‘மெஹந்தி சர்க்கஸ்’ விமர்சனம்

 

சர்க்கஸ் பின்னணியில் ஒரு காதல் படம். கார் பந்தயங்களின் வேகத்தில் திரைக்கதைகளைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்ட சமகால ரசிகர்களுக்கு ஒரு தென்றலைப்போல வந்திருக்கிறது மெஹந்தி சர்க்கஸ்.

காதல் இல்லாமல் எதுவும் இல்லை, என்பதை பல திரைப்படங்கள் சொன்னாலும், சில படங்கள் மட்டுமே அதை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, ரசிகர்களின் உள்மனதுக்குள் இருக்கும் சுகமான காதல் நினைவுகளையும், வலி நிறைந்த அனுபவங்களையும் தட்டி எழுப்பும் வகையில் சொல்கின்றன. அப்படியான படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு.

’குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜு முருகன், கதை மற்றும் வசனத்தில், அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரனின் திரைக்கதை இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருபாதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மெஹந்தி சர்க்கஸ்’ எப்படி?

1990 களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ராஜகீதம் மியூசிக்கல் என்ற பெயரில் பாடல் ஒலிப்பதிவு கடை ஒன்றை நடத்தி வரும்நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், இளையராஜாவின் பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் வட இந்திய மாநில குழுவில் உள்ளநாயகி ஸ்வேதா திரிபாதி மீது ரங்கராஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஊரார் காதலை இளையராஜாவின் பாட்டு மூலம் வளர்த்தவர், தன் காதலை சும்மா விட்டுவிடுவாரா, இந்தி பாடல் கேட்ட ஸ்வேதாவை இளையராஜாவின் பாடல் மூலமாகவே, தனது காதல் வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.

நாயகனின் சாதி அபிமான அப்பா ஒரு புறம், மறு புறம் பிழைக்க வந்த இடத்தில்  காதலை ஏற்க மறுக்கும் நாயகியின் அப்பா. இப்படி இரு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வர, அதையும் மீறி பறக்க நினைக்கும் காதலர்களை நம்பிக்கை துரோகம் ஒன்று பிரித்துவிடுவதோடு, மீண்டும் அவர்கள் சேர முடியாதபடி அந்த துரோகம் தொடர, மதுவுக்கு அடிமையாகும் நாயகன் இளையராஜா பாட்டும்,  ஸ்வேதாவின் அப்பா சொன்னதைச்  செய்ய முடியாத விஷயத்திலும் மூழ்கிவிடுகிறார். இதற்கிடையே, 25 வருடங்களுக்கு பிறகு காதலியின் மகள் அம்மாவின் கடைசி ஆசையை நிறவேற்ற காதலனைப்  பார்க்க பூம்பாறைக்கு வர, அதன் பிறகு நடப்பவை தான் படத்தின் மீதிக்கதை.

இளையராஜாவின் பாடல்களுக்கும், காதலுக்கும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை, அவரது சில பாடல்களோடும், அழகியலான காட்சிகளோடும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கு இது தான் முதல் படம் என்றாலும், அது தெரியாதவாறு இயல்பாக நடித்திருப்பவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்தால், மாதம்பட்டி ரங்கராஜ் நிச்சயம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிவிடுவார்.

நாயகி ஸ்வேதா திருபாதி, வட மாநில பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, ஹிந்தி கலந்த தமிழ் பேசியே நம்மை கவர்ந்துவிடுகிறார்.

ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் மாரிமுத்து எப்போதும் போல தனது வேலையைச் சரியாக செய்திருக்கிறார். வேலராமமூர்த்தி, வித்தியாசமான வேடத்தில், விபரீதமாக நடித்து மிரட்டுகிறார். அதிகமாக பேசினாலும்,  கவனிக்கப்படாமல் இருந்த ஆர்.ஜே.விக்னேஷுக்கு நல்ல ஒரு வேடத்தை கொடுத்து, ரசிகர்கள் கவனத்திற்கு இயக்குநர் கொண்டு சென்றிருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் சன்னி சார்லஸ் மற்றும் காதல் வில்லன் அன்கூர் விகால் உள்ளிட்ட படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களது நடிப்பும் இயல்பாக இருப்பதோடு, நம்மை கதைக்குள் ஈர்க்கவும் செய்துவிடுகிறது.

90 களில் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் காதல் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரனின் திரைக்கதைக்கும், காட்சிகளுக்கும், குட்டி இளையராஜவாகவே இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உயிர் கொடுத்திருக்கிறார்.

“கோடி அருவி..”, “வெள்ளாட்டு கண் அழகி…”, ”வெயில் மழையே…” ஆகிய பாடல்களை திரும்ப திரும்ப கேட்க வைக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையின் மூலமாகவும் நம்மை வருடிச் செல்கிறார்.பாடலாசிரியர் யுகபாரதியின் எளிமையான பாடல் வரிகள் அத்தனையும் இனிமை. 

வட மாநிலத்தில் வரண்ட பகுதியையும், தென் மாநிலத்தின் குளிர்ச்சியான இயற்கை எழில் நிறைந்த பகுதியையும் நமது கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வக்குமார்.எஸ்.கே.

கதையின் சூழலுக்கு ஏற்றவாறு இயக்குநர் சரவண ராஜேந்திரன்  காட்சிகளையும் இதமாக வடிவமைத்திருப்பவர், காதல்பிரச்சினையையும், காதலர்களின் வலியையும் கூட ஆக்ரோஷமாக கையாளாமல் ரொம்ப அழகியலோடு கையாண்டு ரசிக்க வைக்கிறார்

”தாலி கட்றவன் புருஷன் இல்ல, மனசுக்குள்ள இருக்குறவன் தான் புருஷன்” என்று காதல் வசனங்கள் மூலம் கைதட்டல் வாங்கும் வசனகர்த்தா ராஜு முருகன், சாதி பிரிவினை பற்றியும், மனிதம் மற்றும் அரசியல் பற்றியும் பேசி வசனம் மூலம் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்.

காதல், பிரச்சினை, காதல் தோல்வி என்று பல படங்களில் பார்த்தவைகள் தானே, என்றாலும் கூட அதை சொல்லிய விதமும், குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சி, காவியமாக அமைந்த காதல் படங்களின் பட்டியலில் இப்படத்தையும் இடம்பெற செய்துவிடுகிறது.

இப்படி தான் படம் முடியும், என்று எதிர்பார்த்த ரசிகர்களை, எதிர்ப்பார்க்காத ஒரு முடிவை சொல்லி, ஒட்டு மொத்த காதலர்களையும் இயக்குநர் சரவண ராஜேந்திரன் கொண்டாட வைத்துவிடுகிறார்.

 கோடைக்காலத்தில் ஒரு குளிர்தருவாக வந்திருந்தாலும், இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காதலை, காதல் உணர்வுகளை திரைக்கதையில் பின்னியிருக்கலாமோ?

மொத்தத்தில், இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்’ ‘மெஹந்தி சர்க்கஸ்’ மற்றவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும், காதலர்களுக்கு   ஒரு காதல் கீதமே.

Pin It

Comments are closed.