ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட பாடல்கள்!

3ee3கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி. சரண் தயாரிக்கும் படம் ‘மூணே மூணு வார்த்தை’. அறிமுக நாயகன் அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை’  புகழ் வெங்கி, அதிதி எஸ்.பி..பாலசுப்ரமணியம், லக்ஷ்மி, பாக்யராஜ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை மதுமிதா இயக்கியுள்ளார். “ பொங்கல் பண்டிகையின் கடைசி தினமான காணும் பொங்கல் திருநாளில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

படக்குழுவினரின் flash-mob நடனத்துடன் விழா ஆரம்பித்தது. இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அனைத்து கலைஞர்களையும் ரசிகர்களுக்கு அறிமுக படுத்தி, இந்த படத்தில் நடித்து இளைஞர்களை வழி நடத்திய மூத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்  எஸ்.பி. சரண்.

புதுமுக இசையமைப்பாளர் கார்த்திகேயமூர்த்தியை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் மதுமிதா. உருவத்தில் இசையமைப்பாளர் AR ரஹ்மான் சாயலில் இருப்பதை கண்டு வியத்திருந்த ரசிகர்களை, இப்படத்தில் ‘சுட்டகதை’ சுப்பு எழுதிய ‘ கேட்ட NEWS’ என்ற பாடலை பாடி மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்தினார்.

பின்னர் பேசிய கார்த்திகேயன் ” படத்தில் எஸ்.பி.பி. சார் பாடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால், கதையில் அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. படத்தின் பின்னணி இசை பணியில் இருந்தபோது ஒரு இடத்தில பாடல் இருந்தே ஆகவேண்டும் என்று கூறி ‘வாழும் காலம்’ பாடலை எஸ்.பி.பி. சார் பாடி பதிவு செய்தோம். என் கனவை நினைவாக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி” என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

“ காதலிக்காக எதையும் செய்வேன் என்று சொல்லும் காதலன், காதல் ரொம்ப எளிமையானது உன் உண்மை காதல் போதும் என்று கூறும் காதலி இவர்களின் உரையாடலாக ஒரு பாட்டு வேண்டும் என்றார் இயக்குநர் மதுமிதா. அதுதான் சையோரா சையோரா’ பாடல் ” என்று கூறினார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

படத்தின் இசைத்தட்டை இயக்குநர் பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன் வெளியிட்டனர். “ இப்படத்தில்  முற்றிலும் இளைஞர்களோடு நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பள்ளி சுற்றுலா போல் அமைந்தது, ஒவ்வொரு முறையும் புதுபுது கலைஞர்களை  அறிமுகம் செய்யும் SP சரணை கண்டு பெருமையாக உள்ளது” என்றார் பாக்யராஜ். “ கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ் மூலம் அறிமுகமான அனைத்து கலைஞர்களும் இன்று உச்சத்தில் உள்ளனர் . அதேபோல் இந்த குழுவினரும் வளர வாழ்த்துகிறேன்” என்று கூறினார் தயாரிப்பாளர் சுவாமிநாதன்.

படத்தில் பணி புரிந்த அனைத்து உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பு மேற்பார்வையாளர்கள் என அனைவரையும் மேடைக்கு அழைத்து பெருமை படுத்தினார்.

“ எனது இந்த குழுவில் இருக்கும் அனைவரது பெற்றோர்க்கும் நன்றி பாராட்டுவதாக கூறினார்” தயாரிப்பாளர் எஸ்.பி. சரண்.