’மாரி 2’ விமர்சனம்

 
ஏற்கெனவே வந்த தனுஷின்  ‘மாரி’- யின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது இந்த ‘மாரி 2’ .
 
 இப்போதுதான் வடசென்னை படம் வந்தது.அதற்குள்அடுத்தபடமும்  அதே ரகப்படமா? என்ற கேள்வி முதலில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இரண்டு அல்லக்கைகளுடன் பெரிய தாதாவாக வலம் வருகிறார் ரவுடி தனுஷ். அவரது உயிர் நண்பர் கிருஷ்ணா, அவருக்கு ஒரு தம்பி. தனுஷ் மற்றும் கிருஷ்ணா குழு ஒரு பகுதியில் கெத்துக் காட்ட, அதே பகுதியில்  எதிர் தரப்பு கோஷ்டி ரவுடி தனுஷைப் போட பல முறை முயன்று தோற்று போகிறது. போதைப் பொருள் வியாபாரத்தில் தனக்கு உதவி செய்யுமாறு தனுஷை கேட்க, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தனுஷ், கிருஷ்ணாவையும் அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார். இதற்கிடையே கிருஷ்ணாவின் தம்பி எதிர் தரப்பு கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டு  தனுஷிடம் இருந்து கிருஷ்ணாவை பிரிக்கவும் முயற்சி செய்கிறார்.
 
 
இந்த நிலையில், தனுஷை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு சிறையில் இருந்து தப்பிக்கும் கொடூர கொலை குற்றவாளியான டோவினோ தாமஸ், தனுஷின் எதிர் தரப்புடன் சேர்ந்துகொண்டு, போதை பொருள் வியாபாரத்தை செய்வதோடு, கிருஷ்ணாவின் தம்பியை கொலை செய்து அந்த பழியை தனுஷ் மீது போடுகிறார். இதனால் தனுஷ் மீது கிருஷ்ணா கோபமடைகிறார். கிருஷ்ணா மூலமாகவே தனுஷை கொலை செய்யும் முயற்சியிலும் டோவினோ தாமஸ் ஈடுபடுகிறார். அவரது கண்ணிலிருந்து  தப்பி காயங்களுடனும், தனது காதலி சாய் பல்லவி உடனும் தனுஷ் தலைமறைவாகிறார்.டோவினோ தாமஸோ அரசியல் செல்வாக்குடன் தனுஷ் ஏரியாவை கைப்பற்றி ராஜாங்கம் நடத்துகிறார்., தனுஷை தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் முயற்சியிலும் இருக்கிறார். 

 
 
இன்னொரு பக்கம் ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமி,  தாமஸ் ஒரு குற்றவாளி என்பதை நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட, அதற்கு தனுஷின் சாட்சி தேவைப்படுவதால் தலைமறைவாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது காதலி சாய் பல்லவியை தேடத் தொடங்குகிறார்.

 

தலைமறைவு வாழ்க்கை நடத்தும் தனுஷ், மீண்டும் வந்தாரா, டோவினோ தாமஸை வென்றாரா இல்லையா, என்பது தான் ‘மாரி 2’ படத்தின் மீதிக்கதை.
கதை  இதற்கு முன்பே பார்த்தது  போலவே உள்ளது.
பல தமிழ்ப் படங்களின் காட்சிகளைத்தழுவி  இயக்குநர் பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறார்.
 
 
மாரி கெட்டப் தனுஷுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது போல, அதனால் தான் அந்த கெட்டப் மீது மட்டுமே கவனம் செலுத்தியவர், பாலாஜி மோகன் சொன்ன கதையை கண்டுக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். பஞ்ச் வசனம், மாஸ் நடிப்பு, ஆக்‌ஷன் காட்சி போன்றவை இருந்தாலே போதும், என்று  எண்ணுவது துரதிர்ஷ்டம். 
 
 
 
தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் ஆட்டோ ஓட்டுநரான சாய் பல்லவி, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்திருக்கிறார். பல படங்களில் அழகு தேவதையாக வந்த அவரை புதிய தோற்றத்தில் பார்ப்பது ரசிகர்களை வருத்தப்பட வைக்கும்.
 
 
வில்லனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைக் கவரும்.தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவின் வேடம் சுமார் தான். ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் நடிப்பு கம்பீரம்.
 
 
மாரியில் காமெடியில் கலக்கிய வினோத் மற்றும் ரோபோ சங்கர் கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறார்கள். இவர்களது டைமிங் வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.
 
 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் “ரவுடி பேபி…” ஏற்கனவே பெரிய ஹிட்டாகியிருக்கும் நிலையில், விஷுவலாகவும் ரசிக்க வைக்கிறது. ஆனால், இளையராஜாவின் குரலில் உருவான அந்த பாடல் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் சுமார்.
 
 
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் கேமரா சுழன்றிருக்கும் விதம்  சபாஷ் எனச் சொல்ல வைக்கிறது.
 
 
 
இயக்குநர் பாலாஜி மோகன்என்ன சொல்ல வருகிறார்?, என்ன சொல்ல போகிறார்?, என்பது தான் படம் முழுவதும் ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகளாக இருக்கிறது.
 
 
 
மொத்தத்தில், இந்த ‘மாரி 2’ தனுஷ் ரசிகர்களுக்கு மட்டும்தானா எனக்கேள்வியை எழுப்புகிறது.
 
 
 
 
Pin It

Comments are closed.