’மீண்டும் ’விமர்சனம்

அஜீத்தின் ‘சிட்டிசன்’ புகழ் சரவண சுப்பையா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மீண்டும்’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார் . ஒளிப்பதிவினை ஶ்ரீனிவாஸ் தேவாம்ஸம் செய்து இருக்கிறார். நரேன் பாலகுமார் இசை அமைத்து இருக்கிறார். 

கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ப்ரணவ் ராயன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, சுப்ரமணிய சிவா, யார் கண்ணன், கேபிள் சங்கர், ‘களவாணி’ துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணுக்கும் அவளது இரண்டு கணவர்களுக்கும் இடையே ஒரு குழந்தைக்காக நடக்கும் உணர்வுகளின் பாசப் போராட்டமே ‘மீண்டும்’ படத்தின் கதைக்கரு.  

அப்படி என்ன கதை?

படத்தின் நாயகனான கதிரவன் மற்றும் நாயகியான அனகா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அனகா கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அண்டர் கவர்  பணி காரணமாக வெளியூர்  போகிறார். சென்றவர் திரும்பி வரவில்லை. அனகாவுக்குக் குழந்தை பிறக்கிறது. அனகாவின் பெற்றோருக்குக் கதிரவனைப் பிடிக்காது என்பதால் அவரது குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்லி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு இவருக்கு சரவண சுப்பையா உடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர். கதிரவன் திரும்பி வருகிறார். பிறகுதான் அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வருகிறது.

தன்னுடைய மகனைக் கண்டுபிடித்து அவரை வளர்த்து வருகிறார். ஒருநாள் இருவரையும் மருத்துவமனையில் பார்த்த அனகா அது தன்னுடைய குழந்தை தான் எனப் புரிந்து கொள்கிறார். அதன் பிறகு இந்த தகவலை தன்னுடைய இரண்டாவது கணவரிடம் சொல்ல அவரும் குழந்தையை வளர்க்கலாம் என்கிறார். ஆனால் கதிரவன் தர மறுக்கிறார். 

அதன்பிறகு கதிரவனுக்கு மீண்டும் வேலை வந்துவிடுவதால் தன்னுடைய மகனை மனைவியிடம் விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். சென்றவர் திரும்பி வந்தாரா? அவருடைய மகனின் நிலை என்ன ஆனது? இறுதியில் இவர்களது குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் முடிவு. ‌‌‌‌‌

அப்பாவுக்கும் அந்த குழந்தைக்கும் இடையேயான பார்த்த உணர்வு கலங்க வைக்கிறது.

கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகிய மூவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். அனகாவிற்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து பாசத்திற்காக ஏங்கும் அம்மாவைக் கண்முன் நிறுத்துகிறார். குழந்தைக்காக இரண்டு கணவர்களுக்குமிடையே அவர் படும் போராட்டத்தினை முக பாவனையில் சிறப்பாகக் காட்டி இருக்கிறார். அதை போலவே காதல் காட்சிகளில் கண்களில் காதல் வலை வீசி மனம் கவர்கிறார்.பாடல்களில் கவிதை நயம்.

இரண்டு ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணிற்கு எந்த இழுக்கும் ஏற்படாமல்  இயக்குநர் சரவண சுப்பையா திரைக்கதையை வடிவமைத்த விதம் நன்று. இதையே இறுதிவரை கொண்டு சென்றிருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். அதை விடுத்து  கறுப்புப் பணம், செயற்கை சுனாமி எனக் கொண்டு சென்றது திசைமாற்றமாகி விட்டது. 

இன்னொரு நாட்டின் சிறையிலிருந்து இந்திய ‘உளவாளி’ கதிரும் அவரது சகாக்களும் தப்பிக்கும் காட்சியும், இந்தியன் எம்பஸி அருகே நடக்கும் துப்பாக்கி சண்டைக் காட்சியும் நம்பமுடியாத ரகம்.படத்தில் பாதிக்கு மேல் இடம் பெறும் மலையாள வசனங்கள் சற்றே ஒவ்வாமை ஏற்படுத்துகின்றன.

படத்தின் இசையும் ஒளிப்பதிவும் கூடுதல் பலம்.

’ மீண்டும்’ சரவண சுப்பையாவின் ஒரு வித்தியாச முயற்சி .