‘மீகாமன் ‘விமர்சனம்

RO_L9877கள்ளக் கடத்தல் மாபியா கும்பலில் ஊடுருவி அவர்களிடம் சேர்ந்து அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.

ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு வெளிநாட்டு போதை மருந்து  கொக்கைன் ஆயிரம் கிலோ வருகிறது அதை விற்க கைமாற்ற இரு கும்பலிடம் போட்டி.இந்நிலையில் கள்ளக் கடத்தல் மாபியா கும்பலில் போதை மருந்து காணாமல் போகிறது யார் வேலை இது என்று தலைவனான ஜோதிக்குக்குச் சந்தேகம். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படுகிறார்கள்.

தனக்கு வந்த பெரிய ஆர்டர் கைநழுவிப் போனதே என்று தலைவன் ஜோதி மிகுந்த வேதனையடைகிறான். ரமணாதான் இந்த விஷயத்தை போலீசுக்கு காட்டிக் கொடுத்தான் என்று பிடித்து ஜோதியின் ஆட்களிடம் ஒப்படைக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. மேலும், ஜோதியின் கூட்டத்திலேயே எதிரி ஒருவன் இருக்கிறான் என்றும் சொல்லிவிட்டு செல்கிறார்.ஒரு திட்டத்தோடு மாபியா கும்பலில் ஊடுருவி  உள்ளே கலந்துள்ள ஆர்யா ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் தன்மீது விழும் எல்லா சந்தேக வலைகளையும் அறுக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் என்கிற உண்மை தெரிகிறது. இறுதியில், ஜோதியின் கூட்டத்தில் உள்ள ஆர்யாவை அவர்கள் கண்டுபிடித்தார்களா? அல்லது ஆர்யா, ஜோதியை வெளியே கொண்டு வந்து கைது செய்தாரா? என புதிர்கள். இலாகாவின் எல்லா ஆதரவும் கைவிடப்பட்ட நிலையில் தன்னந்தனியாக எப்படி முறியடித்து காக்கிசட்டையின் பெருமையைக் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.

ஆர்யா பிளேடை வாயில் கடித்து துப்புவதில் தொடங்குகிறது படம். அசல் கடத்தல் காரராக நம்பவைக்கும் ஆர்யா நடிப்பில் ,ஆக்ரோஷ துப்பாக்கி சண்டைகளில் ஆவேச ஆர்யாவாக பலபடிகள் உயர்ந்து நிற்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா, முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். தன்னைவிட்டு ஆக்ஷன் சென்றுவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர்யா. இறுக்கமான முகத்துடன் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

பிரதான வில்லன் ஜோதியாக வரும் அசுத்தோஷ் ராணா மகாபாரத துரியோதனன் போல கடைசிவரை மிரட்டுகிறார். ஆர்ப்பாட்டமில்லாமலேயே அச்ச மூட்டுகிறார். பிதாமகன் மகாதேவன் படுபயங்கர வில்லனாக வருகிறார் .ஹன்சிகா சூழ்நிலை தெரியாது நாயகனை துரத்தி விரும்பும் வழக்கமான நாயகி. என்றாலும் இருவரையும் சேர்த்து வைக்காமல் புதுமை செய்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

இவ்வளவு வன்முறைக் காட்சிகளை  இயக்குநர் கொஞ்சம் தவிர்த்திருக்காலாமே. காதறுப்பு கையறுப்பு எல்லாம் இல்லாமலேயே வன்முறையை உணரவைக்க முடியுமே.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இருக்கை நுனிக்கு இழுத்தும் செல்லும் காட்சிகள் அசத்தல் நறுக் சுருக் வசனங்கள் பளிச்

விறுவிறுப்பான திரைக்கதையால் கதை என்று ஒன்றைச் சொல்ல அவசியமில்லாமல் காட்சிகளால் மிரட்டியுள்ளார். சதிஷ்குமாரின் ஒளிப்பதிவும் எஸ் எஸ் தமனின் இசையும் பெரிய பலமாய் இணைந்துள்ளன.

பர  பரக்கும் தட தடக்கும் காட்சிகளால் இதயத்துடிப்பை எகிறவைக்கும் இடங்கள் படத்தில் நிறையவே உண்டு அனல் அரசுவின் கனல் தெறிக்கும் சண்டைகள் அட  போட வைக்கின்றன. பாடல்களின்அவசியமே இன்றி  பரபரப்பான திரைக்கதை இருப்பதால் ஒலிக்கிற இருபாடல்களும் கூட  அனாவசியம் என உணர வைக்கின்றன. சபாஷ்  மகிழ்திருமேனி.

RO_L9491