‘யானும் தீயவன்’ விமர்சனம்

Yaanum-Theeyavan-Movie-Stills-41அறிமுக நாயகன் அஸ்வின் ஜெரோமுடன் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் மிரட்டலான வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் படம் ‘யானும் தீயவன்’.

அஸ்வினும், வர்ஷாவும் காதலர்கள். எங்காவது வெளியே செல்ல விரும்பும் காதலியைக் கடற்கரைக்கு அழைத்துப் போகிறார். அங்கே மது குடித்து மப்பில் இருக்கிறார்கள் பெரிய ரவுடியான ராஜு சுந்தரத்தின் ஆட்கள். அவர்கள் வர்ஷாவிடம் வம்பு செய்கிறார்கள்.தவறாகப்பேசுகிறார்கள்.உள்ளுக்குள் ஆவேசப்பட்டாலும்  அப்போது அமைதியாக அங்கிருந்து தப்பித்து விடும் அஸ்வின், வர்ஷாவைப் பாதுகாப்பாக   வீட்டில் சேர்த்துவிட்டு, மீண்டும் அந்த இடத்திற்கு வந்து, ராஜு சுந்தரம் அண்ட் கோவைப் புரட்டி எடுத்துவிட்டு வந்து விடுகிறார்.சின்ன வயதிலேயே கொடூர குணம் படைத்து பல கொலைகள் செய்து போலீசுக்குத்தண்ணி காட்டும் பசுபதி என்கிற தாதாதான் ராஜு சுந்தரம் என்பது நாயகனுக்குத் தெரியாது.

ஒருகட்டத்தில் அஸ்வின் – வர்ஷா காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்து  கொள்கிறார்கள். பிறகு தனது நண்பர் ஒருவரது வீட்டில் தற்காலிகமாகத் தங்குகிறார்கள்.  எதிர்பாராத விதமாக அங்கே வரும் ராஜு சுந்தரத்திடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

அதே சமயம், தேடப்படும் குற்றவாளியான ராஜு சுந்தரத்தை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிற போலீஸ் அதற்கான நடவடிக்கையில் இறங்குகிறார்கள். போலீஸின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் ராஜு சுந்தரம், என்கவுண்டரில் இருந்து தப்பித்தாரா இல்லையா, அவரிடம் மாட்டிக் கொண்ட அஸ்வின் – வர்ஷா தப்பித்தார்களா இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸ்.

அறிமுக நாயகன் அஸ்வின் ஜெரோம்,  நல்ல  உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார்.,  குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். நாயகி வர்ஷா மூக்கும் முழியுமாகத் தோற்றத்தில் நஸ்ரியாவை நினைவு படுத்துகிறார்.  சிறு சிறு முகபாவனைகள்  மூலமே ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறார்.

முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் ராஜு சுந்தரத்திற்கு வசனங்கள் இல்லாமலேயே  மிரட்டலான நடிப்பு.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்தோடு பயணித்துள்ளன.

சில தொழில்நுட்ப விஷயங்களில் கோட்டை விட்டிருப்பதை விட்டுவிடலாம்.தான் சொல்ல வந்ததை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற முடிவில் திரைக்கதையை தொய்வின்றி  அமைத்துள்ள இயக்குநர் பிரசாந்த் ஜி.சேகர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனாலும் படம் பார்த்து முடித்தபின் பார்முலாகதை போலத் தெரிவது மட்டுமல்ல பழைய படம் போலவும் தெரிவது ஒரு பலவீனம்.

 

 

Pin It

Comments are closed.