவருக்குத் தஞ்சாவூரில் ஒரு எளிமையான குடும்பம்.   வள்ளலார் பக்தர்.மற்ற உயிர்களைக் கொல்வதில் இவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. .அவருக்கு ஒரே நண்பர் கருணாகரன். சென்னையில் பணியாற்றும் சூர்யாவுக்குப் பெற்றோர் நீண்ட நாட்களாக வாழ்க்கைத் துணையை தேடி வருகிறார்கள்.ஆனால் அமைந்த பாடில்லை.

இப்படியிருக்க ஒரு பெண் பார்க்க சொந்த ஊருக்குச் செல்கிறார்கள். ஆனால் அங்கு அவருக்கு ஓர் ஏமாற்றம். இந்நிலையில் புதுவீட்டிற்கு குடிபெயரும் அவருக்கு ஒரு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருக்கும் ஒரு எலி ஒன்று செய்யக்கூடாத அட்டகாசம் செய்ய எஸ்.ஜே..சூர்யா எப்படி அதை சமாளிக்கிறார்? இடையில்  வைரம், கடத்தல்  என சில புதிர்கள் வருகின்றன. எலி என்ன ஆனது? புதிர்கள் என்ன ஆகின்றன? என்பதே இந்த மான்ஸ்டர் படக் கதை.

படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு.

அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, சொந்த வீடு வாங்கிய பெருமை, விநோதமான சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பது உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள வேடம், கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அவர் கூடவே வந்து மக்களைச் சிரிக்க வைக்கிற வேலை கருணாகரனுக்கு. வசனங்களில் மட்டுமின்றி பார்வையிலே பல இடங்களில் சிரிக்கவைக்கிறார்.அளவெடுத்துத் தைத்தது போல அழகான வேடம் பிரியாபவானிசங்கருக்கு. கண்களுக்கும் இதம் நடிப்பிலும் நன்று.

தம்மாத்தூண்டு எலிதானே என்று நினைக்க முடியாதபடி எலியைப் பற்றி பெரும் பயத்தையே உண்டாக்கிவிடுகிறார்கள்.

அந்த எலியும் ஓடி ஓடி உழைத்திருக்கிறது.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில்பாடல்கள் பெரிதாக இல்லையெனினும் பின்னணி இசை படத்துக்கு உயிரூட்டுகிறது. 

முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாம்பாதியில் இல்லை என்பது பெரும்குறை.

நாயகனின் மின்சார வாரிய வேலை நாயகியின் வைர நகைக்கடை வேலை ஆகியனவற்றுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமன்று எல்லா உயிர்களுக்குமானது என்கிற உயரிய கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப்படம். 

 

 

Pin It

Comments are closed.